"தி.மு.க.,வினரின் வன்முறை செயல்களைத் தடுக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தே.மு.தி.க., தொண்டர்கள், பல இடங்களில் குறிவைத்து
தாக்கப்படுகின்றனர். திருவாரூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தில், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த தங்கவேலு குடும்பத்தார் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். வேடசந்தூர் தொகுதியில், தி.மு.க.,வினர் தாக்கியதில், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த மூன்று தொண்டர்கள் காயமடைந்து உள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில், தே.மு.தி.க., கிளைச் செயலரின் ஆட்டோவை, தீ வைத்து கொளுத்தியுள்ளனர். காரைக்கால் தெற்கு தொகுதி வேட்பாளர் அசனா வீட்டை, தி.மு.க.,வினர் தாக்கியுள்ளனர்.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலை நீடித்தால், ஓட்டுஎண்ணிக்கை தினமான மே 13ம் தேதி, தி.மு.க.,வினரின் வன்முறைச் செயல்கள் யூகிக்க முடியாத அளவுக்கு அதிகரித்து விடும். எனவே, வன்முறையில் ஈடுபடும் தி.மு.க.,வினர் மீது, நடிவடிக்கை எடுக்க வேண்டும். தே.மு.தி.க., தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தி.மு.க., காபந்து சர்க்காராக இருக்கும் இந்த நேரத்தில், போலீசார் தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் அளிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment