Saturday, January 29, 2011

கருணாநிதி டில்லியில் இறுதி முடிவு


பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், தமிழக முதல்வர் கருணாநிதி இன்று டில்லி வருகிறார். சட்டசபை தேர்தல் குறித்தும், காங்கிரசுடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு
குறித்த இறுதி முடிவும் இந்த பயணத்தில் எடுக்கப்படவுள்ளது.கூட்டணிக்குள் பா.ம.க., வருவது குறித்து தெளிவான சூழல் உருவாகாத காரணத்தினால், காங்கிரசுக்கு எத்தனை கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்பதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டசபையில் 100 சீட், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தி.மு.க.,விடம் வைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., தரப்பில், தனது தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து, பேச்சுவார்த்தை நடத்த துவங்கி விட்டது.இச்சூழ்நிலையில் தி.மு.க., - காங்கிரஸ் இடையில் கூட்டணி ஒருவழியாக இறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையும் ஆரம்பமாக உள்ளது. அதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் இன்றைய டில்லி பயணம் துவக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டில்லிக்கு முதல்வர் வருகிறார். எனினும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனான சந்திப்பு தான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. செவ்வாய்கிழமை உள்துறை மாநாட்டில் கலந்து கொண்டாலும், நாளை முழுவதும் அரசியல் பேச்சுவார்த்தைகள் தான் பெரிய அளவில் இருக்கும் என தெரிகிறது.காங்கிரஸ் தலைவர் சோனியாவை, முதல்வர் கருணாநிதி நாளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் கூட, தொகுதி பங்கீடு எப்படியிருக்கும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்புமாக உள்ளது.காங்கிரஸ் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்கும் என்று தெரிகிறது.

கடந்த 2006ல், தி.மு.க., கூட்டணியில் இருந்த இடதுசாரிகளுக்கு மொத்தம் 23 தொகுதிகள் அளிக்கப்பட்டன. பா.ம.க.,வுக்கு 31 தொகுதிகள் அளிக்கப்பட்டன. அந்த தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இருந்த விடுதலை சிறுத்தைகள் இம்முறை தி.மு.க., கூட்டணியில் உள்ளது. தவிர கொங்குவேளாளர் அமைப்பும் இந்த கூட்டணிக்கு வரவுள்ளது. முஸ்லிம் லீக், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. இவை அனைத்துக்குமே கடந்த முறை இடதுசாரிகளுக்கு அளிக்கப்பட்ட தொகுதிகளை, இம்முறை பங்கு வைக்க தி.மு.க., நினைக்கிறது. கூடுதல் இடம் இல்லை என்பதே தி.மு.க.,வின் எண்ணம்.கூட்டணிக்குள் பா.ம.க., வருவது குறித்து இன்னும் தெளிவாகவில்லை. பா.ம.க., வராதபட்சத்தில் வேண்டுமானால், காங்கிரசின் எண்ணிக்கை உயரலாம். பா.ம.க.,வின் இடத்தை காங்கிரசுக்கு அப்படியே முழுவதுமாக தூக்கியும் தி.மு.க., தராது. காங்கிரஸ் கூடுதலாக போட்டியிட விரும்புவது போல, தி.மு.க.,வும் தனது எண்ணிக்கையை அதிகரிக்க, அந்த பா.ம.க.,வின் பங்கில் தனக்கும் எடுத்து கொள்ளவே அதிக வாய்ப்புள்ளது.

கடந்த முறை காங்கிரசுக்கு 48 தொகுதிகள் அளிக்கப்பட்ட நிலையில், இம்முறை லோக்சபா தொகுதிக்கு குறைந்தது இரண்டு இடங்கள் என்ற ரீதியில், அதிகபட்சம் 100 சீட் கேட்கிறது காங்கிரஸ். இவ்வளவு இடங்களை தி.மு.க., தர முன்வந்து விட்டாலே, கூட்டணி ஆட்சி என்று அர்த்தமாகிறது. அதற்கு தி.மு.க., இணங்கவே இணங்காது என்றே கூறப்படுகிறது.இச்சூழ்நிலையில் தான் சோனியாவும், கருணாநிதியும் சந்திக்கப் போகின்றனர். தமிழகத்தில் கீழ்மட்ட காங்கிரஸ் தொண்டர்கள் தி.மு.க.,வுடன் சரிவர நட்புடன் இல்லை என்று கூறப்படுகிறது. தமிழக ஆட்சியிலும் அமைச்சர் பதவிகள் அளிக்கப்படவில்லை.

இதனால், தமிழக காங்கிரசை திருப்திபடுத்தும் வகையில் கூடுதல் இடங்களை அளித்து, தேர்தலுக்கு முன்பே கூட்டணி ஆட்சியென அறிவித்தால் சரியாக இருக்கும் என்றும் அந்த கட்சியின் தமிழக தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த தேர்தலில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, இறுதியாகவே காங்கிரசுடன் பேச்சுவார்த்தையை தி.மு.க., நடத்தியது. ஆனால், இம்முறை தனது முதல் மரியாதையை அளிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க., தனது தேர்தல் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது. இதனால் காங்கிரசை திருப்திபடுத்த தி.மு.க., எந்தளவு முயற்சிகள் எடுக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு முதல்வர் கருணாநிதியின் டில்லி பயணத்தில் கிளம்பியுள்ளது

No comments:

Post a Comment