: ""ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராஜாவுக்கு, இப்போதைக்கு மிகவும் பாதுகாப்பான இடம் சிறை மட்டுமே,'' என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கூறினார்.
அவர் நேற்று கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. என்னுடைய கணக்கின்படி, 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. சோனியாவின் தங்கைகளான அனிஷ்கா, நாடியாவுக்கு எந்த வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது அமெரிக்காவுக்கு தெரியும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், இதை அறிந்து கொள்ளும் அதிகாரம், அந்நாட்டுக்கு உள்ளது. தேவைப்பட்டால், அந்த தகவலைப் பெறும் உரிமை, நமக்கு உள்ளது.உலகிலேயே கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்குத் தகுதியான ஊழலாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் பெயர் பெற்றுள்ளது. கிரிமினல் வழக்கு தொடுப்பதற்குத் தேவையான ஆவணங்கள் கிடைத்து விட்டன. ஊழலுக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் வழக்கை தாக்கல் செய்வேன். ஒவ்வொருவரின் பெயரும் செக்ஷன் 319ன் படி சேர்க்கப்படும். இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருப்பதில், தேசிய பாதுகாப்புப் பிரச்னையும் உள்ளடங்கியிருக்கிறது. இந்த ஊழலுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எடுத்துள்ள நடவடிக்கை, பெருமையளிப்பதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முதன் முதலாகக் கையில் எடுத்தவன் என்ற முறையில், இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் எனக்கு மகிழ்ச்சி. ஆனாலும், சி.பி.ஐ., விசாரணையில் எனக்கு உடன்பாடில்லை. அமைச்சர் மீது வழக்கு தொடர பிரதமரிடம் கோரியதற்கு, "சி.பி.ஐ., விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது' என்பது சரியான பதில் இல்லை. நிர்பந்தங்களால் தான் பிரதமர் மவுனம் சாதிக்கிறார்.
ராஜா, தமிழர் என்பதால் தான் வடமாநில முதலாளிகள் அவரை ஒழித்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில், ராஜாவால் லைசென்ஸ் வழங்கப்பட்டதில் தமிழர் யாரும் கிடையாது. ராஜாவால் தரப்பட்ட லைசென்ஸ் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்; ஊழலில் பயனடைந்தவர்கள் அனைவரும், சிறையில் தள்ளப்பட வேண்டும். இவை நடக்காவிட்டால், பிரதமர் ராஜினாமா கோரிக்கையை, நானும் வலியுறுத்துவேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயன் பெற்றவர்களால் ராஜாவின் உயிருக்கு ஆபத்து என்று நான் சொல்வதில் எந்த மாற்றமும் இல்லை. ராஜாவுக்கு இப்போதைக்கு பாதுகாப்பான இடம், சிறை மட்டுமே. இவ்வாறு ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கூறினார். பேட்டியின் போது, கட்சிப் பொதுச் செயலர் சந்திரலேகா உடனிருந்தார்.(dinamalar)
No comments:
Post a Comment