Thursday, September 6, 2012

பணம் வேண்டாம்; அப்பா தான் வேண்டும்: உருக வைத்த சிறுமி


பட்டாசு ஆலை வெடி விபத்தில் ,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.2 லட்சம் ரூபாயை அமைச்சர் பன்னீர் செல்வம் வழங்கினார். 34 குடும்பத்திற்கு நிதி வழங்கப்பட்டது. சிவகாசி ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் நிவாரண நிதி பெறுவதற்காக, பகல் ஒரு மணியளவில் இறந்தவர்களின் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். இரண்டாம்நாள் காரியங்களை முடித்த கையுடன் வந்தவர்களை, ஆர்.டி.ஒ., அறையில் அலுவலர்கள் அமர வைத்தனர். மாலை 5 மணிக்கு தான் அமைச்சர்கள் வந்தனர். அறையில் நுழைந்த அமைச்சர்களை கண்டதும், பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழுதனர். பின், ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, நிவாரண நிதி வழங்கப்பட்டது.

தாயாருடன் வந்த ஒரு சிறுமி, ""எங்களுக்கு பணம் வேண்டாம். அப்பா தான் வேண்டும்,'' என கதறி அழுதது. அந்தக் குழந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் தவித்தனர். நீண்ட நேர ஆறுதலுக்கு பின் குழந்தை பணத்தைப் பெற்றுக் கொண்டது. கணவரை இழந்த கர்ப்பிணி பெண், நிதி பெறும்போது கதறி அழுதார். கணவரை இழந்த சண்முகவள்ளி, மூன்று மகன்களுடன் நிதி பெற்றது உருக்கமாக இருந்தது. திருத்தங்கல் ஆதிலட்சுமி, இவரது தாய் லட்சுமி இருவரும் வெடி விபத்தில் உயிரிழந்தனர். இவர்களது நிவாரண நிதியினை வாங்குவதற்கு கூட, உறவினர்கள் யாரும் வரவில்லை. இது போல் விபத்தில் இறந்த மேற்கு வங்கம் கோல்கட்டாவை சேர்ந்த சுனில்,20, செல்லையநாயக்கன்பட்டியை சேர்ந்த மணி நிவாரண தொகை வாங்க யாரும் வரவில்லை. நிதியை வழங்கிய அமைச்சர்

பன்னீர்செல்வம், ""நிதியை வங்கியில் டெபாசிட் செய்து, குழந்தைகளின் கல்வி செலவுக்கு வைத்து கொள்ளுங்கள்,'' என்றார். சம்பிரதாயமாக நிதி வழங்கிய நிகழ்ச்சியை முடித்த அமைச்சர்கள், சிகிச்சை பெற்றவர்களுக்கு நிதி வழங்க மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

No comments:

Post a Comment