Saturday, January 15, 2011

கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவேன்: விஜயகாந்த் ஆவேசம்


 ""வரும் சட்டசபை தேர்தலில் எனது தொண்டர்கள் விரும்பினால் அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து போட்டியிடுவேன்,'' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது
: கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்திராவிற்கு மறுவாழ்வு கொடுப்போம் என்று பேசியதால் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி. அவருடன் காங்., கூட்டணி வைத்திருப்பது வேதனைக்குரியது. உழைத்தால் தான் எதையும் பெற முடியும். உழைக்காமலேயே சொத்துகளை குவித்து வைத்துள்ள தி.மு.க.,வினர் ஐந்து மாதங்கள் கழித்து கடும் இன்னல்களை சந்திக்கவுள்ளனர். இந்த தேர்தலில் தொகுதிக்கு 25 கோடி ரூபாய் வரை செலவு செய்து வெற்றி பெற நினைக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் நம்முடைய வரிப் பணத்தை வாங்கி கொண்டு எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் கருணாநிதி ஆட்சியில், வெங்காயம் என்ன விலைக்கு கொடுக்கப்படுகிறது. எதற்கெடுத்தாலும் இலவசம் வழங்கும் கருணாநிதியால் நமக்கு இப்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பில்லை என்றால் லோக்சபா கூட்டு குழு விசாரணைக்கு ஏன் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது.

நான் கட்சி ஆரம்பித்தப் பின் தான் கருணாநிதியின் மறுப் பக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. நான் எந்த கட்சியிலிருந்தும் வரவில்லை. சுய மரியாதை இயக்கத்திலிருந்து வந்த கருணாநிதி மஞ்சள் துண்டும், சிவப்புக் கல் பதித்த மோதிரமும் போட்டிருப்பது ஏன். ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இருந்த டாஸ்மாக் கடையில் தற்போது 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதால், இலவசங்களை தாராளமாக வாரி வழங்குகின்றனர். பொங்கல் விழாவிற்கு அனைவரின் வீடுகளிலும் எண்ணெய் விளக்கேற்றினால் மீண்டும் தாங்களே ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கருணாநிதி பகல் கனவு காண்கிறார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும். ஊருக்கெல்லாம் தமிழ் பெயர் வைக்கும் கருணாநிதி, தன் மகன் ஸ்டாலினுக்கு ஏன் பெயர் மாற்றம் செய்யவில்லை. கருணாநிதியிடம் ஒரே ஒரு முன்னேற்றம் என்றால் முன்பெல்லாம் மத்திய அரசிற்கு கடிதம் எழுதுவார், தற்போது தந்தி அனுப்புகிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தருவதற்கு பதிலாக லஞ்சம், ஊழலை ஒழிப்போம். படித்தவருக்கு மட்டுமின்றி படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்போம். அன்னை மொழியைக் காப்போம். அனைத்து மொழியையும் கற்க வழி செய்வோம். மின் வசதி இல்லாமல் சிரமப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக மோட்டார் வழங்கி பயனில்லை. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பொது மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

காவல் துறையினரை இந்த ஆட்சி ஏவல் துறையாகப் பயன்படுத்துகிறது. போலீசார்கள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் ஆட்சியாளர் களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. வரும் சட்டசபை தேர்தலில் தொண்டர்கள் நினைத்தால், அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்று வெற்றிப் பெறுவேன். பன்றியோடு சேர்ந்த கன்று போல இன்று தமிழகத்தில் காங்., கூட்டணி நிலை உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க., விற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர். இவ்வாறு தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் பேசினார்.
(dinamalar)

No comments:

Post a Comment