
வரும் சட்டப் பேரவை தேர்தலிலும் திமுக & காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமணம் நேற்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள டெல்லியில் இருந்து வந்திருந்த பிரணாப் முகர்ஜி, மணமக்களை வாழ்த்தி பேசியபோது இந்த தகவலை தெரிவித்தார். அப்போது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உடனிருந்தார். இருவரும் தனி விமானத்தில் மதுரை வந்திருந்தனர்.
பிரணாப் முகர்ஜி பேசியதாவது: முதல்வர் கருணாநிதி குடும்பத்தில் புதிதாக ஒருவர் இணைந்துள் ளார். பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி ஆகியோர் இதில் பங்கேற்க முடியாததால் அவர்கள் சார்பில் நானும் சிதம்பரம், தங்கபாலு போன்றவர்களும் வந்திருக்கிறோம். கருணாநிதியின் குடும்பம் இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2004ல் ஏற்பட்ட காங்கிரஸ் & திமுக கூட்டணி ஆறரை ஆண்டுகளாக பலம் வாய்ந்த கூட்டணியாக சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறது. அடுத்த மூன்றரை ஆண்டுகளிலும் முன்னைவிட வலிமையுடன் இந்த கூட்டணி தொடரும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
முதல்வர் கருணாநிதி பேசும்போது கூட்டணி பற்றி கூறியதாவது: மத்திய அமைச்சர்கள் பிரணாப், சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் இங்கே வந்து வாழ்த்தியுள்ளனர். இரு பெரிய கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், தளகர்த்தர்கள் இங்கே கூடியுள்ளனர். இது நீடிக்க வேண்டும்; நீடிக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் வலிமையை பெருக்க, பெருமையை நிலைநாட்ட இந்த கூட்டணி எப்படி பயன்படப் போகிறது என்பது போல், துரை தயாநிதியும் அனுஷாவும் அவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கைக் கூட்டணி, நம் அனைவரின் வாழ்த்துகளுடன் நிலைபெற்று நீண்டகாலம் தொடர வாழ்த்துகிறேன்.
காங்கிரசின் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் நம் இயக்கத்தின் ஒற்றுமையை, கூட்டணியின் பிணைப்பை நிலைநாட்டியுள்ளோம். இது மணவிழாவாக இருந்தாலும், அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளோம். அதற்கு காரணகர்த்தாக்களாக விளங்கும் மதுரை மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்கி கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.(dinakaran)
No comments:
Post a Comment