Saturday, January 22, 2011

கடைசி மோதல்


செஞ்சுரியன்: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று செஞ்சுரியனில் நடக்கிறது. இதில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எழுச்சி கண்டால், கோப்பை வென்று வரலாறு படைக்கலாம்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1
என் முன்னிலையில் இருந்தது.
கோஹ்லி ஆறுதல்:
போர்ட் எலிசபெத்தில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி சொதப்பியது. ரோகித் சர்மா(1), யுவராஜ்(12), ரெய்னா(20), தோனி(2), யூசுப் பதான்(2) ஏமாற்றினர். துணிச்சலாக போராடிய விராத் கோஹ்லி அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இந்திய அணி 32.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ஆட்டத்தை தொடர முடியாததால், "டக்வொர்த்- லீவிஸ்' விதிமுறைப்படி இந்திய அணி, தென் ஆப்ரிக்காவிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொடர் 2-2 என சம நிலையை எட்டியது. <விராத் கோஹ்லி 87 ரன்களுடன் அவுட்டகாமல் இருந்தார்.
கடைசி சவால்:
இன்று, இரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, செஞ்சுரியன், சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் பகல் ஆட்டமாக நடக்க உள்ளது.
பொறுப்பற்ற பேட்டிங்:
இத்தொடரில், இந்திய அணியின் பேட்டிங் கவலை அளிக்கிறது. முரளி விஜய் (18, 3 போட்டி), ரோகித் சர்மா (44), தோனி (70), யூசுப் பதான் (61, 2 போட்டி) யுவராஜ் (83) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். விராத் கோஹ்லி (191 ரன்) மட்டும் தான் நம்பிக்கை அளிக்கிறார். ரெய்னா இதுவரை 100 ரன்கள் எடுத்துள்ளார். இன்று பேட்டிங் படை எழச்சி பெற்றால் மட்டுமே, தொடரை கைப்பற்றும் கனவு நனவாகும்.
சுமார் பவுலிங்:
 மூன்றாவது போட்டியில் அசத்தலாக செயல்பட்ட இந்திய பவுலர்கள், போர்ட் எலிசபெத்தில் லேசாக சோர்ந்ததால், போட்டியின் வெற்றி வாய்ப்பு கைவிட்டு போனது. இத்தொடரில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் (8) வீழ்த்திய முனாப் படேல், ஜாகிர் கானுடன் (7) இணைந்து, 3 விக்கெட் மட்டும் சாய்த்த "சீனியர்' ஆஷிஸ் நெஹ்ரா சாதிக்க வேண்டும். சுழற் பந்து வீச்சில் (4 விக்.,) ஹர்பஜன், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
மீண்டும் அபாரம்:
தென் ஆப்ரிக்க அணி தரப்பில் அதிக ரன் குவித்த டுமினி (209), கேப்டன் ஸ்மித் (149), துவக்க வீரர் ஆம்லா (134), டிவிலியர்ஸ் (103) ஆகியோர் அபாரமான பார்மில் உள்ளனர். தவிர, டு பிளசிஸ், பீட்டர்சனும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர்.
தொடரும் வேகம்:
தென் ஆப்ரிக்க அணியின் பலம் வேகப்பந்து வீச்சுதான். இதுவரை 11 விக்கெட் வீழ்த்திய டிசோட்சபே, மார்கல் (8), ஸ்டைன் (6) ஆகியோர் மிரட்டலான பார்மில் உள்ளனர். சுழலில் போத்தா, பீட்டர்சன், டுமினியும் அவ்வப்போது அசத்துவது அணியின் வெற்றிக்கு உதவியாக உள்ளது.
பைனல் போன்ற இன்றைய போட்டியில், சாதிக்க தோனி தலைமையிலான இந்திய அணியும், சொந்த மண்ணில் சோகத்தை தவிர்க்க, தென் ஆப்ரிக்க அணியும் போராடும் என்பதால், கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம்.

தோனி ராசி தொடருமா?
ஒருநாள் அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின், அன்னிய மண்ணில் நடந்த இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி தான் கோப்பை வென்றுள்ளது. இலங்கையில் இரு முறை 3-2, 4-1 (2008-2009), நியூசிலாந்தில் 3-1 (2009), வெஸ்ட் இண்டீசில் 2-1 (2009) என, தொடர்ந்து நான்கு தொடர்களில் வெற்றிக் கோப்பையுடன் திரும்பியது. இம்முறை, இந்த ராசி தொடருமா?
இம்மைதானத்தில் இதுவரை...
இந்தியாவுக்குக் சாதகமான மைதானமாக செஞ்சுரியனை குறிப்பிடலாம். இங்கு பங்கேற்ற 9 போட்டிகளில் 4ல் வெற்றி, 4ல் தோல்வியடைந்தது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. இதில் தென் ஆப்ரிக்காவுடன் பங்கேற்ற 3 போட்டியில் 2ல் வென்றுள்ளது.
* இந்தியா அதிகபட்சமாக 276/4 (பாகிஸ்தான், 2003) ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி அதிகமாக 392/6 (பாகிஸ்தான், 2007) ரன்கள் எடுத்துள்ளது.(dinamalar)

No comments:

Post a Comment