Monday, May 30, 2011

அரசு பணத்தில் ஒரு நையா பைசா கூட எடுக்க மாட்டேன்: விஜயகாந்த்


:""ரிஷிவந்தியம் தொகுதியில், நலத்திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கும் மக்கள் பணத்தில், ஒரு நையா பைசா கூட எடுக்க மாட்டேன்'' என்று, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது:என்னை தேர்ந்தெடுத்த உங்களுக்கும், அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் நன்றி. உங்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகள்
அனைத்தையும் நிறைவேற்றுவேன். அதற்கு குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும். ஐந்து ஆண்டுக்குள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்.மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மாற்றி மேம்பாலம் கட்டுவேன். ஒரு கட்சியின் தலைவர் என்பதால், என்னால் அடிக்கடி இங்கு வரமுடியவில்லை என்றால் கூட, உங்களின் தேவைகளை அறிந்து கடமையாற்றுவேன்.

நான் இங்கு வருவதில்லை என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்வர். இவர்கள் 15 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருந்து என்ன செய்தார்கள். எம்.எல்.ஏ., அலுவலகம் இங்கு இல்லையே என்ற கவலை வேண்டாம். தற்காலிகமாக திருக்கோவிலூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அங்கு பெறப்படும் புகார்கள் உடனடியாக எனது பார்வைக்கு வரும். அதன் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன்.எனது தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற, அரசு ஒதுக்கும் பணத்தில் ஒரு நையா பைசா கூட நான் எடுக்க மாட்டேன். முழு தொகையும் உங்கள் நலனுக்காக செலவு செய்யப்படும். எனக்கு நீங்கள் கொடுத்ததே போதும். ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் விரைவில் புதிய எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்படும். அதுவரை, திருக்கோவிலூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் உங்களின் குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.

No comments:

Post a Comment