Friday, December 3, 2010

தே.மு.தி.க., அழியாமல் இருக்க மக்கள் தான் காரணம்: விஜயகாந்த்



 ""நான்கரை ஆண்டுகளாக, தே.மு.தி.க., அழியாமல் இருப்பதற்கு மக்கள் தான் காரணம். மக்கள் இருக்கும் வரைக்கும். நான் அழிய மாட்டேன். நான் இருக்கும் வரை மக்களை அழிக்க விட மாட்டேன்''என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழகம் சார்பில், சிறந்த சமூகசேவை புரிந்ததற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் நடந்த விழாவில்,
ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழக நிர்வாகி ஜான் வில்லியம்ஸ், டாக்டர் பட்டத்தை விஜயகாந்திற்கு வழங்கினார். இதில் சென்னை ஏ.சி.ஐ.,- டையோசிஸ் தலைவர் ஜெயக்குமார், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கேப்டன் "டிவி' நிர்வாக இயக்குனர் சுதீஷ்,  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் ஏற்புரை வழங்கி விஜயகாந்த் பேசியதாவது:நீங்களே சிறுபான்மையினர், எனச் சொல்லி உங்களை சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் பெருபான்மையினர், என நிரூபிப்பதற்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளது.தி.மு.க., அரசு சிறுபான்மை மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என ஏசுநாதர் கூறினார். காரணம் எத்தனை தடவை அடித்தாலும், ஒரு நாள் கைவலிக்கும். அது போல் மக்கள் பொறுமையாகவுள்ளனர். அரசன் அன்று கொள்வான்;தெய்வம் நின்றுக்கொள்ளும்.நான் சிறுவயதிலேயே நன்மை செய்தவன்; தீமை செய்யவில்லை. கபடம் இல்லாதவன் பாக்கியசாலி என்று பைபிள் வசனம் கூறுகிறது. அதனால் நான் பாக்கியசாலி தான். இவ்வளவு பிரச்னைக்கு இடையில் எனக்கு, டாக்டர் பட்டம் கிடைத்துள்ளதற்கு தெய்வம் தான் துணை நிற்கிறது. இவ்வளவு நாட்கள் எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் இருப்பதற்காக சிலர் தடுத்தனர்.

 திருச்சபையை மீறி இந்த டாக்டர் பட்டம் எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. எல்லா மதங்களும் அன்பு, பண்பு, கருணை ஆகியவற்றை போதிக்கிறது. கூடாரங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். இலவசத்தை மக்களுக்கு கொடுத்து சோம்பேறி ஆக்குகின்றனர்.ஆலமர விழுதுகளாக எனது தொண்டர்கள், பொது மக்கள் எனக்கு பலமாக உள்ளனர். நான்கரை ஆண்டுகளாக, தே.மு.தி.க., அழியாமல் இருப்பதற்கு மக்கள் தான் காரணம். மக்கள் இருக்கும் வரைக்கும். நான் அழியமாட்டேன். நான் இருக்கும் வரை மக்களை அழிக்க விடமாட்டேன். தமிழகத்தில் ஊழலை அறுத்து, தூர எறிந்துவிட்டு, நோய்வாய் பட்டிருக்கும் மக்களுக்கு நல்வாழ்க்கை கொடுப்பதற்காகவே, எனக்கு இந்த டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சியை, நான் கொடுப்பேன்; என்னால் அது முடியும். முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம்; முடியும் என்பதே அறிவாளிகள் சொல்லும் வார்த்தை.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.(Dinamalar) 


No comments:

Post a Comment