Thursday, January 27, 2011

அமெரிக்காவுக்கு திடீரென கிளம்பிப் போன ராஜபக்சே திரும்பி வந்தார்

அமெரிக்காவுக்கு திடுதிப்பென கிளம்பிச் சென்ற இலங்கை சர்வாதிகாரி மகிந்தா ராஜபக்சே இன்று கொழும்பு திரும்பி விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 18ம் தேதி திடீரென அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போனார் ராஜபக்சே. ஹூஸ்டனில் அவர் தங்கியிருந்தார். தனிப்பட்ட பயணம் இது என்றனர் இதை. ஜோசியக்காரர்கள் நேரம் சரியில்லை, நாட்டை விட்டு வெளியே சில நாட்கள் இருந்தால் நல்லது என்று கூறியதால் ராஜபக்சே அமெரிக்காவுக்கு ஓடியதாக செய்திகள் கூறின.

அதேசமயம், ராஜபக்சேவுக்கு புற்றுநோய் வந்திருக்கிறது. இதற்காக அவர் ஹூஸ்டனில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றும் செய்திகள் கூறின.

ராஜபக்சே எதற்காக அமெரிக்கா போனார் என்பதை அங்குள்ள எதிர்க்கட்சிகளும் கேட்டன. ஆனால் அரசுத் தரப்பு எதற்கும் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில், ராஜபக்சே மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் அமெரிக்கர்கள் அமைப்புகள் திரண்டு சென்று அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தன. இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கு முன்பு தமிழ் அமைப்புகள் இதுபோல அதிபரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இந்த வாய்ப்பு, அதுவும் அதிபரையே சந்திக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தற்போது ராஜபக்சே அமெரிக்காவுக்கு வந்துள்ளதால், அவர் மீதான போர்க்குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று ஒபாமாவை தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன.

இந்த நிலையில் திடீரென இன்று கொழும்பு திரும்பி விட்டார் ராஜபக்சே. அதிகாலையில் அவர் கொழும்புக்கு வந்து சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் துரத்தப்பட்டதைப் போன்ற நிலை அமெரிக்காவிலும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்தான் ராஜபக்சே ஓடி வந்து விட்டதாக கூறப்படுகிறது.

வருங்காலத்தில் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் சுதந்திரமாக போக முடியாத அளவுக்கு ராஜபக்சேவுக்கு நெருக்கடிகள் முற்றி வருவதாக ராஜபக்சே எதிர்ப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment