Sunday, January 16, 2011

விஜயகாந்த் அறைகூவல் அமைச்சர் மவுனம்: தி.மு.க.,வினர் "அப்செட்'


விழுப்புரத்தில் நேற்று முன்தினம் தே.மு.தி.க., சார்பில் நடந்த பொங்கல் விழாவில், கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். திடீரென ஏற்பாடு செய்த விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை கண்டு மகிழ்ச்சியடைந்தார். உற்சாகத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்று வெற்றி பெற தயார் என்று சவால் விடுத்தார்.இது
விழுப்புரம் தி.மு.க.,வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறிவிப்பு, கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகத்தான். நிச்சயம் போட்டியிடமாட்டார். அது ரகசியம் என்கின்றனர் தி.மு.க.,வினர்.

கடந்த தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் தே.மு.தி.க., 22 ஆயிரம் ஓட்டுகள் பெற்றுள்ளதால், விஜயகாந்த் களமிறங்கினால் போட்டி கடுமையாக இருக்கும். கடந்த 91ம் ஆண்டு தேர்தலில் கடலூரை சேர்ந்த அ.தி.மு.க., ஜனார்த்தனன், விழுப்புரத்தில் பொன்முடியை எதிர்த்து வெற்றி பெற்றதும், கடந்த இரண்டு தேர்தல்களிலும் தி.மு.க., வெற்றி வித்தியாசம் 10 ஆயிரத்தை தாண்டவில்லை என்பதும், ஆளுங்கட்சியினரை தற்போது யோசிக்க வைத்துள்ளது.
உள்ளூர் வேட்பாளரை சரிசெய்துவிடலாம். புதிய வேட்பாளர் நின்றால் அவரது பலம், பலவீனத்தை அறிவது கடினம் என்பதால் தி.மு.க.,வினர் கலக்கமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் அமைச்சர் பொன்முடி பங்கேற்ற விழாக்களில், வழக்கமான அரசியல் பேச்சை தவிர்த்தார். இரவு நடந்த மருதம் பொங்கல் விழாவில் பேசுகையில், இந்தாண்டு புதிதாக வந்து சிலர் விழுப்புரத்தில் பொங்கல் விழா கொண்டாடுகின்றனர். நான் அப்படியில்லை. ஆண்டுதோறும் பொங்கல் விழாவில் உங்களுடன், மக்களோடு மக்களாக இருந்து பழகி வருபவன். உங்களில் ஒருவனாக எப்போதும் இருப்பவன் என்பதை நீங்கள் (மக்கள்) மறந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டார்.

அன்றைய விழா எதிலும், விஜயகாந்த் குறித்து நேரடியாக அமைச்சர் விமர்சித்து பேசாதது, கட்சித் தொண்டர்களிடம் ஏமாற்றத்தை அளித்தது.சமீப காலமாக, அனைத்து விழாக்களிலும் அமைச்சர் பொன்முடி பேசுகையில், கலைஞர் வீடு கட்டும் திட்டம், இலவச காப்பீடு, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இலவச திட்டங்கள் தொடர மீண்டும் தி.மு.க., ஆட்சி வர வேண்டும். அதற்கு பொதுமக்கள் (அரசு இனாம் பெற்றவர்கள்) மனசாட்சிப்படி ஓட்டுப்போட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.(dinamalar)

No comments:

Post a Comment