Tuesday, February 22, 2011

தினமணி தலையங்கம் உங்களுக்காக!




ஓருவழியாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணைக்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். ஆயினும், காலதாமதமாக இந்த அறிவிப்பை வெளியிட்ட அவரைப் பாராட்ட நமக்கு மனம் வரவில்லை.
ஜேபிசி அறிவிக்கவில்லை என்றாலும் குறை சொல்கிறீர்கள், அறிவித்தாலும் பாராட்ட மாட்டேன் என்கிறீர்கள் என்று நினைக்கலாம். அதற்குக் காரணம் இருக்கிறது.
"சாப்பாடு போடுங்கள்' என்று வீட்டில் உள்ள எல்லோரும் கேட்கும்போதே சுடச்சுடப் பரிமாறாமல், "பசிக்குது பசிக்குது' என்று கத்தி ஓய்ந்த பின்னர், பார்த்தவர்களும்கூட இப்படியும் இரக்கம் இல்லாமல் இருக்கிறாரே என்று முணுமுணுத்து ஓய்ந்த பின்னர், அடுத்தவேளை சாப்பாட்டுக்கான நேரம் வந்துவிட்ட பிறகு, "சரி வந்து சாப்பிட்டுத் தொலையுங்கள்' என்று ஆறிப்போன சோறு, குழம்பை எடுத்துப் பரிமாறினால் எப்படியிருக்கும்? அதைப் போன்றதுதான் இதுவும்.
"எங்களது முழுமுனைப்பான நடவடிக்கைகளுக்குப் பின்னரும் எதிர்க்கட்சிகள் மனம் மாறவில்லை என்பதாலும், பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தாக வேண்டும் என்பதாலும் இந்தக் கோரிக்கையை ஏற்கிறோம். இது வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல' என்றெல்லாம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் பிரதமர். பா.ஜ.க.-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி வருத்தம் தெரிவித்திருப்பதைப்போல, இந்த அறிக்கை இன்னும் கொஞ்சம் பெருந்தன்மையுடன் இருந்திருக்கலாம்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு தொடர்பாகக் கேள்விகள் கேட்டபோதெல்லாம் ஊழலை ஒழிக்க எல்லாவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டிருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட பிரதமர், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் முன்போ அல்லது ஜேபிசி முன்போ ஆஜர் ஆவதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க மட்டும் இத்தனை காலம் தள்ளிப்போட்டது ஏன்? இப்போது ஒப்புக்கொள்வது ஏன்? இதனால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய முடியுமா என்பதுபற்றி அவர் ஏன் பேசவில்லை?
25 ஆண்டுகால நடைமுறையில் இல்லாதபடியாக 23 நாள்கள் தொடர்ந்து, ஒரு குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் நடைபெறாமல் முடங்கிப்போன பிறகு, இப்போது அதே நிலைமை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ஏற்படும் என்ற சூழல் நிலவும் காரணத்தால், வேறு வழியின்றி நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இன்னும் 6 மாத காலம் இடைவெளி இருக்கும் என்றால், அதுவரை கவலையில்லாமல் இதுபற்றி எந்தப் பதிலும் சொல்லாமல் காலதாமதம் செய்திருப்பார் என்பதுதானே நிஜம்?
ஒரு நிதியாண்டில் மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்பட்டாக வேண்டும். குறைந்தபட்சம் 83 நாள்கள் நடைபெற வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்காக, மக்களவை உறுப்பினர்கள் சம்பளம், படி உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து ஆண்டுக்கு ரூ. 527 கோடி ஒதுக்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு ரூ. 6.35 கோடி. சென்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இரு அவைகளும் முடங்கி, செயலிழந்த காரணத்தால் மக்கள் பணம் ரூ. 146 கோடி வீணாகிப்போனது. எதிர்க்கட்சிகள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்று சில நாள்களுக்குள் உணர்ந்துகொண்டு இதை அப்போதே அறிவித்திருந்தால், குளிர்காலக் கூட்டத்தொடரின் அலுவல்கள் குறைந்தபட்சம் 15 நாள்களாவது நடைபெற்றிருக்குமே!
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்துகின்றன என்று குற்றம்சாட்ட அரசு முயன்றதே தவிர, தனது தவறுகள்தான் அதற்குக் காரணம் என்று உணர மறுத்தது ஏன்? இதுபோன்ற "மெகா' ஊழல்கள் அரங்கேறும்போது, நாடாளுமன்றக் கூட்டம் நடப்பதுதான் முக்கியம் என்று அந்த ஊழல்களைப் பற்றிய முறையான விசாரணை கோராமல் இருப்பதுதான் எதிர்க்கட்சிகளின் கடமையா? எதிர்க்கட்சிகள் மௌனமாக இருந்திருந்தால் பிரதமர் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க முன்வந்திருப்பாரா?
ஜேபிசி அமைக்க பிரதமர் காட்டிய தயக்கத்தின் விளைவு அரசுக்குக் கெட்ட பெயர் என்பது ஒருபுறம் இருக்கட்டும், காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று, இந்த ஊழலுக்குக் காரணமான சுரேஷ் கல்மாடியே கோரிக்கை வைக்கிற அளவுக்குக் கேலிக்குரிய விஷயமாக ஜேபிசி மாறியது என்பதுதான் வருத்தம் அளிப்பதாகும்.
போஃபர்ஸ் ஊழல் பிரச்னையின்போதுதான் அதிகபட்சமாக, நாடாளுமன்றம் தொடர்ந்து 45 நாள்களுக்கு எந்தப் பணிகளும் செய்யமுடியாதபடி முடங்கிப்போனது. அதுவும்கூட ஊழலை முன்னிறுத்தி, விளக்கம் கேட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம். ஆனால், ஸ்பெக்டரம் விவகாரம் அப்படியல்ல. இந்த ஊழல் குறித்து அரசு விளக்கும் முன்பாகவே, நவம்பர் 9-ல் கூட்டத்தொடர் தொடங்கிய இரு தினங்களிலேயே தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் மிகத் தெளிவாகத் தனது அறிக்கை மூலம் விளக்கிவிட்டார். இதற்குக் காரணமான அன்றைய அமைச்சர் ஆ. ராசா நவம்பர் 14-ம் தேதி பதவி விலகிவிட்டார். அதன் பிறகாவது இந்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க ஒப்புக்கொண்டிருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும். பிரதமர் தன் பதவியைக் கௌரவப்படுத்தியதாக அமைந்திருக்குமே...
இன்று எல்லா ஒப்பனைகளும் கலைந்துபோன பின்னர் ஒத்திகையை நடத்தலாம் என்பதன் மூலம், அப்பாடா என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுக்கு வழியேற்பட்டிருக்கிறதே தவிர, வேறொன்றும் இல்லை.
மிக உயரிய பொறுப்பில் உள்ளவரின் திறமை என்பது அந்த நேரத்துக்குத் தேவையான முடிவைச் சரியாகவும் விரைவாகவும் மேற்கொள்வதில்தான் இருக்கிறது. அதற்காக, அதிவேகமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படுவதும் எப்படித் தவறோ அதேபோன்றதுதான் இவ்வளவு நிதானமாகச் செயல்படுவதும்.
எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லும் பிரதமர், ஊழலிலும், முறைகேடுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று ஆக்ரோஷமாகப் பேட்டியளிக்கும் பிரதமர், "மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை' என்று சொல்லும் பிரதமர் ஊடகங்களும் உச்ச நீதிமன்றமும் கிடுக்கிப்பிடி பிடித்த பிறகு நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு ஒப்புக்கொண்டிருப்பது ஆளும் கூட்டணிக்கும், அதன் பிரதமருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் கௌரவம் சேர்க்காது.
காலையில் கூவ வேண்டிய சேவல் மாலையில் கூவியிருக்கிறது. சேவல் ஊமையல்ல, கூவுகிறது என்று ஆறுதலடைந்து கொள்ளலாம்.
நன்றி:தினமணி 

No comments:

Post a Comment