Friday, December 3, 2010

முதல்வருக்கு கிடைத்த சம்பளம் என்ன?ஜெயலலிதா புது தகவல்



 ""கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்பது மக்கள் அறிந்த விஷயம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதை தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க., என்பதை மறந்து, "கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தனது கணக்கை காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே பலமுறை பேசி இருக்கிறார். உண்மையை சொல்லப் போனால் கோவில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி. இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது, இவருக்கு கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்பது மக்கள் அறிந்த விஷயம்.இப்படிப்பட்ட கருணாநிதி, இப்போது திடீரென கணக்கு காட்டுகிறேன் என்ற தலைப்பில், தன் குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என புதிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.

1946ம் ஆண்டு ஜன., 16ம் தேதி கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்ப படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டுமனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து தன் வசம் நகை, பாத்திரம் வகையறா 1,000 ரூபாய் இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதி இருக்கிறார்.கருணாநிதி தன் அறிக்கையில் 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்ததாக கூறி இருக்கிறார். மணமகள் படத்திற்கு கதை வசனம் எழுதி 10 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும், இருவர் உள்ளம் படத்திற்காக 20 ஆயிரம் ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கருணாநிதிக்கு கோபாலபுரத்தில் ஒரு வீடு. சி.ஐ.டி., காலனியில் ஒரு பங்களா. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா. மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாளிகைகள், பண்ணை வீடுகள். அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள், வர்த்தகமாடி கட்டடங்கள், இன்ஜினியரிங் கல்லூரி உள்ளன. தமிழரசு, முத்து, கனிமொழி என அனைவரும் மாட மாளிகைகளில் பேரன்கள், பேத்திகள் உட்பட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆடம்பர மாளிகைகளும், ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக கருணாநிதி குடும்பம் விளங்கி கொண்டிருக்கிறது. கருணாநிதியின் பொய் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.(dinamalar)


No comments:

Post a Comment