Tuesday, August 16, 2011

ஹசாரே சிறையில் அடைப்பு:ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு நடுங்குகிறது அரசு

:வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க கிளம்பிய அன்னா ஹசாரேயை, அதிகாலையில் போலீசார் அவர் தங்கியிருந்த இடம் தேடிப் போய் கைது செய்தனர். அது மட்டுமல்லாது, ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கல்மாடி, ராஜாவுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதைக் கேட்டு அனைத்து தரப்பு மக்களும், அரசின்
செயல் நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை கண்டு நடுநடுங்கிப் போயுள்ள அரசு, அடுத்த நடவடிக்கை எடுப்பதில் திணறி வருகிறது.
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும், சுதந்திர தினத்திற்கு மறுநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.நேற்று முன்தினம் ராஜ்காட் சென்று, காந்தி சமாதி முன் பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பியவுடன், நிருபர்களை சந்தித்து ஹசாரே பேட்டியளித்தார்.அந்த பேட்டியை முடித்துக்கொண்டு, மயூர் விகாரில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் போய் ஹசாரே தங்கியிருந்தார். அதை தெரிந்து கொண்ட டில்லி போலீஸ், அன்றிரவே மயூர் விகார் பகுதி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியது.
அதிகாலை 7 மணியளவில், டில்லி போலீசின் உயர் அதிகாரி ஒருவர், ஹசாரே தங்கியிருக்கும் சுப்ரீம் அப்பார்ட்மென்ட்ஸ் வீட்டுக் கதவை தட்டினார். ஹசாரேயிடம், தங்களது திட்டம் என்ன என்று கேட்டார். நான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவிற்கு உண்ணாவிரதம் இருக்க கிளம்புகிறேன் என்று கூறினார்.அங்கு தடையுத்தரவு உள்ளது என்று போலீஸ் சொல்ல, அதை மீறப்போவதாகவும் ஹசாரே கூற, உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடு செய்த மைதானத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹசாரே கைது செய்யப்படுவதற்கு முன், அவரது வீட்டின் முன்பாக ஏராளமானோர் கூடியிருந்தனர்; ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஹசாரேயை மிகுந்த பாதுகாப்புடன் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.அவருடன் தங்கியிருந்த, மகசேசே விருது பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். இவர்கள், டில்லியில் உள்ள சிவில் லைன்ஸ் ஆபீசர்ஸ் மெஸ்சில் தங்க வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், ராஜ்காட் பகுதியில் மற்றொரு முக்கிய உறுப்பினர் கிரண் பேடியும் கைது செய்யப்பட்டார். அதேபோல, மூத்த உறுப்பினர் சாந்தி பூஷனும் கைது செய்யப்பட்டார். சி.ஆர்.பி.சி., பிரிவு 161 மற்றும் 107 ஆகியவற்றின் கீழ், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் நேற்று மாலை, கிரண் பேடியும், சாந்தி பூஷனும் திடீரென விடுவிக்கப்பட்டனர்.போலீசாரிடம் ஊரடங்கு சட்டத் தடைப் பிரிவில் கைது செய்திருக்கின்றனரா என்று விளக்கம் கேட்டு, அதற்குரிய ஆதாரம் கேட்டதால் கிரண் பேடியை போலீசார் விடுவித்தனர் என்று கூறப்பட்டது.
சாந்தி பூஷன் மீது தடை உத்தரவு மீறல் குற்றச்சாட்டு இல்லை என்று விடுவித்தனர்.ஹசாரே கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி ஏராளமான பொதுமக்கள் திரள ஆரம்பித்தனர். நேரம் ஆக ஆக பதட்டம் அதிகரித்தது. மழையை பொருட்படுத்தாமல் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரளத் துவங்கினர். ஊடகங்களும் குவிய ஆரம்பிக்கவே, பெரும் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ளதால், இதை பார்த்து மத்திய அரசு நடுநடுங்கி போயுள்ளது.பா.ஜ., இடதுசாரிகள், சமாஜ்வாடி கட்சி ஆகிய எல்லா எதிர்க்கட்சிகளும், அன்னா ஹசாரே கைதை எதிர்த்து பார்லிமென்டில் குரல் எழுப்பியதால் அதன் நடவடிக்கைகள் முடங்கின. அவசர கால நிலைமை இது என்று அவர்கள் அரசை குறை கூறினார்.
திகார் சிறை: நேற்று பதட்டமான சூழ்நிலையில் ஆபீசர்ஸ் மெஸ்சிற்கு நீதிபதிகள் சென்றனர். அங்கு, ஹசாரேயிடம் உறுதிமொழி கேட்கப்பட்டது. 144 தடையுத்தரவை மீற மாட்டேன் என்று உறுதிமொழி அளித்து, கையொப்பம் இடும்படி நீதிபதிகள் கேட்டனர். அதற்கு ஹசாரே உறுதியுடன் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனால், வேறு வழியின்றி ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, அன்னா ஹசாரே குழுவினர், ரஜவ்ரி கார்டன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கிருந்து பின்னர் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை எண் 4ல் ஹசாரேயும், சிறை எண் 1ல் அரவிந்த் கெஜ்ரிவாலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி ராஜா, கனிமொழி, கல்மாடி உள்ளிட்டோர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். அதே சிறையில், ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த அன்னா ஹசாரேயும், அவரது குழுவினரும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, மும்பை, நாக்பூர், கவுகாத்தி, ஜம்மு, புவனேஸ்வர், பாட்னா, புதுச்சேரி உட்பட நகரங்களில் போராட் டங்கள் நடந்தன. டில்லியில் மட்டும் 1,400 பேர் போராட்டங்களில் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதால், எந்த நேரமும் ஹசாரே விடுவிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக நேற்றிரவு கூறப்பட்டது.
விடுதலை; ஆனால் இல்லை:அன்னா ஹசாரே விவகாரத்தில், நேற்றிரவு பரபரப்புத் திருப்பங்கள் ஏற்பட்டன. திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஹசாரேவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும், இரவு உணவு வழங்கப்பட்டதாகவும், அதை அவர்கள் ஏற்க மறுத்து விட்டதாகவும், தகவல்கள் வெளியாயின.இதனால், திகார் சிறைக்கு வெளியில், நேற்றிரவு ஆயிரக்கணக்கான மக்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஹசாரேயை வரவேற்பதற்காகக் காத்திருந்தனர்.
இதற்கிடையில் போராட்டங்கள் வலுக்கவே, ஹசாரேயை விடுவிக்க அரசு உத்தரவிட்டது. இருப்பினும், சிறையை விட்டு வர ஹசாரே மறுத்தார். தான் வெளியே வரவேண்டுமானால் திரும்பவும், உண்ணாவிரதம் இருக்க நிபந்தனையற்ற அனுமதியை அரசு அளிக்க வேண்டும், என ஹசாரே தெரிவித்ததாக கூறப்படுகிறது.-நமது டில்லி நிருபர்-(thanks-dinamalar)

No comments:

Post a Comment