இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் "டுவென்டி-20' போட்டி, இன்று நடக்கிறது. "கேன்சரில்' இருந்து மீண்ட யுவராஜ் சிங், இப்போட்டியில் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. இதில் 9 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்குகிறார் யுவராஜ் சிங். கடந்த 2011ல் உலக கோப்பை வென்ற பின், யுவராஜின் நுரையீரலில் "கேன்சர்' கட்டி ஏற்பட்டது. "கீமோதெரபி' சிகிச்சைக்குப் பின், மீண்ட இவர், கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். இவரது வரவு இளம் வீரர்களுக்கு தூண்டுகோலாக இருப்பது உறுதி.
வரும் செப்., 18ல் இலங்கையில் துவங்கும் உலக கோப்பை தொடர், சாம்பியன்ஸ் லீக் என, அடுத்தடுத்து "டுவென்டி-20' போட்டிகள் உள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தை இந்திய அணி வெற்றிகரமாக துவக்க முயற்சிக்கும்.
ஹர்பஜன் வருகை:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய "சீனியர்' ஹர்பஜன், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவரும், யுவராஜ் சிங்கும் 2007ல் இந்திய அணி உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்கள். இவர்களுடன், இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகள் தேடித்தரும் விராத் கோஹ்லி, துவக்க வீரர்கள் சேவக், காம்பிர், ரெய்னா, கேப்டன் தோனியும் கைகொடுக்கலாம்.
சமீபத்தில் தனது இடத்தை மனோஜ் திவாரியிடம் இழந்த ரோகித் சர்மாவுக்கு இன்று வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.
இர்பான் நம்பிக்கை:
பந்துவீச்சில் இலங்கைத் தொடரில் அசத்திய இர்பான் பதான், மூன்றரை ஆண்டுக்குப் பின் அணிக்கு திரும்பிய பாலாஜி, ஜாகிர் கான், டிண்டா ஆகியோர் அசத்த காத்திருக்கின்றனர். 2 டெஸ்ட் போட்டியில் 18 விக்கெட் வீழ்த்திய சுழற் பந்து வீச்சாளர் அஷ்வின், மீண்டும் தொல்லை தரலாம்.
வெற்றி வேண்டும்:
தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இழந்த நியூசிலாந்து அணி, கடைசியாக பங்கேற்ற மூன்று "டுவென்டி-20' போட்டிகளிலும் தோற்றது. உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நேரத்தில், இந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.
ஐ.பி.எல்., தொடரில் இந்திய ஆடுகளங்கள் குறித்து நன்கு அறிந்த மெக்கலம், அதிரடி துவக்கம் தரலாம். பிராங்க்ளின், கேப்டன் ராஸ் டெய்லர், கப்டில், நிகோல், வில்லியம்சன் ஆகியோர் அசத்த தயாராக உள்ளனர்.
வெட்டோரி பலம்:
டெஸ்ட் தொடரில் பங்கேற்காத வெட்டோரி, அணிக்கு திரும்பியது கூடுதல் பலம் தான். இவருடன் டிம் சவுத்தி, பிரேஸ்வெல், இலங்கை லீக் தொடரில் அதிக விக்கெட் (11) வீழ்த்திய "ஆல்-ரவுண்டர்' ஜேக்கப் ஓரத்துடன், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் திறமை வெளிப்படுத்த காத்திருக்கிறார்.
மறக்க முடியுமா
அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்ற யுவராஜ், 2007 ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பையில், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரு ஓவரில், ஆறு சிக்சர்கள் அடித்ததை மறக்க முடியாது. இன்றும் இவர் சாதிப்பார் என நம்பலாம். யுவராஜ் கூறுகையில்,""நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டி உட்பட மொத்தம் 7 போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது,"டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு தயாராக போதுமானது,'' என்றார்.
மழை வருமா
போட்டி நடக்கும் விசாகப்பட்டனத்தில், வெப்பநிலை அதிகபட்சம் 32, குறைந்த பட்சம் 27 டிகிரி செல்சியஸ் இருக்கும். இன்று இரவு இடியுடன் கூடிய மழை வர, 40 சதவீதம் வாய்ப்புள்ளது.
முதல் வெற்றி கிடைக்குமா
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இதுவரை மூன்று "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடியுள்ளன. இவை அனைத்திலும் இந்தியா தோற்றது. இன்று முதல் வெற்றி கிடைக்குமா என, எதிர்பார்க்கப்படுகிறது.
* அதிகபட்சமாக ஜோகனஸ்பர்க் போட்டியில் இந்திய அணி 180/9 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து 190 ரன்கள் எடுத்துள்ளது.
* வெலிங்டனில் இந்தியா, 149/6 ரன்கள், நியூசிலாந்து 150/5 ரன்கள் எடுத்தது தான், இரு அணிகள் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர்.
No comments:
Post a Comment