Friday, September 30, 2011

நன்றி மறவாத நல் உள்ளம் வேண்டும்: விஜயகாந்த் பேச்சு


 நன்றி மறவாத நல் உள்ளம் வேண்டும்.அதுதான் சம்பாத்தியம், மூலதனம் என்று நாகையில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

நாகை,அபிராமியம்மன் திடலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இரவு விஜயகாந்த் பேசியதாவது: இந்தியா
சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளாகியும், சாலைகள் மோசமாக உள்ளது. மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இல்லை. பள்ளிக் கூடங்களுக்கு கட்டடங்கள் இல்லாத நிலைதான் உள்ளது.லஞ்சம், ஊழலை ஒரு போதும் தே.மு.தி.க., ஆதரிக்காது.எங்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளும் ஊழலை தட்டிக் கேட்கும்.நான் இனிமேல் சம்பாதித்து மாளிகை கட்டி சொகுசாக வாழப் போவது இல்லை.எனக்கு பணம் என்பது முக்கியமில்லை. நீங்கள் கொடுத்தது என்னிடம் தேவையான அளவு உள்ளது. அதிகாரத்தில் இல்லாதப் போதும் மக்களுக்கு பல நலத்திட்டங்களை தே.மு.தி.க., செய்து வந்தது.இனிமேலும் செய்யும் .சட்டசபையில் எங்கள் பணியை சரியாக செய்கிறோம்.

சமச்சீர் கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு வேண்டும் என்று பேசினேன். எங்கள் வேட்பாளர்கள் இளையவர்கள். இளைய சமுதாயம் தவறு செய்யாது. ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்.சட்டசபையில் அன்று ஒரு எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.,க்கள். நாளை என்ன என்பதை மக்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன். நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. உள்ளாட்சி என்பது உங்களுடைய ஆட்சி.

நன்றி மறவாத நல் உள்ளம் வேண்டும். அதுதான் எனது சம்பாத்தியம், மூலதனம். காலம் மாறும். யானைக்கும் அடி சறுக்கும். அன்றும், இன்றும், என்றும் தெய்வத்துடனும், மக்களுடனும் தான் எனது கூட்டணி. தெய்வம் நேரில் வராது.மக்கள் உருவில் வரும்.தவறு செய்யும் அதிகாரிகளும், அமைச்சர்களும் வேண்டாம் என்றால் ஓட்டை மாற்றிப் போடுங்கள். அப்போது தான் தவறு செய்பவர்களுக்கு பயம் வரும். தேர்தலில் தே.மு.தி.க., வினருக்கும் எங்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களுக்கும் ஓட்டு போடுங்கள்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

No comments:

Post a Comment