Sunday, January 30, 2011

மக்களுக்கு உழைக்கும் கட்சிக்கே ஓட்டுப் போட வேண்டும்: விஜயகாந்த்


 ""சுட்டுப்போட்டாலும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஓட்டுப்போடக்கூடாது. நாடு முன்னேறவும், மக்கள் வாழ்வு வளம் பெறவும் உழைக்கும் தகுதியுள்ள கட்சிக்கே ஓட்டளிக்க வேண்டும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 1,000 பேர், பல கட்சிகளில் இருந்து விலகி தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நேற்று இணைந்தனர். கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகத்தில் நடந்த இவ்விழாவில் மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி, விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் பங்கேற்றனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று விஜயகாந்த் பேசியதாவது:முதியோர் உதவித்தொகை பெற, 2009ம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்டோருக்கு இதுவரை பணம் வழங்கவில்லை. தேர்தலையொட்டி, ஏப்ரல் மாதத்தில் அந்த பணத்தை வழங்க திட்டமிட்டுள்ளனர். காவேரி - கங்கை நதிநீர் இணைப்புக்கோ, முல்லை பெரியாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், பாலாறு பிரச்னைக்கோ, விலைவாசியை குறைக்கவோ, கச்சத்தீவை மீட்கவோ முதல்வர் கருணாநிதி டில்லி செல்லவில்லை. மூன்று நாட்கள் தங்கி, தொகுதி பங்கீடு செய்வதற்கே சென்றுள்ளார். மக்கள் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுக்காத இதுபோன்ற அரசியல்வாதிகளை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறோம்.

நல்லநேரம் பார்ப்பது, சாமி கும்பிடுவது மூடநம்பிக்கை என பகுத்தறிவு பேசிய முதல்வர் கருணாநிதி, தனது மகனுக்கு 60வது திருமணம் நடத்துகிறார். அவரும், மாலையும், குங்குமப் பொட்டும் வைத்து "போஸ்' கொடுக்கிறார். ஜென்ம நட்சத்திரமும், நவமியும் சேர்த்துவந்ததால், முன்கூட்டியே இதற்காக பூஜை நடத்தியுள்ளனர்.இதையெல்லாம் சொன்னால், விஜயகாந்த் அறிவுக்கெட்டவன்; முட்டாள் என்கின்றனர். குடித்து விட்டு பேசுவதாக கூறுகின்றனர். குடித்துவிட்டு உளறுபவன், கணக்கு வழக்குகளை ஒழுங்காக சொல்வானா. எல்லா ஜாதியிலும் ஏழைகள் உள்ளனர். அவர்கள் அனைத்து வசதிகளும் பெற்று சிரித்து வாழவேண்டும் என்பது என் எண்ணம்.

நீதிபதிகள் இப்போதுதான் கண்விழித்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த தவறுகளை சுப்ரீம்கோர்ட் நீதிபதி கங்குலி, வெளிக்கொண்டுவரவேண்டும் என அவரது காலைப் பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். அரசு சார்பில் வழங்கப்படும் இலவசங்களை பிப்ரவரி மாதத்திற்கு பிறகு வினியோகிக்க அனுமதிக்கக் கூடாது என, தேர்தல் கமிஷனரையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். தொலைத்தொடர்பு ஒதுக்கீடு முறையை மாற்றப்போவதாக அமைச்சர் கபில் சிபல் கூறுகிறார். முன்பு தப்பு செய்தவர் யார் என்பதை மறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கின்றனர். கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரமுடியாது என அமைச்சர் பிரணாபும், அதை வெளிக்கொண்டு வரவேண்டும் என ராகுலும் கூறுகின்றனர். ஒரே கட்சியை சேர்ந்தவர்களுக்குள் முரண்பாடு இருக்கிறது.

தி.மு.க.,வை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என்ற இளங்கோவன், இப்போது சீட் அதிகம் கேட்பது எங்கள் கடமை, அதை கொடுப்பது அவர்கள் உரிமை என்கிறார். காங்கிரசை பற்றி பேசினால், வருமான வரித்துறையை வைத்து ரெய்டு நடத்துவார்கள். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. சுட்டுப்போட்டாலும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஓட்டுப் போடக்கூடாது. அவர்கள் கொடுக்கும் பணத்தை மக்கள் தயங்காமல் வாங்கிக்கொள்ளவேண்டும். நாடு முன்னேறவும், மக்கள் வாழ்வு வளம் பெறவும் உழைக்கும் தகுதியுள்ள கட்சிக்கே ஓட்டளிக்க வேண்டும். ஆயிரம் பொய் சொல்லியாவது நல்ல அரசு அமைக்க மக்கள் ஒத்துழைக்கவேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார். ஆனால், தேர்தல் கூட்டணி பற்றி அவர் பேசவில்லை.(dinamalar)

No comments:

Post a Comment