கைதான பயங்கரவாதிகளிடமிருந்து, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து, சென்னை வரைபடமும் கைப்பற்றப்பட்டது.கைதான 16 பயங்கரவாதிகளிடம், உளவு நிறுவனங்களின் அதிகாரிகளும், கர்நாடக மாநில போலீசாரும் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அது பற்றிய விவரம்:நாட்டையே உலுக்கும் வகையிலான, சதிச் செயல்களை செய்ய திட்டமிட்டிருந்த, இந்த பயங்கரவாதிகள் எல்லாம், இணைய தளங்களில் அடிக்கடி வெளியாகும், லஷ்கர் -இ- தொய்பா உட்பட, பல பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பேச்சுக்களையும், அவர்கள் எழுதும் கட்டுரைகளையும் படித்துள்ளனர்.இந்தக் கட்டுரைகள் மற்றும் பேச்சுக்கள் எல்லாம், அமெரிக்கர்கள், இந்தியர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் இதர மேலை நாட்டவர்களுக்கு எதிராக, ஆயுதம் தாங்கிய போருக்கு, இளைஞர்களை அழைக்கும் வகையில் உள்ளன.ஏமன் நாட்டில் உள்ள, ஏதோ ஒரு பகுதியில் இருந்து, இந்தக் கட்டுரைகள் மற்றும் பேச்சுக்கள் எல்லாம், இணைய தளத்தில், "அப்லோடிங்' செய்யப்படுகின்றன. மேலும், இளைஞர்களை மூளைச் சலவை செய்ய வைக்கும், அல்குவைதா பயங்கரவாத அமைப்பின், இணைய தள பத்திரிகைகளையும் அடிக்கடி படித்துள்ளனர். இதன் பின்னரே, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, நாட்டிற்கு எதிரான சதி வேலைகளைச் செய்யத் தயாராகியுள்ளனர். பயங்கரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட, "லேப்-டாப்' மற்றும் "பென் டிரைவ்'களை பரிசோதித்ததில், அவர்கள் எந்தெந்த இணைய தளங்களை எல்லாம் பார்த்துள்ளனர். எவை எவை அவர்களை, பயங்கரவாத அமைப்புகளில் இணையத் தூண்டின போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.மேலும், நாட்டில் எந்தெந்த நபர்களைக் கொல்ல திட்டமிட்டிருந்தனர்; எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் போன்ற விவரங்களும் வெளியாகின.பயங்கரவாத அமைப்புகளின், இணையதள பத்திரிகைகளைப் படித்து, அதனால் ஈர்க்கப்பட்ட இவர்கள், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில், போலீசாருடன் நடந்த சண்டையில், கொல்லப்பட்ட பயங்கரவாதியான, ஐதராபாத்தைச் சேர்ந்த, ஷாகித் பிலால் என்பவரின் சகோதரரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.அமெரிக்க படைக்கு எதிராக, ஆப்கானிஸ்தானில் நடவடிக்கை மேற்கொள்ளும் முன், இந்தியாவில், சில இடங்களில் தாக்குதல் நடத்தும்படி, பிலாலின் சகோதரர், அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பின், பயங்கரவாதிகளில் ஒருவர், பாகிஸ்தான் சென்று, அங்கு ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளார்.மீண்டும் இந்தியா திரும்பிய அவர், மற்றவர்களுக்கு, ஆயுதப் பயிற்சி தொடர்பான, சில அடிப்படையான விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.கைதான பயங்கரவாதிகள், 16 பேரில் ஒருவரான, பத்திரிகையாளர், முப்தி உர் ரகுமான் சித்திக் உடன், பணியாற்றிய பத்திரிகையாளர் ஒருவரையும், இவர்கள் முதலில் கொல்ல திட்டமிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, அந்தப் பத்திரிகையாளரை, தீவிரமாக கண்காணித்துள்ளனர்.இந்த விவரங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன.
மேலும் ஒருவர் கைது:
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் சந்தேகத்தின் பேரில், ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, அக்ரம் பாட்ஷா, 22, எனத் தெரிய வந்தது. போலீசார் நடத்திய சோதனையில், அவரிடமிருந்து, 7.655 ரக துப்பாக்கி ஒன்றும், 16 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் விசாரித்ததில், சவுதி அரேபியாவில் இவர், ஒரு ஆண்டு பயங்கரவாத பயிற்சி மேற்கொண்டதை ஒப்புக் கொண்டார். பெங்களூருவில் தங்கிடிரைவராக வேலை பார்த்துக் கொண்டு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.தன் கூட்டாளிகளை போலீசார் கைது செய்ததால், வேறு மாநிலத்துக்கு தப்பிச் செல்ல, பெங்களூரு மெஜஸ்டிக் பகுதிக்கு வரும் போது, போலீசார் கைது செய்தனர்.அவருடன் சேர்த்து, நாட்டை சீர் குலைக்க திட்டமிட்டிருந்த, 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த, மேலும் பலரை தேடி வருகின்றனர்.
பயங்கரவாதிகள் சிக்கியது எப்படி?
நாட்டில் முக்கிய இடங்களில், தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சிலர், சதி செய்து வருவதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து, ஆந்திர போலீசாரும், மத்திய புலனாய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், ஆறு மாதங்களாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.அப்போது, பயங்கரவாத அமைப்புகளின், இணைய தளங்களைப் பார்ப்பவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து, அவர்களின் இணைய தள நடவடிக்கைகளையும், மொபைல் போன் பேச்சுக்களையும் கண்காணித்தனர். இவற்றில் எல்லாம், பயங்கரவாத அமைப்புகளுக்கும், இவர்களுக்கும் உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே, போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment