Thursday, February 24, 2011

கருணாநிதிக்கு அடுத்த அடி - கைகோர்த்தது அ.தி.மு.க-தே.மு.தி.க

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது. அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதை அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பாக அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் தேமுதிக குழுவினர் வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினர். சுமார் ஒன்றேகால் மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக அணியில் கூட்டு சேர்ந்து தேமுதிக போட்டியிடும் என்று கூறினார்.
முதல் கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது என்றும் விரைவில் அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க. சார்பில் அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், மாநில இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே. சுதிஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
அதிமுக தரப்பில் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது:
இரு கட்சிகளும் வரும் பேரவைத் தேர்தலை சந்திப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் முதல் சுற்று பேச்சு சுமுகமாக நடந்தது. மீண்டும் அடுத்த சுற்று பேச்சு விரைவில் தொடங்கும்.
தமிழக மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியில் திரட்டி, தேர்தலைச் சந்திக்க உள்ளோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில்தான், மக்களின் விருப்பப்படி அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர தே.மு.தி.க. முன் வந்தது. இது வெற்றிக் கூட்டணி.
எத்தனை தொகுதிகள் முக்கியம் என்பதைவிட, தி.மு.க.வை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதே லட்சியம் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
தேமுதிக இதுவரை கடந்துவந்த பாதை: 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேமுதிக இதுவரை தனித்துதான் தேர்தல்களைச் சந்தித்து வந்தது. 2006 சட்டப்பேரவை பொதுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2009 மக்களவை தேர்தல் ஆகியவற்றிலும், இடையில் சில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களிலும் இக் கட்சி தனித்தே போட்டியிட்டு வந்தது.
மக்களுடனும் கடவுளுடனும்தான் கூட்டணி என்று கூறி தனித்தே தேர்தலைச் சந்தித்தார் இக் கட்சியின் தலைவர் விஜயகாந்த்.
திமுக, அதிமுக அணிகளுக்கு மாற்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இளைஞர்களின் ஆதரவு இக் கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படிப்படியாக இக் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்து சுமார் 10 சதவீத அளவில் இப்போது இருக்கிறது.
மாநிலம் முழுக்க பரவலாக வாக்கு வங்கி உள்ள கட்சி என்பதால், தேமுதிக ஆதரவைப் பெற்றால் கணிசமான தொகுதிகளை வெல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பு இரு அணிகளிலும் உள்ளது.
சேலத்தில் கடந்த ஜனவரியில் நடந்த மாநில மாநாட்டில் பேசிய விஜயகாந்த், திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும் என்று பேசினார். கட்சி நிர்வாகிகளும் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதே நல்லது என்று தலைமையை வற்புறுத்தி வந்தனர்.
ஜெயலலிதாவும் அவருடைய கட்சி நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று பேசி வந்தார்.
அதிமுக தலைவர்களுடன் தேமுதிக தரப்பினர் பல மாதங்களாகப் பேசி வந்தனர். இருந்தாலும் தேமுதிகவைத் தனித்துப் போட்டியிடவைக்க திமுக தரப்பில் முயற்சிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் பரவின. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுகவுடன்தான் கூட்டணி என்று இப்போது தேமுதிக அறிவித்துள்ளது.
அதிமுக அணியில் ஏற்கெனவே ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.
தேமுதிக தன் நிலையை அறிவித்ததைத் தொடர்ந்து திமுக அணியில் புதிதாக கட்சிகள் சேருவதற்கு வாய்ப்பு இருக்காது என்பதால் மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு சுறுசுறுப்பாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment