Tuesday, June 21, 2011

கண்ணீர் விட்ட கருணாநிதி!


தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக
15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம், கனிமொழியின் ஜாமின் மனுவை நிராகரித்து விட்டது. இதையடுத்து, தி.மு.க., தலைவரான கருணாநிதி தன் மகளை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவு செய்தார். நேற்று காலை சென்னையிலிருந்து, விமானம் மூலம் டில்லி வந்து இறங்கினார். நேராக, டில்லி லீலா கெப்பின்ஸ்க்கி என்ற ஓட்டலுக்கு அவரது கார் விரைந்தது. அங்கு, மாலை வரை கருணாநிதி ஓய்வெடுத்தார். மாலை 4 மணிக்கு ஓட்டலை விட்டு கிளம்பிய அவர், திகார் சிறைக்குள் 4.50 மணிக்கு நுழைந்தார். அவரது காரில் ராஜாத்தியும், அழகிரியும் இருந்தனர். கருணாநிதியோடு துரைமுருகன், வேலு, பொன்முடி, சண்முகநாதன் உள்ளிட்ட பலரும் உள்ளே சென்றனர். உடன் சென்ற டி.ஆர்.பாலு மற்றும் விஜயன் ஆகியோர், சிறைக்கு வெளியே நின்று கொண்டனர். கருணாநிதி சந்திக்க வருவதையடுத்து, 6ம் எண் சிறையில் உள்ள கனிமொழி, தயார் நிலையில் இருந்தார். 4ம் எண் சிறையில் உள்ள சரத்குமாரும், ஒன்றாம் எண் சிறையில் உள்ள ராஜாவும், கனிமொழியின் 6ம் எண் சிறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். 15 நிமிடங்களுக்கு முன்பே இவர்கள் மூவரும், கருணாநிதியின் வருகைக்காக காத்திருந்தனர்.

முதலில் கனிமொழியுடன், கருணாநிதி மற்றும் ராஜாத்தி ஆகியோர் மட்டும் கொண்ட சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, கனிமொழியை கண்டதும், கருணாநிதி மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. தன் கறுப்புக் கண்ணாடியை கருணாநிதி கழற்றியுள்ளார். அப்போது, அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்ததைக் காண முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிமொழிக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய கருணாநிதி, அடுத்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்தார். அந்த இருவருக்கும் ஆறுதல் வார்த்தைகளை கருணாநிதி கூறினார். பின்னர், இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு, திகார் சிறையை விட்டு 5.45 மணிக்கு, கருணாநிதியின் கார் வெளியில் வந்தது. திகார் சிறையின் நான்காம் எண் நுழைவாயில் வழியாக நுழைந்த கார், அதே நுழைவாயிலிலிருந்து வெளியே வந்தது. கார் நேராக, கருணாநிதி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்தது.

நேற்று காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தங்கியிருந்த கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வந்து சந்திக்கவில்லை. கடந்த முறை டில்லிக்கு வந்தபோது சிதம்பரம், குலாம்நபி ஆசாத், நாராயணசாமி ஆகியோர் வந்து சந்தித்து பேசிவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளர் என்ற குற்றச்சாட்டை சுமந்து, டில்லி திகார் சிறையில் தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி இருந்து வருகிறார். சி.பி.ஐ., கோர்ட், டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் என மூன்று இடங்களிலுமே அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும், குறைந்தது 40 நாட்கள் வரையிலாவது சிறையில் இருக்கப் போவது உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment