Friday, September 7, 2012

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற சவுரவ் கங்குலி விருப்பம்


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட நான் தகுதியுள்ள நபராக பிசிசிஐ கருதினால், அந்த பணியை ஏற்க நான் தயார் என்று முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. சிறந்த பேட்ஸ்மேனும், மிதவேகப் பந்துவீச்சாளருமான இவர், இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட எனக்கு விருப்பம் உண்டு. நான் ஒரு சிறந்த பயிற்சியாளராக செயல்பட முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) கருதினால், என்னை பயிற்சியாளராக நியமிக்கலாம். நான் பயிற்சியாளர் பணியில் ஈடுபட தயாராக உள்ளேன்.
இந்திய அணியி்ல் உள்ள வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து, அவர்களின் பார்ம் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க என்னால் முடியும். நான் கிரிக்கெட்டில் இருந்து பெற்று கொண்டதை, பயிற்சியாளர் பணியின் மூலம் திரும்ப செலுத்த முடியும் என்று கருதுகிறேன்.
ஒரு அணியில் கேப்டனுக்கு முக்கிய பொறுப்பு உண்டு. அவர் தான் அணிக்காக சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். நான் சுமார் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அப்போது அணியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முடிவுகளை, சூழ்நிலைக்கு ஏற்றது போல நான் மாற்றி செயல்பட்டுள்ளேன்.
இது போன்ற சூழ்நிலைகளில் கேப்டனுக்கு, பயிற்சியாளர் பக்கபலமாக செயல்பட வேண்டும். பயிற்சியாளராக கங்குலி, டிராவிட், சச்சின், பிளெட்சர் என்று யாராக இருந்தாலும், அவர் அணியின் கேப்டனுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும்.
அடுத்த உலக கோப்பை தொடருக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. எனவே தற்போது இந்திய அணி பங்கேற்று வரும் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, தற்போதைய பயிற்சியாளர் பிளெட்சரின் ஒப்பந்தம் நீடிக்கப்படும்.
பயிற்சியாளர் பிளெட்சரிடம் இளம்வீரர்களை கொண்ட இந்திய அணி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. அதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும், அவருக்கு உதவ வேண்டும். அதன்மூலம் இந்திய அணி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பங்கேற்கும் போட்டிகளில் வெற்றி பெற முடியும்.
இதற்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட கேரி கிர்ஸ்டன், அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தார். அதுபோல பிளெட்சர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

2 comments:

  1. தாதா வரட்டும்... வெற்றிகளை குவிக்கட்டும்...

    ReplyDelete