Monday, October 22, 2012

‌தடுக்க முடியுமா டெங்கு காய்ச்சலை


தடுக்க முடியுமா டெங்கு காய்ச்சலை:டெங்கு காய்ச்சலை பரப்புவதே கொசுக்கள் தான். பகல் நேரத்தில் மட்டுமே மனிதர்களை கடிக்கும், "ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலமே இக்காய்ச்சல் பரவுகிறது. பருவமழை காலத்தில் அதிகம் பரவும் இக்காய்ச்சல், ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.
அறிகுறிகள்: இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல் எலும்பு மூட்டுகள், இணைப்புகளில் கடும் வலியுடன் தொடர் காய்ச்சல் இருக்கும். தலைவலியும் சேர்ந்து இருக்கும்.உடல் வலியுடன் காய்ச்சல் இருந்தால், தாங்களாகவே மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக டாக்டரை ஆலோசிக்க வேண்டும்.
பரிசோதனைகள் என்ன:


டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை செய்யப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், வயதிற்கேற்ப 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை தட்டணுக்கள் இருக்க வேண்டும்.இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், சம்மந்தப்பட்டவருக்கு டெங்கு காய்ச்சல் இருக்க அதிக வாய்ப்பு இருக்கும். பின், காயச்சலை உறுதி செய்யும் மற்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மற்ற சிகிச்சைகள் தரப்படும்.
நிலைகள்:


டெங்குவில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். இதைத் தவிர, பெரிய பாதிப்பு இருக்காது.காய்ச்சல் குணமாகி, சில நாட்கள் கழித்து, மீண்டும் ஏற்பட்டால் அது இரண்டாவது நிலை டெங்கு என கருதப்படும். ரத்தம் உறைவதற்கான தட்டணுக்களின் எண்ணிக்கை இவர்களுக்கு குறைந்து விடும். வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தப்போக்கு ஏற்படும்.இதே நிலை முற்றினால், டெங்குவின் மூன்றாம் நிலை என கருதப்படும். இவர்களுக்கு ரத்தப் போக்கின் காரணமாக, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும். 
ரத்த அழுத்தம் மாறும். நாடித்துடிப்பு குறையும். மயக்க நிலையை அடையும் அபாயம் ஏற்படும். தோலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தோன்றும். டெங்கு தாக்கி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கு தான் பாதிப்பு அதிகம். உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும்.
தற்போது பாதிக்கப்பட்டோருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை.
முன்னெச்சரிக்கைக்கு என்ன செய்ய வேண்டும்



* நாட்கணக்கில் தண்ணீரை சேமிப்பு வைத்து, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* சேமிக்கும் தண்ணீரை, முறையாக மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.
* தண்ணீர் சேமிக்கும் தொட்டி, பாத்திரங்கø, ஆறு நாட்களுக்கு ஒரு முறை மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.
* வீடுகளைச் சுற்றி, மழை நீர் சேமிக்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக், டயர்கள், சிரட்டை போன்றவற்றை அகற்ற வேண்டும்.
* வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.
source

1 comment:

  1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

    நன்றி... நண்பர்களிடமும் பகிர்கிறேன்...

    ReplyDelete