Wednesday, October 5, 2011

சென்னை அணி விரைவில் வெளியேறியது நல்லதே: தோனி

சாம்பியன்ஸ் லீக் 20-20 போட்டித் தொடரில் தோல்வியுற்று விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது நல்லதற்கே என்றார் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி.

இதற்குக் காரணமாக அவர் சுட்ட்டிக்காட்டியது, வரும் அக்டோபர் 14ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்குத் தயாராக நல்ல இடைவெளி கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
இந்த சாம்பியன்ஸ் லீக் 20-20 தொடரில் தோல்வியுற்று விரைவில் வெளியேறியது மட்டுமல்ல, நடப்பு சாம்பியனாக இருந்துகொண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளப்பட்டது சென்னை ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதே ஏமாற்றத்தை தோனி வெளிக்காட்டினாலும், அடுத்து நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு நன்கு தயாராக இந்த இடைவெளி தேவைப்படுகிறது. அதற்கு இந்தத் தோல்வி உதவியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தோனிக்கு மிகப் பெரிய தோல்வி கிட்டியிருக்கிறது. போதிய ஓய்வு இன்றி இடைவிடாமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதோடு, அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாயிருப்பதே இத்தகைய தோல்விக்குக் காரணம் என்றும் கருதப்படுகிறது.
எனினும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், இவ்வளவு சீக்கிரம் படுதோல்வியடைந்து சென்னை அணி வெளியேறுவது மிகவும் துரதிருஷ்டவசமானது, இவ்வளவுக்கும் அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் ஆடினர் என்பது கவனிக்க வேண்டியது என்கிறார். சென்னை அணியில் உள்ள சுரேஷ் ரெய்னா, அஸ்வின் ஆகியோருக்கும் இந்தத் தோல்வி மூலம் இங்கிலாந்து தொடருக்கு தயாராவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆனால், கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணி, பெயருக்கு ஒரு வெற்றியைக் கூடப் பதிவு செய்யவில்லை. தோல்வி முகமாகத் திரும்பிய அணி, இப்போது இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment