நூறு வயதைக் கடந்தும், ஆராய்ச்சி படிப்புக்கு (பிஎச்.டி.,) விண்ணப்பித்துள்ளார் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முதியவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான போலராம் தாஸ். கடந்த வாரம், தன் 100வது பிறந்த நாளைக் கொண்டாடிய தாஸ், கவுகாத்தி பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி., சேர்ந்துள்ளார்.மனைவியை இழந்த இவருக்கு ஒரு மகள், ஐந்து மகன்கள், 10 பேரன், பேத்திகள் மற்றும் ஒரு கொள்ளுப் பேத்தி உள்ளனர். இவருக்கு அவரது மகளே ஆசிரியராக இருந்து வழிகாட்டுதல்களை வழங்குகிறார் என்பது தான் குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.
இது குறித்து தாஸ் உற்சாகத்துடன் கூறியதாவது:பிஎச்.டி., படிப்பை படிக்க வேண்டும் என்பது பல நாள் கனவு. என் 100 வயது அனுபவத்தில், அரசியல், நிர்வாகம், மதம், சமுதாயம் என எல்லாவற்றிலும் பல சாதனைகளைச் செய்திருக்கிறேன்.இந்து மதத்தில் சரி நிகர்வு தத்துவம் குறித்து, 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்திருத்தவாதி சங்கர்தேவ் மாநிலம் முழுவதற்கும் பிரசாரம் செய்தார். இதை மக்களிடையே கொண்டு சென்றதில், நான் சார்ந்துள்ள கீழ் அசாம் பகுதிக்கு எந்த அளவிற்கு பங்கு உண்டு என்பது பற்றி ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ளேன்.இவ்வாறு தாஸ் கூறினார்.
கவுகாத்தி பல்கலையின் துணைவேந்தர் கூறுகையில், "100 வயதில் ஒருவர் ஆராய்ச்சி படிப்பு படிக்கிறார் என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு தாஸ், மிகச் சிறந்த உதாரணம். நூறு வயதில் ஒரு மாணவனைப் பெற்றிருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்' என்றார்.
No comments:
Post a Comment