Saturday, January 29, 2011

இளங்கோவன் அந்தர்பல்டி


தி.மு.க., கூட்டணி எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் அடித்த திடீர், "அந்தர் பல்டி'யால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இளங்கோவனின் அடுத்தடுத்த சரவெடி தாக்குதல்களால்,
நொந்து போயிருந்த ஆளுங்கட்சி நிம்மதியடைந்துள்ளது.

தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்வர் கருணாநிதிக்கு எதிராகவும் எதிர்கட்சிகள் கூட முன்வைக்கத் தயங்கும் விமர்சனங்களை முன்வைத்து தொடர் பரபரப்பு ஏற்படுத்தியவர், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன்.கூட்டணிக்கு வேட்டு வைப்பது போன்ற அவரது விமர்சனங்களை காங்கிரஸ் தலைமையும் கண்டு கொள்ளாமல் இருந்ததால், தி.மு.க., தலைமை அதிர்ச்சியடைந்திருந்தது. இந்த விமர்சனங்களால், தி.மு.க., கூட்டணியை விரும்பாத காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் இளங்கோவனின் விசிறிகளாக மாறினர். இளங்கோவன் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் பரபரப்பு தொடர்ந்தது.ஸ்பெக்ட்ரம், "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்னை போன்றவற்றில் தி.மு.க.,வை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்த இளங்கோவன், "அக்கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தால் சட்டசபை தேர்தலில் காங்., தோற்கும்' என பொதுக்கூட்டங்களிலும், நிருபர்கள் சந்திப்பிலும் தெரிவித்து வந்தார்.

இன்னும் ஒருபடி மேலே போய், தி.மு.க., ஆட்சியில் நடக்கும் ஊழல்களுக்கெல்லாம், காங்கிரசும் பொறுப்பேற்க வேண்டுமென்பதால், கூட்டணி தொடரக்கூடாது என வலியுறுத்தினார். "தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் துணையோடு, ஆளுங்கட்சியினரும், அவர்களது குடும்பத்தினரும் தனியார் நிலங்களை அபகரித்துள்ளனர். அதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது. அதை நேரம் வரும்போது வெளியிடுவேன்' என்றெல்லாம் வீர வசனம் பேசினார்."ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்தல் நடக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை' என ஆளுங்கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.அதோடு, தமிழக அரசின் கனவுத் திட்டமான கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தையும் இளங்கோவன் கடுமையாக விமர்சித்தார்.

"மத்திய அரசின் இந்திரா வீட்டு வசதி திட்டத்தை மறைத்து, அதற்கு தரப்படும் நிதியில் இருந்து தமிழகத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், எந்தப்பயனும் இல்லை. இத்திட்டம் மக்களை ஏமாற்றும் செயல்' என்றார் இளங்கோவன்.பேச்சு, பேட்டி, அறிக்கை மூலமாக ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுத்த இளங்கோவன், சோனியாவை சந்தித்து பேசியபோது, "தி.மு.க., கூட்டணி தொடரக்கூடாது என்பது தான் தொண்டர்களின் விருப்பம்' என கூட்டணிக்கு நேரடியாக வேட்டு வைத்தார்."இளங்கோவனை அடக்கி வைக்க வேண்டும்' என பலமுறை புகார் அனுப்பி ஓய்ந்த தி.மு.க., அவருக்கு பதில் தராமல், "கூட்டணி தர்மத்தோடு' அமைதி காத்தது. சட்டசபை தேர்தல் நெருங்கும்வேளையிலாவது இளங்கோவனின் வாய்க்கு பூட்டு போட வேண்டும் என டி.ஆர்.பாலு மூலமாக கடந்த மாதம் வலியுறுத்தப்பட்டது.இதற்கு ஆதாரமாக, இளங்கோவன் பேசிய பேச்சுகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆதாரத்தோடு சோனியாவிடம் அளிக்கப்பட்டது.

சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., கூட்டணி தொடரும் என முடிவெடுத்த காங்கிரஸ் மேலிடம், இளங்கோவனை அழைத்து தி.மு.க., விமர்சனத்தை தவிர்க்கும்படி கண்டித்தது.இந்த கண்டிப்புக்கு பின், இளங்கோவனின் சுருதி குறைந்து போனது. சமீபத்தில், தூத்துக்குடியில் மத்திய அமைச்சர் வாசன் தலைமையில் நடந்த, திருமண விழாவில் பங்கேற்ற இளங்கோவன், அங்கு தி.மு.க., கூட்டணியை பற்றி எதுவும் விமர்சிக்கவில்லை. மாறாக, கூட்டணி குறித்து தலைமை ஒரு முடிவு எடுத்துவிட்டதால், அதை ஏற்று செயல்படப்போவதாகவும் அறிவித்தார். 'சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க., ஆட்சி அமைத்தாலும், அமைச்சரவையில் காங்கிரசிற்கு இடம் தரவேண்டும்' என வேண்டுகோள் மட்டும் விடுத்தார்.இளங்கோவனின் இந்த, 'அந்தர்பல்டி'யால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்; ஆளுங்கட்சி ஆனந்தமடைந்துள்ளது.

இது குறித்து இளங்கோவன் ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:"தி.மு.க., கூட்டணி வேண்டாம் என்ற தொண்டர்களின் உணர்வைத்தான் நான் பிரதிபலித்தேன். மாறாக, அது எனது குரல் அல்ல' என இளங்கோவன் பல்டி அடித்து சரணாகதி அடைந்தது வேதனையளிக்கிறது. பின்னர், எதற்கு தி.மு.க.,வை விமர்சித்து வீரமாக பேசவேண்டும். கூட்டணி குறித்து கட்சி மேலிடம் எடுத்த முடிவை ஏற்று செயல்படுவதாக, திடீர் ஞானயோதயம் இவருக்கு எப்படி வந்தது?கூட்டணி குறித்து தொண்டர்கள் யாரும் தங்களது கருத்தை மாற்றிக் கொண்டது போல தெரியவில்லை. கட்சி மேலிடம் தன் மீது நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்ற பயத்தில், தி.மு.க., கூட்டணியை ஏற்பதாக இளங்கோவன் கூறியுள்ளார். இவ்வாறு மாற்றி மாற்றி பேசும் இவரை இனி மக்கள் எப்படி நம்புவார்கள்? அவருக்கு கிடைத்திருந்த, "இமேஜ்' இந்த பல்டியால் அதலபாதாளத்திற்கு போய்விட்டது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment