Wednesday, December 1, 2010

லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி







 லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு நான் ஒரு "நெருப்பு' மாதிரி என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தனது சொத்துக் கணக்கு விவரங்களை வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் கருணாநிதி இதைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியில் உள்ளவர்களும், வேறு சில கட்சிகளின் நண்பர்கள் சிலரும், என்னைப் பற்றி குறிப்பிட்டுப் பேசும்போது எனது சொத்துகள் குறித்துப் பேசுகின்றனர்.
நான் ஏதோ "சல்லிக் காசு' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும், இன்றைக்கு ஆசியாவிலேயே முதல் பணக்காரனாக இருப்பதாகவும், எனது பெயரில் ஏராளமான சொத்துகளையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பது போலவும் பேசியும், எழுதியும் வருகிறார்கள்.
என்னைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும், அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் எனது சொத்துகள் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை.
வசதியுள்ள குடும்பம்: என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் குழந்தையாக இருந்தபோதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவுக்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்க திருவாரூரில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய அளவுக்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம்தான் என்னுடையது.
அதிக சம்பளம்: 1949-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் எழுத்தாளராகச் சேர்ந்தேன். அந்தக் காலத்திலேயே மாத சம்பளமாக ரூ.500 பெற்றேன். என்.எஸ்.கிருஷ்ணனின் "மணமகள்' திரைப்படத்துக்கு நான்தான் திரைக்கதை, வசனம் எழுத வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சம்பளமாக ரூ.10 ஆயிரம் பெற்றேன்.
இன்றுவரை 75 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதி சம்பளம் பெற்றுள்ளேன். 1957-ல் குளித்தலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றது முதல் இன்றுவரை பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன்.
"முரசொலி' நாளிதழும் எத்தனையோ ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது. குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை, "ரைசிங் சன்' ஆகிய இதழ்களும் நான் தொடங்கியவைதான்.
1967 முதல் 1969 வரை பொதுப்பணித் துறை அமைச்சராகவும், அதன்பிறகு 5 முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன்.
ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கிய வீடு: எல்லா முதல்வர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டில்தான் வாழ்ந்து வருகிறேன்.
சென்னை கோபாலபுரத்திலே உள்ள இந்த வீடு கூட, நான் அமைச்சராவதற்கு முன்பு ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கியதுதான். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டில் இடம் இல்லாததால் சொந்தமாக வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
அரசு சார்பில் உள்ள வீடுகளில் தங்க வேண்டும் என்று அழைத்தும், தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் ஒன்றில்தான் வசித்து வருகிறேன்.
வேறு எதையும் வாங்கியது இல்லை: என்னுடைய 87 வயதில் பல பொறுப்புகளில் இருந்தாலும், சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை; அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்குப் பெற்றுக்கொண்டதும் இல்லை.
ரூ.100 கோடி கிடைத்தது: முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, சன் டி.வி.யை தனியாக நடத்த விரும்புவதாக எனது பேரப் பிள்ளைகள் (கலாநிதி, தயாநிதி) என்னிடம் கேட்டனர். அவர்களின் விருப்பத்தையேற்று நானும் அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
அப்படி பிரிந்து சென்றபோது, சன் டி.வி. தரப்பில் 2005 அக்டோபரில் ரூ.100 கோடி வழங்கினார்கள். அதற்கான வருமான வரியாக ரூ.22.52 கோடியை நான் செலுத்தியுள்ளேன். எஞ்சிய தொகையை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன்.
அதிலே, எனக்கும் ஒரு பங்காக ரூ.10 கோடி கிடைத்தது. அதில் ஐந்து கோடியை இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கருணாநிதி அறக்கட்டளை' தொடங்கப்பட்டது. ஏழை, எளியோருக்கு மருத்துவ உதவியும், கல்வி உதவியும் இந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டியைக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது.
வங்கி இருப்பு ரூ.5 கோடி: இதில் எஞ்சிய ரூ.5 கோடியை வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தி, அதற்குக் கிடைத்த வட்டித் தொகை எல்லாம் சேர்த்து தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாய் உள்ளது.
நான் வசிக்கின்ற வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுப்பதாக அறிவித்தேன்.
தி.மு.க.விலே சென்னையில் முதன்முதலாக சொந்தமாக வீடும், காரும் எந்தப் பொறுப்புக்கும் வராதபோதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு.
இது என்னுடைய சொத்துக் கணக்கு. லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொருத்தவரையில் என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு "நெருப்பு' மாதிரி!
தவறுகள் மீது நடவடிக்கை: முதல்முறையாக முதல்வராக பதவியேற்றபோது, தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனது நண்பர் தவறு செய்தபோது நடவடிக்கை எடுத்தேன். அதனால், அவர் தனது வழக்கறிஞர் பணியே செய்ய முடியாமல் ஆனது.
"மாஸ்டர் ரோல்' ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப் பேரவையில் மாநகராட்சி கலைக்கப்படும் என்று அறிவித்து, அவ்வாறே செயல்படுத்தியுள்ளேன்.
எனக்கு மிகவும் வேண்டிய நண்பரான கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்வர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை.
நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல. என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும்.
என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார், உறவினர்கள் என அவரவர் உழைத்து ஒரு சிலர் தங்களுக்கு என வீடுகளையோ, சொத்துகளையோ வாங்கியிருக்கலாம். ஆனால், அதற்காக நான் எந்தவிதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதை நான் உறுதிப்பட கூறுகிறேன் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

உறவினர் சொத்து சேர்க்க உதவவில்லை...

* சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீடும், வங்கியில் உள்ள ரூ.5.65 கோடி மட்டுமே என்னுடைய
சொத்துகள்.
* உயர்நிலைப் பள்ளியில் படிப்பதற்காக திருவாரூரில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய அளவில் ஓரளவு வசதியுள்ள குடும்பம்தான் என்னுடையது.
* திரைக்கதை, வசனம் எழுதியதற்காக அந்தக் காலத்திலே அதிக சம்பளம் பெற்றவன்.
* தி.மு.க.விலே சென்னையிலே முதன்முதலாக சொந்தமாக வீடும், காரும் எந்தப் பொறுப்புக்கும் வராதபோதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு.
* சன் டி.வி.யில் இருந்து பிரிந்தபோது ரூ.100 கோடி கிடைத்தது. அதை எனது மகன்களுக்கும், மகள்களுக்கும் பிரித்துக் கொடுத்தேன்.
* முதல்வர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோதிலும், ஒரு வீட்டைத் தவிர, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ வாங்கியதில்லை.
* குடும்பத்தினர், உற்றார், உறவினர் தங்களது உழைப்பில் சொத்துகளை வாங்கியிருக்கலாம். அதற்கு நான் எந்தவிதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை.(dinamani)

No comments:

Post a Comment