Saturday, August 18, 2012

அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு?


 தமிழகத்தில், தி.மு.க.,விற்கே அதிகப்படியான சொத்துகள் உள்ளன. அதிகப்படியான வருவாய் உடைய கட்சியாகவும், அக்கட்சியே திகழ்கிறது. இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க., உள்ளது.

தமிழகத்தில், 1967ம் ஆண்டு முதல், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, இரண்டு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அதேநேரத்தில், இக்கட்சிகளின் வருவாயும், மற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும், அ.தி.மு.க.,வுடன் ஒப்பிடுகையில், தி.மு.க.,விற்கே, அதிகப்படியான வருவாய் கிடைத்துள்ளது. அதிகப்படியான சொத்துகளைக் கொண்ட கட்சியாகவும், தி.மு.க., திகழ்கிறது. இருந்தாலும், அ.தி.மு.க.,வும், தன் வருவாய் மற்றும் சொத்துகளை பெருக்கிக் கொண்டே செல்கிறது. இந்த இரு கட்சிகளின், வருமான வரி கணக்கு மற்றும் இருப்பு நிலை அறிக்கையின் அடிப்படையில், இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு: 2008-09ம் ஆண்டில், தி.மு.க.,வின் மொத்த ஆண்டு வருமானம், 16.81 கோடி ரூபாய். அதுவே, 2007-08ல், 2.66 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது ஒரு ஆண்டில், இந்தக்கட்சியின் வருவாய் 531 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து, தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் கூறுகையில், ""2007-08 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2008-09ம் ஆண்டில் வருவாய் அதிகரித்ததற்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து தேர்தல் நிதி வசூலித்ததே காரணம்,'' என்றார். தமிழகத்தில், 2011ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில், அமோக வெற்றி பெற்றதன் மூலம், அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட்டது. இதனால், 2011-12ம் நிதியாண்டில், அக்கட்சியின் வருவாய், 12.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து, வேட்பு மனு கட்டணமாக வசூலித்த தொகையால், வருமானம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த, 2010 -11ம் ஆண்டில், அ.தி.மு.க.,வின் வருவாய், 9.74 கோடி ரூபாய். வருவாய் கணக்கு சமர்ப்பித்துள்ள, இந்தக் கட்சிகள், கட்சிகளுக்கு நிதி வழங்கிய நபர்கள், அவர்கள் வழங்கிய தொகை போன்ற விவரங்களையும் சமர்ப்பித்துள்ளன. மேலும், சொத்துகளைப் பொறுத்தமட்டில், அ.தி.மு.க.,வை விட, அதிக சொத்துகளை கொண்ட கட்சியாக, தி.மு.க., உள்ளது. 2006-07ம் ஆண்டு முதல், 2011-12ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், தி.மு.க.,வின் மொத்த சொத்து மதிப்பு, 289.85 கோடி ரூபாய். இதே காலகட்டத்தில், அ.தி.மு.க.,வின் மொத்த சொத்து மதிப்பு 258.45 கோடி ரூபாய். அதேநேரத்தில், 2007-08 ம் ஆண்டில், 40.26 கோடி ரூபாயாக இருந்த அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு, 2009-10ம் ஆண்டில், 35.97 கோடி ரூபாயாக குறைந்தது. தற்போது அ.தி.மு.க., 55.83 கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, மற்றொரு திராவிடக் கட்சியான வைகோவின் ம.தி.மு.க., இந்த இரண்டு கட்சிகளை ஒப்பிடுகையில், குறைந்த வருவாய் கொண்டதாக உள்ளது. 2009-10ம் ஆண்டில், இக்கட்சிக்கு கிடைத்த வருவாய் 5.58 கோடி ரூபாய். ஆனால், 2008- 09ம் ஆண்டில் 70 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. விஜயகாந்தின் தே.மு.தி.க., 2011-12ம் ஆண்டில் மட்டுமே, வருவாய் விவரங்களை சமர்ப்பித்துள்ளது. அதில், 79 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இக்கட்சியின் மொத்த சொத்து மதிப்பு, 4.44 கோடி ரூபாய். ஆனாலும், சொத்துகள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. அதுபோல், ம.தி.மு.க.,- பா.ம.க.,வின் சொத்துகள் பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment