Saturday, February 5, 2011

உடனடி சிகிச்சை தேவை: அப்துல் கலாம்


 "இந்தியாவில் ஊழல் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. புற்று நோய் போல் வேகமாக பரவி வருகிறது. புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுவதைப் போல்,
ஊழலை ஒழிக்க, அரசியல், அரசுத்துறை மற்றும் நீதித் துறைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சமீபத்தில் துபாய் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி: இந்தியாவில் ஊழல் நடவடிக்கைகள் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அரசியல், அரசுத் துறை மற்றும் நீதித் துறைகளில் இந்த ஊழல் ஊடுருவியுள்ளது. புற்று நோய் போல் வேகமாக பரவி வரும், இந்த பிரச்னையை ஒழிக்க, புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிப்பதைப் போல், இத்துறைகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். அதாவது, இந்த மூன்று துறைகளிலும், ஊழலை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவது. மிகப் பெரிய சவாலான விஷயம். இளைய சமுதாயத்தின் செயல்பாடுகள் மூலம் மட்டுமே, இதைச் செய்ய முடியும். அனைவரும் ஒருங்கிணைந்து, இதைச் சாதிக்க வேண்டும். ஊழல் அதிகரிப்பதால், நாட்டு மக்களுக்கு ஜனநாயத்தின் மீதான நம்பிக்கை குறையும். எனவே, இதை தடுக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊழல் நடவடிக்கைகள் தொடர்ந்தால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதை தடுக்க முடியாது. இதன் மூலம் பெரிய அளவிலான விளைவு ஏற்படும். அந்த போராட்டத்தை நாடு தாங்காது. இந்தியாவின் வளர்ச்சிக்கும் அது பெரிய இடையூறாக இருக்கும். இவ்வாறு அப்துல் கலாம் கூறியுள்ளார்.(dinamalar)

No comments:

Post a Comment