Friday, February 18, 2011

மக்கள் வாழ்க்கையில் தி.மு.க.,வுக்கு அக்கறையில்லை


 ""பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்து தி.மு.க., அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை,'' என தே.மு.தி.க., அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் திருப்பூரில் பேசினார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில் அரிசிக் கடை வீதியில்,
கண்டன பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. பனியன் தொழில் மற்றும் தொழிலாளர் நலன் பாதுகாக்கவும், விவசாயிகளின் துயர் துடைக்கவும், சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காணவும், தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இப்பொதுக்கூட்டம் நடந்தது.

மாநில அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது: சாய ஆலைகள் பிரச்னையில் 4.5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. வேலையில்லை என்று சொல்வதற்கும், செத்துப்போ என்று சொல்வதற்கும் பெரிய வித்தியாசமில்லை என முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சொல்லி இருக்கிறார். மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்து தி.மு.க., அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. பிரச்னையின் முக்கியத்துவம் தெரிந்து அதற்கேற்ப தொலைநோக்கு பார்வையுடன் தி.மு.க., அரசு செயல்படவில்லை.

சாயக்கழிவுநீர் பிரச்னையில் சாய ஆலை தொழிலாளர்களையும், விவசாயிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார் கருணாநிதி. சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு காண, தொழில் நிபுணர்களை கொண்டு முயற்சி செய்திருக்க வேண்டும்; தொழில்நுட்பத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும் அல்லது அரசே எடுத்து செயல்படுத்தியிருக்க வேண்டும். பிரச்னைகளை தீர்க்கும் அரசாக இல்லை; தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் இதுபோல் தீர்க்கப்படாமல் இன்றும் தொடர்கிறது. இவ்வாறு, பண்ருட்டி ராமசந்திரன் பேசினார்.

No comments:

Post a Comment