Saturday, December 4, 2010

தி.மு.க., கூட்டணிக்கு இளைஞர் காங்., எதிர்ப்பு



 டில்லியில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியின் போது, "வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டாம்' என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலிடம், தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தியுள்ளனர். "கூட்டணி குறித்த முடிவை சோனியா அறிவிப்பார்' என, ராகுல் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் பாதயாத்திரை மேற்கொண்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம்,
இரண்டு நாள் நேர்காணல் நிகழ்ச்சி, டில்லி தீன்மூர்த்தி பவனில் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜிவ் சத்தவ், பொதுச்செயலர் ஜிதேந்தர் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, துணைத் தலைவர் வரதராஜன் உட்பட மாநில நிர்வாகிகள் எட்டு பேர், சென்னை மாவட்ட தலைவர்கள் ஆனந்த், ராம்குமார், ஜேம்ஸ் பிரகாஷ், காஞ்சிபுரம் புருஷோத்தம்மன், ராமநாதபுரம் கரு.சுப்பிரமணியம் உட்பட 39 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பேசும் போது, "வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டாம். ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்' என்று, வலியுறுத்தி பேசியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேர்காணலின் போது, ராகுலிடம் நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த 2006ல் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க., அரசு பெரும்பான்மை பெறவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க., ஒதுக்கி தந்த 42 தொகுதிகளில் 36 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கட்சி தலைமை வேட்பாளர் தேர்வில் ஏற்படுத்திய குளறுபடியும், தாமதமும் தான் ஆறு தொகுதிகள் பறிபோக காரணமானது.பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை மாநில அரசு குறைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில், முதல்வருக்கு கடிதம் தர வேண்டும். அதன்பின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.தமிழக அரசின் நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்.

ஆனால், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் ஆட்சி நிர்வாகம் இல்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விளை நிலங்கள் அனைத்தும் ஆளுங்கட்சியினரால், லே-அவுட் போடப்பட்டு விலை நிலங்களாக்கப்பட்டுள்ளது. லோக் சபா தேர்தலில் சோனியா, ராகுலை மையப்படுத்தியும், காங்கிரஸ் கட்சிக்காகவும் பொதுமக்கள் ஓட்டளிக்கின்றனர். ஆனால், சட்டசபை தேர்தலில் தமிழக காங்கிரஸ் தலைவரை மையப்படுத்தி தான் ஓட்டளிக்கின்றனர். எனவே மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவரை மாநில தலைவராக்கி, அவருக்கு உரிய அங்கீகாரத்தை மேலிடம் வழங்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டால், பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தோல்வி அடையும்.இவ்வாறு அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

நேர்காணல் நிறைவில் ராகுல் பேசியதாவது:தமிழகத்தில் 43 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க., அடிமட்டம் முதல் மேல் மட்டம் வரை அமைப்புகளை பலப்படுத்தியுள்ளது. அந்த கட்சிகளை போலவே காங்கிரஸ் கட்சியை உள்ளாட்சி, சட்டசபை, லோக் சபா தொகுதிகள் அளவில் பலப்படுத்த வேண்டும்.கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியும். காங்கிரஸ் ஆட்சி அமையும் வரை நான் தூங்க மாட்டேன்; ஓய மாட்டேன். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். யாருடன் கூட்டணி என்பதை சோனியா முடிவு செய்வார். தமிழகத்தில் நீங்கள் மேற்கெண்ட பாதயாத்திரை வெற்றி பெற்றுள்ளது.பாதயாத்திரையின் போது விடுபட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளை தேர்ந்தெடுத்து, அப்பகுதிகளில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி, அந்தந்த லோக் சபா தலைவர்கள், கிராமப்புறங்களில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு ராகுல் பேசினார்.

பட்டியல் தயார் : இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் காங்கிரசுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள் என 174 தொகுதிகள் பட்டியலிடப்பட்டு, ராகுலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளின் 40 ஆண்டு வரலாறு, காங்கிரசுக்கு உள்ள செல்வாக்கு, தற்போது தொகுதியில் உள்ள பிரச்னைகள், தற்போதைய எம்.எல்.ஏ., அமைச்சரின் செயல்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டணி காரணமாக, பல மாவட்டங்களில் காங்கிரஸ் செல்வாக்கை இழந்தது குறித்தும் விரிவாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(dinamalar)

No comments:

Post a Comment