Tuesday, January 25, 2011

மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியாத அரசுகள் தேவையா? விஜயகாந்த்


பொழுது விடியத் தவறினாலும், இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாவது தவறுவதில்லை. கடந்த வாரம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர் பாண்டியன் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கம் போல், கடிதம் எழுதுவதற்கு மாறாக முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பினார்.மத்திய அரசும், இலங்கைத் தூதரை நேரில் வரவழைத்து இத்தகைய தாக்குதலை தவிர்த்திருக்கக் கோரியது. இலங்கை அரசோ, தங்களது கடற்படையினர் அத்தகைய துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சித்தது.தி.மு.க.,வுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்த, சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தார்.

"தி.மு.க.,-காங்கிரஸ் கூட்டணி உறவின் மூலம் நாடு வளமும், வலிமையும் பெறும்' என்று நா கூசாமல் பேசி வருகிறார்.இவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும்போதே, இலங்கை கடற்படையினர் நமது மீனவர் ஜெயக்குமாரை கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு கொன்றுள்ளார்கள். இலங்கை கடற்படையின் இந்த மிருகத்தனமான செயலை வழக்கம்போல், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கண்டித்துவிட்டு டில்லிக்குப் பறந்து விட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதல்வர் வழக்கம்போல், நிதியுதவி வழங்கி, தனது கடமையை ஒப்புக்கு நிறைவேற்றி விட்டார்.பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கோ, போன உயிர்கள் திரும்ப வரப் போவதில்லை. நாள் தோறும் பாடுபட்டு, அக்குடும்பங்களைக் காப்பாற்ற நாதியில்லை. அரசுகளை உருவாக்குவதே மக்கள் தங்கள் உயிர்களையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான்.

மீனவர்களைக் காப்பாற்ற முடியாத, கடலோரக் காவல்படையால் என்ன பயன்?"தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இனி தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கடலோர காவல்படையின் தென் மண்டல கமாண்டர் முதல்வரிடம் அளித்த உறுதி மொழி என்ன ஆனது?காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அரசுகளால், மக்களின் உயிர்களைக் கூட காப்பாற்ற முடிவதில்லை என்பதையே இந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய அரசுகள் நமக்கு தேவைதானா என்பதையும், இவைகளால் நமக்கு என்ன பயன் என்பதையும் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

தே.மு.தி.க., சார்பில், ராமேஸ்வரம் ஆர்ப்பாட்டம் முதல், தலைநகர் டில்லியில் உண்ணாவிரதம் வரை, நாம் இருந்து பார்த்தாகி விட்டது. அவற்றால் எந்த பயனும் இல்லை. குட்டி நாடான இலங்கை அரசு தமிழக மீனவர்களை தினந்தோறும் தாக்குவது மட்டுமல்ல, ஏளனமாக நினைக்கிறது. மத்திய அரசு இதனைக் கண்டு கொள்ளாதது ஏன்?இலங்கை அரசின் அராஜகப் போக்கையும், அதற்கு துணை போகும் மத்திய, மாநில அரசுகளையும் வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment