Sunday, January 23, 2011

யூசுப் பதான் அதிரடி சதம் வீண்

 பரபரப்பான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது. யூசுப் பதானின் அதிரடி சதம் வீணானது. தொடரை 3-2 என வென்ற தென் ஆப்ரிக்கா, கோப்பை கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் 2-2 என சமமாக இருந்தன. இந்நிலையில்

ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று செஞ்சுரியனில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார்.
ஸ்மித் ஏமாற்றம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், ஆம்லா துவக்கம் கொடுத்தனர். ஸ்மித் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். பின் ஆம்லாவுடன், இணைந்த வான் விக் (56), சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3வது அரைசதம் கடந்து வெளியேறினார்.
ஆம்லா அபாரம்:
அடுத்து வந்த டிவிலியர்ஸ் (11) நிலைக்கவில்லை. மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆம்லா. ஜாகிர் கான் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசிய ஆம்லா, ஹர்பஜன் பந்திலும் விளாசினார். ஆம்லா (116) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 7வது சதம் கடந்தார்.
மழை குறுக்கீடு:
தென் ஆப்ரிக்க அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. பின் 46 ஓவர்களாக மாற்றப்பட்டு போட்டி துவங்கியது. இம்முறை இந்திய வீரர்கள், விக்கெட் மழை பொழிந்தனர். டுமினி (35), டு பிளசிஸ் (8) தாக்குப்பிடிக்கவில்லை. போத்தாவும் 2 ரன்னில் திரும்பினார்.
பீட்டர்சன் (4), ஸ்டைன் (0), மார்கல்(0) மூன்று வீரர்களும், ஜாகிர் கானின் ஒரே ஓவரில் அவுட்டாகினர். தென் ஆப்ரிக்க அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் முனாப் படேல் 3, ஜாகிர் கான், யுவராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
விக்., சட, சட...
"டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி மாற்றப்பட்ட (46 ஓவரில் 268 ரன்கள்) கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, வழக்கம் போல "டாப் ஆர்டர்' வீரர்கள் சொதப்பினர். உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் இருந்த ரோகித் சர்மா (5), கடந்த போட்டியில் அசத்திய விராத் கோஹ்லி (2) ஏமாற்றினர். தோனி 5, யுவராஜ் 8 என, ஒற்றை இலக்க ரன்னில் வந்த வேகத்திலேயே திரும்பினர்.
பார்த்திவ் ஆறுதல்:
இளம் பார்த்திவ் படேல் சற்று ஆறுதலாக ரன்கள் சேர்த்தார். ஸ்டைன், டிசோட்சபே, மார்கல் என அனைவரது பந்திலும் பவுண்டரிகள் விளாசினார். இவர் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் வந்த ஹர்பஜன் 13 ரன்கள் எடுத்தார். பியுஸ் சாவ்லாவும் (8) வாய்ப்பை வீணாக்கினார்.
அதிரடி சதம்:
இந்திய அணி 119 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்து திணறியது. இந்நிலையில் ஜாகிர் கானுடன் சேர்ந்த யூசுப் பதான், அதிரடியாக ரன்கள் குவித்தார். மார்கலில் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசிய இவர், போத்தாவின் ஓவரில் 2 சிக்சர் விளாசினார். தொடர்ந்து டிசோட்சபே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்து, 68 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
இது சர்வதேச ஒருநாள் அரங்கில் 2வது சதம் ஆகும். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், யூசுப் பதான் 105 ரன்களுக்கு (8 சிக்சர், 8 பவுண்டரி) அவுட்டாக, இந்திய அணியின் வெற்றிக் கனவு சிதைந்தது.
கடைசியில் ஜாகிர் கானும் (24) கைவிட, இந்திய அணி 40.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்காவில் மார்கல் 4, ஸ்டைன், டிசோட்சபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஆம்லா தட்டிச் சென்றார்.
இதையடுத்து 3-2 என்ற கணக்கில் தொடரை வென்ற தென் ஆப்ரிக்க அணி, கோப்பை வென்று அசத்தியது. தொடர் நாயகன் விருது மார்கலுக்கு வழங்கப்பட்டது.

புரியாத கணக்கு
கிரிக்கெட்டில் மழை பெய்யும் போதெல்லாம், கொண்டு வரப்படும் "டக்வொர்த் லீவிஸ்' விதி, எப்படி என்பதே புரியாத கணக்காக உள்ளது. நேற்றும் அப்படித்தான் நடந்தது. தென்ஆப்ரிக்கா 46 ஓவரில் 250/9 ரன்கள் எடுத்தது. ஆனால் இதே 46 ஓவரில் இந்தியாவுக்கு இலக்காக 268 ரன்கள் என மாற்றப்பட்டது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

தோனியின் தவறான முடிவு
நேற்று "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் பீல்டிங் செய்வதென்று தவறாக முடிவெடுத்தார். இதனைப் பயன்படுத்திய தென்ஆப்ரிக்க வீரர்கள் ரன்மழை பொழிந்தனர். இதேபோல பேட்டிங் வரிசையில், இவர் முன்னதாக களமிறங்கியதும் பலன் தரவில்லை. இதனால் தென் ஆப்ரிக்க மண்ணில் முதன் முறையாக, ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு கைநழுவியது.

டிசோட்சபே அதிகம்
இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்ரிக்காவின் டிசோட்சபே அதிகபட்சமாக 13 விக்கெட் கைப்பற்றினார்.
5 போட்டியில் அதிக விக்., வீழ்த்திய "டாப்-5' வீரர்கள்:
வீரர்/அணி    விக்.,
டிசோட்சபே(தெ.ஆப்.,)    13
மார்கல்(தெ.ஆப்.,)    12
முனாப் படேல் (இந்தியா)    11
ஜாகிர் கான் (இந்தியா)    9
ஸ்டைன் (தெ.ஆப்.,)    8

ஆம்லா முதல்வன்
பேட்டிங்கின் முதல் இரு இடங்களில் தென் ஆப்ரிக்க வீரர்கள் ஆம்லா (250), டுமினி (244) உள்ளனர். கடந்த 5 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த "டாப்-5' வீரர்கள் விபரம்:
வீரர்/அணி    ரன்கள்
ஆம்லா (தெ.ஆப்.,)    250
டுமினி (தெ.ஆப்.,)    244
கோஹ்லி (இந்தியா)    193
யூசுப் பதான் (இந்தியா)    166
ஸ்மித் (தெ.ஆப்.,)    156

ஸ்கோர் போர்டு
தென் ஆப்ரிக்கா
ஸ்மித்(கே)யூசுப்(ப)ஜாகிர்    7(11)
ஆம்லா-அவுட் இல்லை-    116(132)
வான் விக்(கே)+(ப)யுவராஜ்    56(63)
டிவிலியர்ஸ்(ஸ்டம்டு)தோனி(ப)யுவராஜ்    11(12)
டுமினி(கே)+(ப)முனாப்    35(44)
பிளசிஸ்(ப)முனாப்    8(6)
போத்தா(கே)தோனி(ப)முனாப்    2(2)
பீட்டர்சன்(ப)ஜாகிர்    4(2)
ஸ்டைன்-ரன் அவுட்(தோனி)    0(1)
மார்கல்-ரன் அவுட்(தோனி)    0(2)
டிசோட்சபே-அவுட் இல்லை-    0(1)
உதிரிகள்    11
மொத்தம் (46 ஓவரில் 9 விக்.,)    250
விக்கெட் வீழ்ச்சி: 1-16(ஸ்மித்), 1-113(வான் விக்), 3-129(டிவிலியர்ஸ்), 4-231(டுமினி), 5-242(டு பிளசிஸ்), 6-244(போத்தா), 7-250(பீட்டர்சன்), 8-250(ஸ்டைன்), 9-250(மார்கல்).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 9-1-47-2, முனாப் படேல் 8-0-50-3, பியுஸ் சாவ்லா 7-0-32-0, ஹர்பஜன் 8-0-33-0, யூசுப் பதான் 2-0-10-0, யுவராஜ் சிங் 8-0-45-2, ரோகித் சர்மா 2-0-14-0, ரெய்னா 2-0-13-0.
இந்தியா
பார்த்திவ்(கே)பிளசிஸ்(ப)மார்கல்    38(34)
ரோகித்(ப)டிசோட்சபே    5(8)
கோஹ்லி(கே)டிவிலியர்ஸ்(ப)மார்கல்    2(6)
தோனி(கே)ஸ்மித்(ப)மார்கல்    5(10)
யுவராஜ்(கே)டுமினி(ப)ஸ்டைன்    8(14)
ரெய்னா(கே)மார்கல்(ப)ஸ்டைன்    11(8)   
யூசுப்(கே)பிளசிஸ்(ப)மார்கல்    105(70)
ஹர்பஜன்(கே)டுமினி(ப)போத்தா    13(16)
சாவ்லா(ப)பீட்டர்சன்    8(11)
ஜாகிர்(கே)மார்கல்(ப)டிசோட்சபே    24(58)
முனாப்-அவுட் இல்லை-    4(9)
உதிரிகள்        11
மொத்தம் (40.2 ஓவரில் ஆல் அவுட்)    234
விக்கெட் வீழ்ச்சி: 1-21(ரோகித் சர்மா), 2-31(விராத் கோஹ்லி), 3-45(தோனி), 4-60(பார்த்திவ் படேல்), 5-60(யுவராஜ்), 6-74(ரெய்னா), 7-98(ஹர்பஜன்), 8-119(பியுஸ் சாவ்லா), 9-219(யூசுப் பதான்), 10-234(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: ஸ்டைன் 9-1-32-2, டிசோட்சபே 7.2-0-57-2, மார்கல் 8-0-52-4, ஜோகன் போத்தா 8-0-33-1, பீட்டர்சன் 7-0-45-1, டு பிளசிஸ் 1-0-13-0.(DINAMALAR)

No comments:

Post a Comment