""கேன்சரில் இருந்து மீண்ட பின், நியூசிலாந்து அணிக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் விளையாடும் நாள், உலக கோப்பை பைனலை விட முக்கியமானது,'' என, யுவராஜ் சிங் கூறினார்.
2011ல் உலக கோப்பை வென்ற பின், யுவராஜின் நுரையீரலில் "கேன்சர்' கட்டி ஏற்பட்டது. சிகிச்øகுப் பின், கேன்சரில் இருந்து முழுமையாக விடுபட்டார். பத்து மாத இடைவெளிக்குப் பின், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய இவர், நியூசிலாந்து அணிக்கு எதிரான "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறார். மைதானத்தில் இவரை வரவேற்று பெரிய "பேனர்கள்' வைக்கப்பட்டு இருந்தன. இதில், " குட்பை கேன்சர், வெல்கம் சிக்சர்' என்றும், " தி கிங் ஆப் சிக்சர் பேக்' எனவும், தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில்,"" மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்குவது மகிழ்ச்சி. இத்தொடருக்காக நன்றாக தயாராகியுள்ளேன். ஆனால், மழையால் ரத்தானது துரதிருஷ்டவசமானது,'' என்றார்.
முக்கியமான நாள்:
முதன் முதலாக களமிறங்குவது குறித்து யுவராஜ் வெளியிட்ட "டுவிட்டர்' செய்தியில்,"" நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் நாள், உலக கோப்பை பைனலை விட முக்கியமான நாளாக இருக்கும். எனக்கு அன்பும், ஆதரவும் தந்து, வாழ்த்துக்கள் அனுப்பிய அனைவரையும் நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன்,'' என்றார்.
மற்றொரு செய்தியில்," நான் விரும்பிய இந்திய அணியின் "டி சர்ட்டை' விரைவில் அணியவுள்ளேன். இதற்காக அம்மா, நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஊக்கம் தந்த எல்லோருக்கும் நன்றி,' என்றார்.
கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பிய "டுவிட்டர்' செய்தியில்," களத்தில் இறங்கி விளையாடும் தினத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இதன் மூலம் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களிடம், விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறேன்,' என்றார்.
டாக்டருக்கு நன்றி:
மற்றொரு செய்தியில்," எனது வாழ்க்கையை மீண்டும் தந்து உதவிய டாக்டர்களுக்கு நன்றி. கிரிக்கெட்டுக்கு திரும்ப உதவிய இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), தேசிய கிரிக்கெட் அகாடமிக்கும் (என்.சி.ஏ.,) நன்றி,' என, தெரிவித்துள்ளார்.
பீட்டர்சன் வாழ்த்து:
யுவராஜ் சிங்கிற்கு இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் அனுப்பிய "டுவிட்டர்' செய்தியில்,""சிறந்த நண்பரான நீங்கள் மீண்டும் களமிறங்குவது பெருமை,'' என்றார்.
இதுபோல, ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லாவும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.
No comments:
Post a Comment