Sunday, November 4, 2012

சமையலிலும் சளைத்தவர் இல்லையாம் சச்சின் டெண்டுல்கர்!


 இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் திறமையானவர் அல்ல. சமையல் கலையிலும் திறமை வாய்ந்தவர். இதை அவர் கூறும் சில உண்மை சம்பவங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(39). கிரிக்கெட் ஆடுகளத்தில் எதிரணி பந்துவீச்சை துவஷம் செய்யும் இவர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்த நிலையில் இவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமின்றி, சமையல் கலையிலும் திறமை வாய்ந்தவர் என்பது அவர் கூறிய சில உண்மை சம்பவங்கள் வெளிப்படுத்தி உள்ளன.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற உணவு வகைகள் தொடர்பான புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் சச்சின் கலந்து கொண்டார். அப்போது சமையல் துறையில் சச்சின் தனது இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இவ்விழாவில் சச்சின் பேசியதாவது,
கடந்த 2003ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் முன் மிகவும் பதட்டமாக இருந்தது. பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களான வாசீம் அக்ரம், சோயப் அக்தர் ஆகியோர் பந்துகளை சந்திப்பது எப்படி என்ற பதட்டம் நிலவியது.
இதனால் மதிய உணவை தவிர்த்த நான், ஒரு கோப்பையில் ஐஸ்கிரீமை போட்டு சாப்பிட்டு கொண்டு, காதில் ஹேட்போனை மாட்டி கொண்டேன். என்னை சுற்றிலும் பேசிய காரியங்களை கேட்க நான் விரும்பவில்லை. இந்த நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நான் அதிரடியாக ஆடி, 75 பந்துகளில் 98 ரன்களை குவித்தேன். அந்த ஐஸ்கிரீம் இனிமையாக இருந்தது.
வீதியிலே விருந்து:
தென் ஆப்பிரிக்காவிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஒரு போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றோம். இதை கொண்டாட இந்திய அணியினராகிய நாங்கள் தீர்மானித்தோம். இதற்காக போட்டி முடிந்த பிறகு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள வீதிகளில் ஒன்றாக சேர்ந்து சென்றோம். அப்போது வீதியிலே விற்கப்பட்ட உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தோம். இதன்மூலம் இந்திய அணி வீரர்கள் இடையே ஒற்றுமை அதிகரித்தது.
பிடித்த உணவு:
பாகிஸ்தான் உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் பாகிஸ்தானுக்கு எப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளை நான் விரும்பி சாப்பிடுவது உண்டு. முதல் முறையாக இந்திய அணியுடன் நான் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது, எனக்கு 16 வயது.
அப்போது பாகிஸ்தானில் சாப்பிட்ட உணவு வகைகள் மூலம் எனது உடல் எடையே அதிகரித்துவிட்டது. மும்பைக்கு திரும்பிய பிறகு எனது உடல் எடையை பார்த்த போது, எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
நடு காட்டில் விருது:
கடந்த 2000ல் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்ற போது ஒருமுறை காட்டு பகுதிக்குள் சென்றோம். அப்போது தேவையான உணவுகளை நாங்களே சமைத்தோம். மசாலா தடவிய கோழியை, கம்பி அடுப்பில் வேகவைத்து சாப்பிட்டது நன்றாக இருந்தது. காட்டுப்பகுதியில் சக வீரர்களுடன் இப்படி சமைத்து சாப்பிட்ட அனுபவத்தை மறக்க முடியாது.
ஜப்பான் டேஸ்ட்:
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஜப்பானிய நண்பர் ஒருவரது ஹோட்டலுக்கு சுரேஷ் ரெய்னாவை அழைத்துச் சென்றேன். ஜப்பானிய உணவுகளை அறிமுகம் செய்கிறேன் என்ற மகிழ்ச்சியுடன் கூறினேன். அந்த நேரத்தில் பிரைடு ரைஸ், சாஸ்மி, சுஷி ஆகிய உணவுகளை விரும்பி சாப்பிட்டார்.
அஜய் ஜடேஜாவின் வீட்டில் விருந்து:
கடந்த 1997 அல்லது 1998ம் ஆண்டு என்று நினைக்கிறேன். டெல்லியில் உள்ள அஜய் ஜடேஜாவின் வீட்டில் இந்திய வீரர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்திற்கு கொஞ்சம் முன்னதாக சென்ற நான், அணியினருக்கு பரோட்டா செய்து கொடுத்தேன். இந்திய அணியினருக்கு அது மிகவும் பிடித்து போனது.
வீட்டிலும் கலக்கும் சச்சின்:
எனது வீட்டில் சில சந்தர்ப்பங்களில் சமைப்பது உண்டு. நான் ஒரு முறை செய்த மீன் குழம்பை எனது மனைவி அஞ்சலி விரும்பி சாப்பிட்டார். மேலும் எனது மகள், மகன் ஆகியோருக்கு காலை உணவு கூட சில நேரங்களில் செய்து கொடுத்தது உண்டு.
மீன் குழம்பு, பார்ன் மசாலா ஆகிய உணவு வகைகளை எனது தாயிடம் இருந்து கற்று கொண்டேன். பல முறை மகாராஷ்டிரா மாநில உணவு வகைகளையும் செய்து ருசி பார்த்தது உண்டு என்றார்.

1 comment: