Sunday, December 4, 2011

நான் செத்தால் மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன் இறந்துபோனதாய் சொல்வார்கள்! - ஹஸாரே

 ஊழலுக்கு எதிராக இப்போது நான் மேற்கொள்ளும் போராட்டத்தில் நான் இறந்தால் அரசாங்கம்தான் அதற்குப் பொறுப்பு. அப்படியே நான் செத்துப்போனாலும் மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன் இறந்துபோனதாய் மக்கள் சொல்வார்கள்," என்றார் அன்னா ஹஸாரே.

பாராளுமன்றத்தின் தற்போதைய குளிர் காலக் கூட்டத் தொடரில் வலுவான லோக்பால் மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். ஆனால்
அவர் கூறிய அம்சங்களை லோக்பால் மசோதாவில் மத்திய அரசு சேர்க்கவில்லை.

குறிப்பாக லோக்பால் வரையறைக்குள் கடைநிலை ஊழியர்களையும் கொண்டு வரவேண்டும் என்ற அவரது கோரிக்கை ஏற்கப்பட வில்லை. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை கண்டித்து அன்னாஹசாரே வரும் 27-ந் தேதி மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், உபி உள்ளிட்ட மாநில தேர்தல்களில் காங்கிரஸை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

டெல்லியில் நிருபர்களுக்கு இதுகுறித்து பேட்டியளித்தார் ஹஸாரே. அவர் கூறுகையில், "லோக்பால் மசோதா விஷயத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்ள வில்லை. எங்களிடம் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் மதிக்கப்படவில்லை. இது நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். 

லோக்பால் விசாரணை வரம்புக்குள் கடைநிலை ஊழியர்களையும் சேர்க்க முதலில் மத்திய அரசு சம்மதித்தது. இப்போது காங்கிரசார் பல்டி அடித்து விட்டனர். அவர்களுக்கு லோக்பால் மசோதா கொண்டு வர விருப்பம் இல்லை. எனவே தான் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் மூலம் லோக்பால் மசோதாவை கிடப்பில் போடும் திசை திருப்பும் முயற்சிகளில் ஈடு பட்டுள்ளனர். 

ராகுல் காந்தி தடுக்கிறார்

மத்திய அரசிடம் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. எந்த ஒரு முடிவும் உரிய நேரத்தில் எடுக்கப்படுவதில்லை. லோக்பால் விசாரணை வரம்புக்குள் கடை நிலை ஊழியர்களை சேர்க்கலாம் என்று நிலைக்குழு கூறி இருந்தது. ஆனால் திடீரென மத்திய அரசு பின்வாங்கி விட்டது. ராகுல்காந்தி தான் போன் செய்து லோக்பால் வரம்புக்குள் கடைநிலை ஊழியர்களை கொண்டு வர வேண்டாம் என்று கூறி இருப்பார் என்று நினைக்கிறேன்.

லோக்பால் வரம்புக்குள் கடைநிலை ஊழியர்களும் சேர்க்கப்படாவிட்டால், ராகுல்காந்திக்கு நாட்டு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். மன்மோகன் சிங் இரட்டை வேடம் போடுகிறார். அவரது செயல்கள் துரோகம் செய்வது போல உள்ளன. 

லோக்பால் அமைப்பு சுயாட்சி கொண்ட ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இன்று சி.பி.ஐ. அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. சி.பி. ஐ.யை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால் அதற்கு இந்த அரசுதான் பொறுப்பு. அப்படியே நான் செத்துப் போனாலும், மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன் செத்துப் போனான் என்றுதான் மக்கள் பேசுவார்கள்," என்றார் ஹஸாரே.(thatstamil)

No comments:

Post a Comment