Thursday, January 27, 2011

விழிபிதுங்கும் ஆளும்கட்சி


தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அரசுத் துறைகளில் பல்வேறு பிரிவினரின் போராட்டங்கள், எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் என, தேர்தலுக்கு முந்தைய பரபரப்புகள் துவங்கியுள்ளன.

தி.மு.க., அரசின் பதவிக்காலம் இன்னும் மூன்று மாதங்களில் முடிவுக்கு வருகிறது. அரசியல் கட்சிகள் தங்களின் வெற்றிக்காக கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. ஆளும் கட்சியினர் ஆங்காங்கே விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தி, நான்கரை ஆண்டு சாதனைகளை விளக்கி வருகின்றனர்.அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில், காஸ் அடுப்பு, வீட்டுமனை பட்டா, இலவச கலர் "டிவி' பல்வேறு திட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என, பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் முயற்சிகள் நடந்து வருகின்றன.மக்கள் மத்தியில் ஆளும்கட்சிக்கு எதிராக கிளம்பியுள்ள, "ஸ்பெக்ட்ரம்' ஊழல் குறித்து, "உண்மை நிலை என்ன' என்று விளக்கக் கூட்டங்களும் நடந்து வருகின்றன.எதிர்க்கட்சிகள் தரப்பில், பகுதிவாரியாக அடிப்படை வசதி கேட்டு போராட்டம் நடத்துதல், விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் என, கண்டன பொதுக்கூட்டங்கள் நாள்தோறும் அரசுக்கு எதிராக தொடர்ந்து வருகின்றன.

விவசாயிகள் தரப்பில், "கள்' போராட்டம் ஒரு புறம், போலீசாரை புரட்டி எடுத்து வருகிறது.ஆளும் தி.மு.க.,வுக்கு பெரும் பலமாக நம்பப்படும் அரசு ஊழியர்கள், இம்முறை, பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளனர்; தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர்.அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வில் உள்ள குறைபாடு, லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களால் ஏற்பட்டுள்ள பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை; புதிய ஓய்வூதிய திட்டம் வாபஸ், தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரமாக்குதல் என பல கோரிக்கைகள் முன்வைத்து, பல்வேறு அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

கடந்த, 24ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்திய ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம், வரும், 29ம் தேதி விருதுநகரில் மாநில அளவிலான பேரணி நடத்த உள்ளது. வருவாய்துறை அலுவலர் சங்கம், நாளை சென்னையில் தர்ணா போராட்டம், வரும் பிப்., 1ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளது.தமிழக அரசு ஊழியர் சங்கம் வரும், 2ம் தேதி மறியல் போராட்டம், தொடர்ந்து 10ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், வரும் 29ம் தேதி, சென்னை எழும்பூரில் கோரிக்கை பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.அரசு அலுவலர் மற்றும் ஊழியர்களின் இதுபோன்ற தொடர் போராட்ட அறிவிப்புகள், ஆளும்கட்சி தரப்பை பெரிதும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள், அண்மையில் பெற்ற சம்பள உயர்வு போன்ற அறிவிப்புகளால் சற்று நிம்மதியாக உள்ளன. இருப்பினும், தேர்வு நெருங்கி வரும் நிலையில், பாடங்கள் முடிக்க வேண்டிய காலகட்டத்தில், அவர்களை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவது, பெரும் அதிருப்தியையும், நிம்மதியற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தகர்கள் பாதிப்பு: மின் தட்டுப்பாடு, நூல் விலை பிரச்னை, மணல் அள்ளும் பிரச்னை, கட்டுமான பொருட்கள் கடும் விலை உயர்வு என, அனைத்து விதங்களிலும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நூறு நாள் வேலை திட்டம் காரணமாக, கிராமங்களில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலைச் சந்திக்க உள்ள ஆளும் கட்சி, எவ்விதமாக இப்பிரச்னைகளை கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.
(dinamalar)

No comments:

Post a Comment