Tuesday, November 16, 2010

காந்திஜியின் பேத்திக்கு சேவை விருது




 மகாத்மா காந்தியின் பேத்தியும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவருமான எலா பட்-டுக்கு சேவை விருது வழங்கப்பட்டது.
உலக நேர்மையான முன்முயற்சி விருது என்ற இந்த விருதை பெரும் முதல் நபர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது.
நேர்மையுடன் கூடிய முன்முயற்சிக்கான உலக அமைப்பானது பிரின்ஸ் ஆப் வேல்ஸ் பவுண்டேஷன், என்பிசி யுனிவர்சல் ஆகியவற்றுடன் இணைந்து முதல்முறையாக இந்த விருதை வழங்கியுள்ளது. இங்குள்ள கென்னடி மையத்தில் விருதளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த விருதை வழங்கி பாராட்டிப் பேசினார்.
ஹிலாரி கிளிண்டன் தனது உரையில் கூறியதாவது:
மகாத்மா காந்தியின் பேத்தியான எலா பட் 1972-ம் ஆண்டு பெண்கள் சுயதொழில் சங்கத்தை துவக்கினார். நேர்மை, நியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் சுயதொழில் செய்து முன்னேற அனைத்து உதவிகளையும் இந்த சங்கம் செய்து தந்தது. பின்னர் அவர் சுயதொழில் செய்யும் மகளிருக்கென தனி கூட்டுறவு வங்கி, மகளிருக்கான இந்தியன் ஸ்கூல் ஆர் மைக்ரோ பைனான்ஸ் என்ற அமைப்பு ஆகியவற்றை நிறுவி அவற்றின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தினார். இவற்றின் மூலம் கடந்த 40 ஆண்டுகளாக பெண்கள் சுயமுன்னேற்றத்திற்காக பாடுபட்டுவருகிறார். இவரால் இந்தியாவில் மட்டுமல்லாமல் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர்.
உலக அளவில் பெண்கள் சுயமுன்னேற்றத்திற்காக பாடுபடும் முன்னோடியாக இவர் திகழ்ந்து வருகிறார். எனது கணவர் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவருடன் 1995-ம் ஆண்டு இந்தியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஆமதாபாத்தில் இவரை முதல்முறையாக சந்தித்துப் பேசினேன்.
பாரபட்சமான இந்த உலகில் நேர்மையையே முதலீடாக வைத்து ஏழைப்பெண்களை சுயமாக தொழில் தொடங்கச் செய்து அவர்களது கண்ணீரையும் பஞ்சத்தையும் போக்கச் செய்தவர் எலா பட். பெண்கள் ஆலையிலோ வேறு எங்குமோ பணிபுரிந்தாலும் தங்களது செயலில் நேர்மை, நியாயம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் இவர் கறாராக இருந்தார். இதனால் இவரது புகழ் பிற நாடுகளிலும் பரவியது. இவரது வழியை பின்பற்றி பல நாட்டு பெண்கள் தொழிலதிபர்களானார்கள். நேர்மையான ஒரு வர்த்தக சமூகம் உருவானது. உண்மையிலேயே இது ஒரு மெச்சத்தக்க அரிய முயற்சி.
வறுமை காரணமாக வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் பெண்கள் தைரியமாக சுயதொழில் தொடங்குதல், தங்கள் பிள்ளைகளை தங்கள் செலவில் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தல், தங்கள் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்குதல் என அவர்களுக்கு அரிய விஷயமாக இருந்தவற்றை துணிந்து செய்ய இவர் தூண்டுகோலாக இருந்தார். மாமியார் மெச்சும் மருமகளாக, கணவர், அண்டை அயலார் போற்றும் மங்கையர் குல மாணிக்கங்களாக பல லட்சம் பெண்கள் சமூகத்தில் நடமாட இவர் வழிவகுத்தார்.
ஏழை-பணக்காரர் இடையிலான ஏற்றத்தாழ்வை போக்கி சமதர்ம சமுதாயம் படைக்க காரணமாக இருந்தார். கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளையும் ஏழைப்பெண்களின் முன்னேற்றத்திலேயே தனது சிந்தையை செலுத்தினார் என்றார்.(dinamani)

No comments:

Post a Comment