Friday, May 27, 2011

பைனலுக்கு முன்னேறுமா சச்சின் அணி?

ஐ.பி.எல்., "பிளே ஆப்' சுற்றில் இன்று மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு தகுதி பெறும் என்பதால் ஆக்ரோஷமான மோதலை எதிர்பார்க்கலாம்.
நான்காவது ஐ.பி.எல்., தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய "பிளே ஆப்'

சுற்றின் கடைசி "நாக்-அவுட்' போட்டியில் சச்சினின் மும்பை அணியும், வெட்டோரியின் பெங்களூரு அணியும் சந்திக்கின்றன.
மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக உள்ளது. துவக்க வீரர் பிரச்னைக்கு பிளிஜார்டு முடிவு கட்டியுள்ளார். கோல்கட்டாவுக்கு எதிராக சச்சினுடன் இணைந்து அசத்திய இவர் அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தார்.
பிராங்க்ளின் அபாரம்:
 "மிடில் ஆர்டரில்' அம்பதி ராயுடு, ரோகித் சர்மா திடீரென சறுக்கலை சந்தித்து வருவது பலவீனமாகியுள்ளது. தவிர, போலார்டு இன்னும் "பார்முக்கு' திரும்பாதது அதிர்ச்சி தான். பிராங்க்ளினின் சமீபத்திய நங்கூரம் போன்ற உறுதியான ஆட்டம் தான், அணியை காப்பாற்றி வருகிறது. இன்றும் இவர் அசத்தும் பட்சத்தில், மும்பை அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு தகுதி பெறலாம்.
முனாப் அபாரம்:
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் மலிங்கா, முனாப் படேல் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளனர். சுழலில் ஹர்பஜன் சிங், குல்கர்னி போன்றவர்கள் தங்களால் முடிந்தளவுக்கு அசத்த காத்திருக்கின்றனர். இன்று எப்படியாவது கெய்லை துவக்கத்திலேயே பெவிலியன் அனுப்பினால், பெங்களூரு அணியின் ரன்குவிப்பை தடுக்கலாம்.
பேட்டிங் பலம்:
பெங்களூரு அணியின் பேட்டிங், கிறிஸ் கெய்லின் வருகைக்குப் பின் அபார வளர்ச்சி கண்டுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள கெய்ல் (519), இன்று ஏமாற்ற மாட்டார் என நம்பலாம். தவிர, சென்னைக்கு எதிரான போட்டியில் கெய்ல் கைவிட்ட பின்பும், 175 ரன்கள் குவித்தது, பின் வரிசை வீரர்களின் பேட்டிங் பலத்தை காட்டுகிறது.
இதில் விராத் கோஹ்லி (514), பாமர்ஸ்பச், சவுரப் திவாரி, டிவிலியர்ஸ் போன்றவர்கள் முக்கியமானவர்.
ஜாகிர் நம்பிக்கை:
 ஜாகிர் கானின எழுச்சி, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. இவரது சகா அரவிந்த் தன்பங்கிற்கு அசத்தலை தொடர்கிறார். சுழலில் அனுபவ கேப்டன் வெட்டோரி, அபிமன்யு மிதுன் போன்றவர்கள் மீண்டும் நம்பிக்கை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 கடந்த போட்டியில் பெங்களூரு பவுலர்கள் கடைசி 4 ஓவர்களில் மட்டும், 58 ரன்கள் வாரி வழங்கியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதை இன்று திருத்திக் கொள்வார்கள் என்று நம்பலாம்.
-------
பழி தீர்க்குமா
* ஐ.பி.எல்., தொடரில் மும்பை, பெங்களூரு அணிகள், இதுவரை 8 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 5ல் வென்றுள்ளது. மும்பை 3ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
* கடந்த 2010 ஐ.பி.எல்., அரையிறுதியில் மும்பை அணி, பெங்களூருவை 35 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறி இருந்தது. இதனால் இன்று மும்பை அணியை வென்று, பெங்களூரு பழி தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment