எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் வெளிவந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளிவந்தது. சமீபத்தில் திரைக்கு வந்த, "எந்திரன் திரைப்படத்தை பார்த்த என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம் என் படைப்பான "ஜூகிபா என்ற சிறுகதையை அப்படியே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
சமீபத்தில் நானும் அந்த படத்தை தியேட்டரில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என், "ஜூகிபா கதையை மூலக்கதையாக வைத்து, சினிமா சங்கதிகளான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து, "எந்திரன் படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்திய பத்திரிகை பதிவாளர் முன் பதியப்பட்ட, "இனிய உதயம் இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது, "ஜூகிபா கதையை படமாக்க, என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறவில்லை. மோசடி செய்து, லாபம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் இயக்குனர் சங்கர், 1997 - 98ல் தான் கற்பனை செய்தது போல் பொய்யாகக் கூறி, "எந்திரன் படத்தை உருவாக்கி, அவரே அதன் இயக்குனராக செயல்பட்டுள்ளார்.
இயக்குனரும், தயாரிப்பாளரும் சேர்ந்து கூட்டு சதி செய்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிட்டு, என் காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர். இந்திய காப்புரிமை சட்டத்தின்படி, கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இயக்குனர், தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment