பார் புகழும் தமிழகத்தின் மகுடத்தில் மேலும் ஒரு நவரத்தினக் கல்லை தூக்கி வைத்துள்ளது தமிழக அரசு. அதுதான் 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்து குடிமக்களுக்கு சர்வீஸ் செய்யலாம் என்பது.
தமிழகத்தின் பெருநகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களுக்கு மட்டும் இப்போதைக்கு இந்த உத்தரவு பொருந்தும். இந்த நகரங்களில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ஹோட்டல்களில் கூடுதல் சுங்க வரியைச் செலுத்தி விட்டு,
24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்து 'குடிமக்களுக்கு' மது விற்பனை செய்யலாமாம்.!
ஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூலம் அரசுக்கு எக்குத்தப்பாக வருவாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதை மேலும் அதிகரிக்கும் வகையில் 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைக்கும் அனுமதியை அளித்துள்ளது அரசு.
இதுதொடர்பான உத்தரவை சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் சுங்கத்துறை பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னை, திருச்சியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் வழக்கமான வரிக் கட்டணத்தை செலுத்தி விட்டு 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல மதுரை, கோவையில் உள்ள ஹோட்டல்களில் இரட்டிப்பு வரிக் கட்டணத்தை செலுத்தி விட்டு 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைக்கலாம்.
சென்னை, திருச்சிக்கு மட்டும் வழக்கமான கட்டணத்தை செலுத்த அரசு கூறியிருப்பதற்குக் காரணம், இங்கு அதிக அளவில் சர்வதேச பயணிகள் கூட்டம் இருப்பதால்தானாம். குறிப்பாக வெளிநாட்டினரை அதிக அளவில் ஈர்க்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
அதேசமயம், மேற்கண்ட நகரங்களைத் தவிர பிற நகரங்களின் ஹோட்டல்களில் உள்ள பப்களை தற்போது திறந்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது 11 மணி வரை மட்டுமே இவர்கள் பப்களை திறந்திருக்கலாம். இனிமேல் அதை 12 மணியாக்கி விட்டனர். அதாவது நள்ளிரவு வரை உற்சாக பானங்களை இங்கு விற்கலாம்.
அரசின் இந்தப் புதிய நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், பார்கள் நிர்வாகிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
நீதி: இதனால் குடிமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய நீதி என்னவென்றால், பாரை மூடி விடுவார்களே என்று அவசரம் அவசரமாக குடிக்கத் தேவையில்லை. நிதானமாக குடிக்கலாம். அதிகாலை 4 மணிக்கு வந்து கேட்டால் கூட தயங்காமல் சப்ளை செய்வார்கள்!.
சியர்ஸ்....!
No comments:
Post a Comment