""நாங்கள் யாரிடத்தில் அன்பு செலுத்துகிறோமோ, அந்த அன்பைப் பிரித்து, அந்த நட்பை பலவீனப்படுத்தி, அதன் காரணமாக பொறுப்பில் இருக்கிற எங்களை விரட்டி விடலாம் என்று கருதுகின்றனர். நேரு குடும்பத்திற்கும், எங்களுக்கும் பகை இருப்பது போல் சில புல்லுருவிகள் கதை கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
"நேரு கண்ட ஜனநாயகம்' என்ற தலைப்பில்,
1970ம் ஆண்டிலேயே கவிதை எழுதியவன் நான். சோனியா உள்ளிட்டோர் இந்த கவிதையை படித்துப் பார்த்தால், எங்களது உணர்வு புரியும்'' கடந்த மாதம் 28ம் தேதியன்று லயோலா கல்லூரி விழாவில் முதல்வர் கருணாநிதியின் பேச்சு இது. "நாங்கள் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதிலே மத்திய அரசை விட்டு விட்டு செயல்படுத்துவதில்லை. அவர்கள் எட்டடி பாய்ந்தால், நாங்கள் 16 அடி பாய்வோம். அந்த எட்டையும் கூட்டித்தான், 16 அடி என்பது எனக்குத் தெரியும். சேர்ந்தே 16 அடி பாய்வோம் என்று சொன்னபிறகுதான், அவர்களை நம்பி, சேர்ந்தேயிருக்கிறோம். சேர்ந்தே இருப்பது தீது என்று சொன்னால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம்; அவ்வளவுதான் சொல்ல முடியும்' கடந்த 24ம் தேதியன்று சென்னையில் நடந்த விவசாய அலுவலர்கள் மாநாட்டில் முதல்வரின் ஆவேச பேச்சு இது. நேருவுக்கு கவிதையெழுதியதையெல்லாம் ஞாபகப்படுத்தி, உறவைத் தொடர வேண்டிய, "யாசிப்பு' நிலையில் இருந்து, ஒரு மாத இடைவெளியில், "யோசிப்பு' நிலைக்கு தி.மு.க., தலைமை மாறியுள்ளதை வெளிப்படுத்துகின்றன இந்த பேச்சுக்கள்.காங்கிரஸ் நம்மை விட்டு விலகுகிறது; அ.தி.மு.க.,வுடன் அணி அமைக்க காய்கள் நகர்த்தப்படுகிறது என்ற சந்தேகம் சில மாதங்களாகவே தி.மு.க.,வுக்கு தொடர்ந்து வருகிறது. இந்த சந்தேகத்திற்கு உரம் போடுவது போல், "காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது' என ஜெயலலிதா அளித்த பேட்டியும், அடுத்த இரு நாட்களில் தமிழகம் வந்த சோனியா இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாய் திரும்பியதும் அமைந்தது. இதையடுத்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மத்திய அமைச்சர் ராஜாவுக்கு, "செக்' வைக்கப்பட்டது. "ராஜாவை விலக்குவதால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால், நாங்கள் ஆதரவு அளிக்கத் தயார்' என்று ஜெயலலிதா ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தினார். இருந்தாலும், ராஜாவின் ராஜ்யத்தை பாதுகாக்க தி.மு.க., தலைமை கடுமையான முயற்சிகளை எடுத்தது.
"எக்காரணத்தைக் கொண்டும் ராஜா, ராஜினாமா செய்யமாட்டார்' என்று முதல்வர் கருணாநிதி உறுதியாக தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கொடுத்த, "பிரசர்' கருணாநிதியின் உறுதியைத் தகர்த்தது; ராஜாவின் ராஜ்யம் பறிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் நம்மை ஒதுக்குகிறதோ என்ற சந்தேகம் மீண்டும் தி.மு.க.,வை வாட்டியது. ஆனால், மத்திய அமைச்சர் அழகிரி மகன் திருமண விழாவில், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, "அடுத்த மூன்றரை ஆண்டுகள் கூட்டணி தொடரும்' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் தி.மு.க., தலைமை நிம்மதியடைந்தது. ஆனால், இந்த நிம்மதியை குலைக்கும் வகையில், "சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் தான் கூட்டணி என்று பிரணாப் சொல்லவில்லையே' என்று காங்கிரஸ் தரப்பிலேயே பேச்சு எழ, மீண்டும் குழப்பம் தொடர்ந்தது. இதற்கிடையே, நேரு காலத்தில் துவங்கி, காங்கிரசோடு கழகம் பின்னிப் பிணைந்த வரலாற்றை சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு முதல்வர் கருணாநிதி அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டே வந்தார்.
"தி.மு.க., உறவை ராகுல் விரும்பவில்லை. தனது தமிழக பயணத்தின்போது, தி.மு.க., தலைவரை ஒரு முறை கூட சந்திக்கவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி அமைத்து போட்டியிட ராகுல் விரும்பகிறார். இதை இளைஞர் காங்கிரஸ் பாதயாத்திரை மற்றும் கார்த்தி சிதம்பரம், இளங்கோவன் மூலம் அவர் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்' கூட்டணி விவகாரத்தில் டில்லி காங்கிரஸ் தலைவர்களால் எவ்வளவோ உறுதிகள் தந்த நிலையிலும், தி.மு.க., தலைவருக்கு நம்பிக்கை ஏற்படாததற்கு இவையே காரணமாக முன்னிறுத்தப்பட்டன. இந்த தொடர் நிகழ்வுகளில், "லாஜிக்' இருப்பதாலும், சமீபத்தில் நடந்த வடமாநில தேர்தல்களில் ராகுல் எண்ணப்படியே தனித்துப் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது போன்றவற்றை காங்கிரஸ் மேற்கொண்டதால் தி.மு.க.,விற்கு உறுத்தல் தொடர்ந்தது. குறிப்பாக, பீகார் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், கணிசமான இடங்களை பெறுமானால், தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி உடையும் என்ற கருத்து பலப்பட்டிருந்தது. இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவில் காங்கிரஸ் படுபாதாளத்திற்குப் போனதால் தி.மு.க., தலைமை தெம்பானது. "இனிமேல் தமிழகத்தில் காங்கிரசுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை' என்ற தெம்பின் வெளிப்பாடுதான், "யாசிப்பு' நிலையில் இருந்த தி.மு.க.,வை, "யோசிக்க' வைக்கும் அளவுக்கு போர்க்குரல் எழுப்பச் செய்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.(dinamalar)
No comments:
Post a Comment