Wednesday, January 26, 2011

யூசுப் பதான் உறுதி

 ""உலக கோப்பை தொடரில் ஏற்படும் நெருக்கடி குறித்து கவலையில்லை. இந்திய ரசிகர்கள் எந்த சூழ்நிலையிலும், எங்கள் பக்கம் இருந்து ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்,'' என இந்திய வீரர் யூசுப் பதான் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. செஞ்சுரியனில் நடந்த கடைசி போட்டியில்,

எழுச்சி கண்ட யூசுப் பதான், தென் ஆப்ரிக்க வீரர்களின் "ஷார்ட் பிட்ச்' பந்துகளை, விளாசி அதிரடியாக சதம் அடித்தார். இதனிடையே எதிர்வரும் உலக கோப்பை தொடர் குறித்து யூசுப் பதான் கூறியது:
தென் ஆப்ரிக்கா தொடரில் "சீனியர்' வீரர்கள் சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் இல்லாத நிலையிலும், எங்களது தன்னம்பிக்கை அதிகமாக இருந்தது. ஒவ்வொருவரும் கடுமையாக போராடினோம். இதற்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் கிறிஸ்டன் தான். அங்குள்ள சூழ்நிலைகளை நன்கு அறிந்த அவர், மிகவும் உதவியாக இருந்தார். அணி நிர்வாகமும் பல திட்டங்களை செயல்படுத்தியது.
இதற்கேற்ப, கடைசி போட்டியில் வென்று, ஒருநாள் தொடரை வெல்ல முடியும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது. என்ன செய்ய? நினைத்ததெல்லாம் நடப்பது இல்லையே. இருந்தாலும், கடந்த சில தொடர்களை விட, தென் ஆப்ரிக்க மண்ணில் இம்முறை வியக்கத்தக்க வகையில் விளையாடினோம். ஒருநாள் தொடரை வென்று இருந்தால் முத்தாய்ப்பாக இருந்து இருக்கும். அடுத்து உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில், அது குறித்து தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியாது.
கவலை இல்லை:
உலக கோப்பை தொடரில் நெருக்கடி குறித்தெல்லாம் அதிக கவலையில்லை. இறைவன் கொடுத்த இயற்கையான திறமையை நம்பினால் போதும், மற்றவை தானாக நடக்கும். இந்திய அணிக்காக எந்த சிக்கலும் இல்லாமல் விளையாட வேண்டும். அணி வெற்றி பெறும் வரை, களத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்துள்ளேன்.
ரசிகர்கள் ஆதரவு:
உலககோப்பை தொடரில் சிறப்பான மற்றும் மோசமான நேரங்களில் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். போட்டியில் தோற்கும் நேரங்களில், இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெற இந்த ஆதரவு உதவும். இத்தொடரில் இந்திய ரசிகர்கள் எப்போதும் எங்கள் பக்கம் இருப்பார்கள் என, உறுதியாக நம்புகிறேன்.
நம்பிக்கை உள்ளது:
 உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., போட்டிகளில் பல இடங்களில் களமிறங்கி பேட்டிங் செய்து, அணியை தோல்வியில் இருந்து மீட்டு, வெற்றிபெறச் செய்துள்ளேன். சர்வதேச அளவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான சதம், நம்பிக்கையை அதிகரித்தது. ஆனால் தென் ஆப்ரிக்காவில் கடைசி வரை களத்தில் இருந்து, எந்த போட்டியிலும் வெற்றி தேடித் தராதது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எதிர்வரும் உலக கோப்பை தொடரில் இதை நிறைவேற்றுவேன் என நம்புகிறேன்.
இவ்வாறு யூசுப் பதான் தெரிவித்தார்.(dinamalar)

No comments:

Post a Comment