நியூசிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20 போட்டியில், இந்திய அணி ஒரு ரன்னில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து பக்கம் அதிர்ஷ்டம் அடிக்க, வெற்றி பெற கிடைத்த நல்ல வாய்ப்பை, கடைசி பந்தில் இந்திய அணி கோட்டை விட்டது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இரண்டு "டுவென்டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. விசாகப்பட்டனத்தில் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இங்கு நடக்கும் முதல் சர்வதேச "டுவென்டி-20 போட்டி இது.
"டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பீல்டிங் தேர்வு செய்தார். நுரையீரல் "கேன்சரில் இருந்து மீண்ட யுவராஜ் சிங், நேற்று களமிறங்கினார். இந்திய "டுவென்டி-20 அணியில் 43வது வீரராக அறிமுகம் ஆனார் தமிழகத்தின் பாலாஜி.
திணறல் துவக்கம்:
நியூசிலாந்து அணிக்கு நிகோல், கப்டில் மோசமான துவக்கம் கொடுத்தனர். ஜாகிர் கான் வீசிய போட்டியின் முதல் ஓவரில், நிகோல் "டக் அவுட்டானார். இர்பான் பதான், கப்டிலை (1) வெளியேற்றினார்.
மெக்கலம் அரைசதம்:
பின் மெக்கலம், வில்லியம்சன் இணைந்தனர். இந்த ஜோடி இந்திய அணியின் பவுலிங்கை எளிதாக சமாளித்தது. ஜாகிர், பாலாஜி ஓவரில், மெக்கலம் தலா இரு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து அசத்திய இவர், யுவராஜ், அஷ்வின் சுழலில் இரு சிக்சர் அடித்து, தனது 9வது அரைசதம் கடந்தார்.
இர்பான் அபாரம்:
மூன்றாவது விக்கெட்டுக்கு 66 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்த நிலையில், ஒருவழியாக வில்லியம்சனை (28), இர்பான் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து அசத்தி இர்பான், மெக்கலத்தை, 91 ரன்னில் (55 பந்து) போல்டாக்கினார்.
பிராங்களின் (1) பாலாஜிடம் வீழ்ந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. டெய்லர் (25), ஜேக்கப் ஓரம் (18) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் இர்பான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
காம்பிர் ஏமாற்றம்:
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இம்முறை காம்பிருடன், விராத் கோஹ்லி துவக்கம் கொடுத்தார். மில்னே ஓவரில் இரு பவுண்டரிகள் விளாசினார் கோஹ்லி. காம்பிர் (3) அதிர்ச்சி கொடுத்தார். அவ்வப்போது பவுண்டரி அடித்த ரெய்னா, ஹிரா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இவர் 27 ரன்னில் மில்ஸ் வேகத்தில் வீழ்ந்தார்.
கோஹ்லி அரைசதம்:
அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த கோஹ்லி சர்வதேச "டுவென்டி-20 அரங்கில், இரண்டாவது அரைசதம் கடந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் களமிறங்கிய யுவராஜ் சிங், வந்த வேகத்தில் பவுண்டரி, சிக்சர் அடித்தார். வெட்டோரி பந்தில் சிக்சர் அடித்த கோஹ்லி, 41 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
திடீர் நெருக்கடி:
இதன்பின் வந்த தோனி பந்துகளை வீணடித்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். இதனால் அணியின் ரன்வேகம் குறைந்து, நெருக்கடி அதிகரித்தது. 12.4வது ஓவருக்குப் பின் 17.2 வது ஓவரில் தான் பவுண்டரி அடிக்கப்பட்டது. 42 பந்தில் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான நிலை மாறி, கடைசி 6 பந்தில், அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன.
இந்தியா தோல்வி:
பிராங்க்ளின் வீசிய இந்த ஓவரில் முதல் பந்தில் உதிரியாக ஒரு ரன் கிடைத்தது. அடுத்த பந்தில் தோனி பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்தில் "வைடு உட்பட 2 ரன்கள் கிடைத்தது. நான்காவது பந்தில் யுவராஜ் (34) போல்டானார். ஐந்தாவது பந்தில் ரோகித் சர்மா 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டன.
இதில் 2 ரன்கள் மட்டும் எடுக்கப்பட, இந்திய அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. தோனி (22 ரன்கள், 23 பந்து), ரோகித் சர்மா (4) அவுட்டாகாமல் இருந்தனர். "டுவென்டி-20 தொடரை 1-0 என, வென்ற நியூசிலாந்து அணி கோப்பை வென்றது.
யுவராஜ் சிங்கிற்கு வரவேற்பு
கேன்சரில் இருந்து மீண்ட யுவராஜ் சிங், 10 மாத இடைவெளிக்குப் பின், நேற்று மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்கினார்.
*சேப்பாக்கம் மைதானத்தின் ராட்சத "ஸ்கிரீனில் "வெல்கம் பேக் யுவராஜ் என, வரவேற்ற போது, ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
* தனக்கு மிகவும் பிடித்த 12ம் எண் கொண்ட "டி சர்ட் அணிந்து இருந்தார்.
* "ஸ்கொயர் லெக் திசையில் பீல்டிங் செய்த யுவராஜ் சிங், சற்று மந்தமாகவே காணப்பட்டார்.
* "பவர் பிளேயின் போது ஒரு பந்தையும் தடுக்காத இவர், பின் பிராங்க்ளினை சிறப்பாக "கேட்ச் செய்து அசத்தினார்.
* மெக்கலம் அடித்த பந்தை "கேட்ச் செய்ய முயன்ற இவரது கையில் பலத்த அடிபட, ஹர்பஜன் சிங் மாற்று வீரராக களமிறங்கினார்.
* கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு <உதவ, யுவராஜ் சிங் துவக்கிய "யுவிகேன் என்ற அறக்கட்டளையின், "ஒய் வடிவ "பேட்ஜை அனைத்து இந்திய வீரர்களும் அணிந்து இருந்தனர்.
மீண்டும் ஏமாற்றம்
நியூசிலாந்துக்கு எதிராக இதற்கு முன் பங்கேற்ற 3 "டுவென்டி-20 போட்டிகளிலும் இந்திய அணி தோற்றது. விசாகப்பட்டனம் போட்டி மழையால் ரத்தானது. நேற்று வெற்றி பெற கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட, தொடர்ந்து நான்காவது முறையாக இந்திய அணி தோல்வியடைந்தது.
--
No comments:
Post a Comment