Tuesday, February 22, 2011

தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க., சவால்


தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தி.மு.க.,வினர், இப்போதே பணப் பட்டுவாடாவை துவக்கிவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதை, தேர்தல் கமிஷன், எப்படி தடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள,
அனைத்து அரசியல் கட்சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கூட்டணியில், தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.தி.மு.க., அணியில், பா.ம.க.,விற்கு, 31 சீட்கள் வழங்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மத்தியில், "சீட்' எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறுவது தொடர்பான அறிவிப்பு, அடுத்த மூன்று நாட்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.தேர்தல் நேரத்தில் பண வினியோகத்தை தடுப்பது, ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு ரசீது வழங்குவது, கள்ள ஓட்டை தடுப்பது போன்ற ஆலோசனையில், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது ஒருபுறம் நடக்க, தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், தி.மு.க., தரப்பில் பணப்பட்டுவாடா துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதற்கட்டமாக, மாவட்ட செயலர்கள் மூலம், கிராமப்புறங்களில் உள்ள கட்சியின் கிளைச்செயலர்களுக்கு தலா, 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாகவும், 100 வாக்காளர்களுக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா, 3,000 ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், அவர்கள் மூலம் வாக்காளர்களை வளைக்கவும் இந்த பட்டுவாடா நடந்துள்ளதாக தகவல் கசிகிறது.தி.மு.க.,வின் இந்த பணப்பட்டுவாடா குறித்த தகவல், அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் தெரிந்துள்ளது.

இது குறித்து, சமீபத்தில் நடந்த ம.தி.மு.க., பொதுக்குழுவில் வைகோ கூறும்போது, "தி.மு.க.,வினர் பணப்பட்டுவாடாவை இப்போதே துவக்கிவிட்டனர்; இதை தடுப்பதற்கு தேர்தல் கமிஷனர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என தெரியவில்லை' என்றார்.

ஆனால், தி.மு.க., தொண்டர்களுக்கு வழங்கப்படும் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தரப்பில் எடுக்கப்படவில்லை. "பொதுமக்களுக்கு வழங்கும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்ற நினைப்பில் உள்ளதாக தெரிகிறது. இதை, தலைவர்கள் கண்டுக்கொள்ளாத நிலையில், அதை தடுக்க வழி தெரியாமல் எதிர்க்கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.

வடசென்னையில், தி.மு.க., சார்பில் பெண்களுக்கு, பல்வேறு இலவச பயிற்சிகள் அளித்து, தையல் இயந்திரம், மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடும், ஆர்.கே.,நகர் தொகுதியில் ரகசியமாக நடக்கிறது. இதற்கான பயனாளிகள் தேர்வும், தி.மு.க., சார்பில் நடந்து முடிந்துள்ளது.வரும் மார்ச் மாதம், துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளின் போது, இந்த இலவசப் பொருட்கள் வழங்கப்படும் என தெரிகிறது.தி.மு.க.,வினர், பணப்பட்டுவாடாவை துவங்கி உள்ள நிலையில், தேர்தல் கமிஷன் தூங்கி வழிந்துவருகிறது. இப்போதே அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால் மட்டுமே, உண்மையாகவே தேர்தல் கமிஷன் எதிர்பார்ப்பதை போன்று நடுநிலையான தேர்தல் நடக்கும். அதனால், பணப்பட்டு வாடாவை தடுக்கும் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை விரைந்து துவக்கவேண்டியது அவசியமாகியுள்ளது.(dinamalar)

No comments:

Post a Comment