Monday, August 27, 2012

இளம் இந்தியா "உலக சாம்பியன்


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் பட்டையை கிளப்பிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேப்டன் உன்முக்த் சந்த் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். 
ஆஸ்திரேலியாவில் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோருக்கான) நடந்தது. நேற்று நடந்த பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் உன்முக்த் சந்த், "பீல்டிங் தேர்வு செய்தார்.
போசிஸ்டோ அரைசதம்:
 ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் ஏமாற்றினர். பட்டர்சன் (16), புக்கானன் (12) நிலைக்கவில்லை. டிராவிஸ் ஹெட் (37) ஓரளவு ரன் சேர்த்தார். பொறுப்பாக ஆடிய கேப்டன் போசிஸ்டோ அரைசதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டர்னர் (43) அரைசத வாய்ப்பை கோட்டைவிட்டார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது. போசிஸ்டோ (87) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் சந்தீப் சர்மா 4, ரவிகாந்த் சிங், பாபா அபராஜித் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
உன்முக்த் அபாரம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பிரகாஷ் சோப்ரா (0) மோசமான துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த அபராஜித் (33) ஆறுதல் தந்தார். ஹனுமா விஹாரி (4), விஜய் ஜோல் (1) ஏமாற்றினர். இதனால் இந்திய அணி 97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பின் இணைந்த கேப்டன் உன்முக்த் சந்த், ஸ்மித் படேல் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கிரிகோரி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட உன்முக்த் சதம் அடித்தார். மறுபக்கம் படேல், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார்.
இந்திய அணி 47.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. உன்முக்த் சந்த் (111 ரன்கள், 130 பந்து, 6 சிக்சர், 7 பவுண்டரி), ஸ்மித் படேல் (62) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்று அசத்தியது. 
ஆட்டநாயகன் விருதை இந்திய கேப்டன் உன்முக்த் சந்த் தட்டிச் சென்றார். 
தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் போசிஸ்டோ பெற்றார்.  
ரூ. 20 லட்சம் பரிசு
ஜூனியர் உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் கூறுகையில், ""உலக கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு பாராட்டுகள். கடந்த ஆண்டு சீனியர் உலக கோப்பை வென்ற இந்தியாவுக்கு, இம்முறை ஜூனியர் பிரிவில் உலக கோப்பை கிடைத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதனை கவுரவிக்கும் விதமாக வீரர்களுக்கு அனைவருக்கும் தலா ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும். வீரர்களுக்கு தேவையான பயிற்சி அளித்து ஊக்குவித்த பயிற்சியாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு தலா ரூ. 15 லட்சம் பரிசு வழங்கப்படும், என்றார்.
இரண்டு ஆண்டு பயணம்
 இந்திய கேப்டன் உன்முக்த் சந்த் கூறுகையில், ""உலக கோப்பையில் சாதிப்பதற்காக கடந்து இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு பயிற்சி மேற்கொண்டோம். இந்த இரண்டு ஆண்டு பயணத்தின் போது 15 வீரர்களும் வெவ்வேறு மாநிலத்தில் இருந்து வந்தனர். ஆனால் உலக கோப்பை தொடரில் ஒரு அணியாக இணைந்து விளையாடியதால் சாதிக்க முடிந்தது. கோப்பை வென்றதற்கு வீரர்களிடம் இருந்த ஒற்றுமை முக்கிய காரணம். பைனலில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆனால் முக்கியமான நேரத்தில் என்னுடன் ஸ்மித் படேல் கூட்டணி அமைத்தது போட்டியில் திருப்பம் ஏற்படுத்தியது. இதற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
கைப்... கோஹ்லி... சந்த்
 இலங்கையில் 2000ல் நடந்த ஜூனியர் உலக கோப்பை பைனலில் முகமது கைப் தலைமையிலான இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்றது. பின் மலேசியாவில் 2008ல் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தற்போது உன்முக்த் சந்த் தலைமையில் சாதித்துள்ளது. கைப், கோஹ்லி வரிசையில் உன்முக்தும் விரைவில் சீனியர் அணியில் இடம் பிடிப்பார்.
* ஜூனியர் உலக கோப்பையை அதிக முறை வென்ற அணிகள் வரிசையில் முதலிடத்தை இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் (1988, 2002, 2010) பகிர்ந்து கொண்டது. இவ்விரு அணிகள் தலா மூன்று முறை கோப்பை வென்றுள்ளன. பாகிஸ்தான் அணி 2 (2004, 06), இங்கிலாந்து ஒரு முறை (1998) கோப்பை வென்றன.
அதிகபட்ச ரன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பைனலில் இந்திய கேப்டன் உன்முக்த் சந்த் 111 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஜூனியர் உலக கோப்பை பைனலில் அதிகபட்ச ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். முன்னதாக 1988ல் பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் ஆஸ்திரேலியாவின் வில்லியம்ஸ் 108 ரன்கள் எடுத்தார்.
*இந்திய வீரர் உன்முக்த் சந்த் அடித்த சதம், உலக கோப்பை பைனலில் பதிவு செய்யப்பட்ட நான்காவது சதம். முன்னதாக ஆஸ்திரேலியாவின் வில்லியம்ஸ் (108 ரன், எதிர்-பாகிஸ்தான், 1988), இங்கிலாந்தின் பீட்டர்ஸ் (107 ரன், எதிர்-நியூசிலாந்து, 1998), ஆஸ்திரேலியாவின் பர்க் (100 ரன், எதிர்-தென் ஆப்ரிக்கா, 2002) ஆகியோர் சதம் அடித்தனர்.
*ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பைனலில் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது முறையாக "ஜூனியர் உலக கோப்பை வென்றது. முன்னதாக இலங்கையில் 2000ம் ஆண்டு நடந்த தொடரில் முகமது கைப் தலைமையிலான இளம் இந்திய அணி, பைனலில் இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்றது. அதன்பின் மலேசியாவில் 2008ல் நடந்த தொடரில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
* இதன்மூலம் ஜூனியர் உலக கோப்பையை அதிக முறை வென்ற அணிகள் வரிசையில் முதலிடத்தை இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் (1988, 2002, 2010) பகிர்ந்து கொண்டது. இவ்விரு அணிகள் தலா மூன்று முறை கோப்பை வென்றுள்ளன. பாகிஸ்தான் அணி 2 (2004, 06), இங்கிலாந்து ஒரு முறை (1998) கோப்பை வென்றன.
6 வயதில் ஆரம்பம்
டில்லியை சேர்ந்தவர் உன்முக்த் சந்த், 19. தனது 6 வயதில் கிரிக்கெட் பயிற்சியை துவக்கினார். கவுதம் காம்பிரின் பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜால் பட்டை தீட்டப்பட்ட இவர், உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழிந்தார். இவரது பேட்டிங் "ஸ்டைலை விராத் கோஹ்லியுடன் ஒப்பிட்டு பேசுவதுண்டு. இந்த ஆண்டு இவருக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. 3 கோப்பைகளை வென்றுள்ளார்.
* இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 19 வயதுக்குட்பட்டோர் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 122 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பைனலில் சதம்(112) அடித்து, இந்தியாவுக்கு கோப்பை(2012, ஏப்., 15) பெற்று தந்தார்.
* பின் கோலாலம்பூரில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதியில், சந்த்(116) சதம் அடித்து, அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார். பாகிஸ்தானுக்கு எதிரான பைனலிலும் சதம்(121) அடித்தார். ஆனால், போட்டி "டை ஆக இரு அணிகளும் கோப்பையை(2012, ஜூலை 1) பகிர்ந்து கொண்டன. தற்போது ஜூனியர் உலக கோப்பை பைனலிலும் சதம் அடித்த இவர், இந்திய அணிக்கு 3வது கோப்பையை பெற்று தந்துள்ளார். 
* ஐ.பி.எல்., தொடரில் சேவக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
தோனி பாராட்டு
 இந்திய சீனியர் அணி கேப்டன் தோனி கூறுகையில்,""உன்முக்த் சந்த் மிகச் சிறப்பாக "பேட் செய்தார். கோப்பை வென்ற ஜூனியர் அணிக்கு எனது பாராட்டுகள், என்றார்.
பெரிய சாதனை
இந்திய வீரர் விராத் கோஹ்லி கூறுகையில்,""உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் இதற்கு முன் யாரும் வீழ்த்தியது இல்லை. நமது ஜூனியர் அணி சாம்பியன் பட்டம் வென்று மிகப் பெரும் சாதøனை படைத்துள்ளது. இளம் வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். கடின முயற்சியை இவர்கள் தொடர வேண்டும்,என்றார்.
72 மணி நேரத்துக்கு முன்...
உன்முக்த் சந்த் ஆட்டத்தை சுமார் 3 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, அவரது தந்தை பரத் சந்த் தாக்கூர் "டிவி மூலம் பார்த்துள்ளார். பொருளாதார ஆசிரியரான இவர் கூறுகையில்,""கோப்பை வெல்ல முடியும் என்பதை உன்முக்த் 3 நாட்களுக்கு முன்பே சரியாக கணித்தார். அவரது பிளாக்பெர்ரி மொபைலில் "ஜூனியர் உலக கோப்பை தவிர வேறு ஒன்றும் முக்கியமல்ல. எனது கையில் உலக கோப்பை இருப்பதை போல உணருகிறேன் என, 72 மணி நேரத்துக்கு முன்பே குறிப்பிட்டிருந்தார். பள்ளி பருவத்தில் இருந்தே "டைரி எழுதும் பழக்கம் அவருக்கு உண்டு. அதில், ஜூனியர் உலக கோப்பை தொடர்பான அனுபவங்களை எழுத திட்டமிட்டுள்ளார்,என்றார்.
சூப்பர் "சண்டே
நேற்று இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச் சிறந்த நாளாக அமைந்தது. நமது வீரர்கள் இரட்டை வெற்றி பெற்றனர். "சீனியர் வீரர்கள் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றனர். ஜூனியர்கள் உலக கோப்பை வென்று வரலாறு படைத்தனர். 
கனவு நனவானது: அபராஜித்
ஜூனியர் உலக கோப்பை வெற்றியில் தமிழக வீரர் பாபா அபராஜித் முக்கிய பங்கு வகித்தார். பேட்டிங், பவுலிங்கில் அசத்தினார். இவர் கூறுகையில்,""பைனலில் உன்முக்த், ஸ்மித் சிறப்பாக பேட் செய்தனர். இவர்கள் ஆட்டத்தை பார்த்த போது, வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. கோப்பை வென்றதன் மூலம் எங்களது கனவு நனவாகியுள்ளது. ரசிகர்கள் ஆதரவு அமோகமாக இருந்தது,என்றார்.
எதிர்கால நட்சத்திரங்கள்
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை மிகச் சிறப்பாக உள்ளது என்பதை ஜூனியர் வீரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,""கோப்பை வென்ற ஜூனியர் அணிக்கு பாராட்டுகள். நீங்கள் தான் எதிர்கால விளையாட்டு நட்சத்திரங்கள்,என, குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட பத்து பதிவுகள்... வாசித்தேன்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    (தமிழ் பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றதால் கருத்திட தாமதம்)

    ReplyDelete