Saturday, February 5, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதியையும் சேர்க்க வேண்டும்: நீதிமன்றத்தில் சுவாமி கோரிக்கை





: 2-ஜி (ஸ்பெக்ட்ரம்) அலைக்கற்றை வழக்கில் முதல்வர் கருணாநிதியையும் எதிரியாகச் சேர்க்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தில்லியிலுள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சனிக்கிழமை கோரினார்.
 இதுதொடர்பாக, மனு ஒன்றைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள முறைகேடு காரணமாக, அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை தணிக்கைத் துறை அதிகாரியின் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
 இதனடிப்படையில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவைத் தண்டிக்குமாறு கோரி தில்லியிலுள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி புகார் அளித்தார்.
 இந்தப் புகாரை சி.பி.ஐ. நீதிமன்றம் ஜனவரி 7-ம் தேதி விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
 அப்போது, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும், இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் விளக்க தலைமைத் தணிக்கைத் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 இந்த வழக்கு சிறப்பு நீதிபதி பிரதீப் சத்தா முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
 "இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா உள்ளிட்டவர்களைக் கைது செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஒரே விஷயத்தில் இரண்டு விசாரணைகள் நடைபெற முடியுமா?' என்று நீதிபதி பிரதீப் சத்தா, சுப்ரமணியன் சுவாமியிடம் கேள்வி எழுப்பினார்.
 "2-ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான எனது புகார் மிகவும் விரிவானது. இதில் தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் சி.பி.ஐ.யின் விசாரணை சிறிய கோணத்திலேயே உள்ளது' என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.
 "அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு உள்ள பங்கு குறித்தும், தேசத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படுவது குறித்தும் தனியாக மனு தாக்கல் செய்ய உள்ளதாக' சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.
 சில தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதன் மூலம் ரூ.22 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி ராசா உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 "சி.பி.ஐ. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதால், என்னைப் பொருத்தவரையில் இந்த வழக்கு இப்போது மேற்கொண்டு விசாரிக்கப்பட வேண்டியதில்லை' என்றார் நீதிபதி சத்தா.
 இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி மீண்டும் வலியுறுத்தினார்.
 இதையடுத்து, ராசா உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணை குறித்த விவரங்களையும், இதில் தேசப் பாதுகாப்பு என்ற அம்சமும் விசாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.
 வழக்கு விசாரணை பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது(dinamani)
.

No comments:

Post a Comment