Sunday, September 23, 2012

பவர்கட் குறைஞ்சிருச்சாம்: என்னதான் சொல்ல வருது மின்சார வாரியம்?


அறிவிக்கப்பட்ட மின்தடையை விட அறிவிக்கப்படாத மின்சாரத்தடை அதிகரித்துள்ள நிலையில் வெளிமாநில மின்சார வரத்து குறைந்ததால் ஏற்பட்ட 10 மணி நேர மின்தடை, பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டது என்று மின்சார வாரியம் தெரிவித்தது. வழக்கம்போல பருவமழை மீது பழியை போட்டும், காற்றாலைகள் காலை வாரிவிட்டன என்றும் உப்பு சப்பற்ற அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது மின்சார வாரியம்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் தற்போதைய மின்தேவை 11,500 மெகாவாட் முதல் 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைவாக இருப்பதால் புனல் மின்நிலையங்கள் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவும் மிகவும் குறைந்துள்ளது. மேலும் மத்திய மின் தொகுப்பிலிருந்து பெறப்படும் தமிழ்நாட்டின் பங்கான 2,950 மெ.வா. 1,100 மெகா வாட் அளவுக்கு குறைந்து 1,850 மெகாவாட் மட்டுமே பெறப்படுகிறது. இவை அனைத்தும் தமிழகத்தின் மின் நிலைமையை வெகுவாக பாதித்து உள்ளது.
கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவில், ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருந்தது. காலை நேரங்களில் மிகவும் குறைந்தும், மாலை நேரங்களில் சற்றே அதிகரித்தும் காற்றாலை மின்சாரம் பெறப்பட்டது. கடந்த 19-ந் தேதி காலை காற்றாலை மின்சாரம் எதிர்பாராத அளவில் 100 மெகாவாட்டாக குறைந்தது.
மேலும் கடந்த 17-ந் தேதி முதல் மத்திய ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டமைப்பு இயக்க விதிகளை கடுமையாக அமல்படுத்தியுள்ளது. மின் அதிர்வெண் 49.8க்கு கீழ் இருக்கும் பட்சத்தில் மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரம் பெறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மின் கட்டமைப்பு பாதுகாப்பு கருதியும் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு அவ்வப்போது குறையும் நேரங்களில் கூடுதலாக மின்தடை செய்ய நேரிடுகிறது.
வெளிமாநிலங்களிலிருந்து சுமார் 1,200 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய உத்தரவு அளித்திருந்தும் மத்திய மின் கட்டமைப்பு கழகம் பிற மாநிலங்களிலிருந்து போதிய அளவு மின்பாதை அமைக்காத நிலையில் 1000 மெகாவாட் அளவிற்கு தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிடைக்கப் பெறவில்லை.
மேற்கூறிய காரணங்களினால் கடந்த 19-ந் தேதி அன்று தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் 8 முதல் 10 மணி நேரமும் சென்னையில் ஒரு மணி நேரமும் மின்தடை செய்ய நேரிட்டது. எனினும் மாலை 4 மணி முதல் காற்றாலையிலிருந்து பெறப்பட்ட மின்சார அளவு அதிகரிக்க ஆரம்பித்ததும் மின்தடை நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. எனினும் நடைமுறையிலுள்ள மத்திய மற்றும் மாநில புதிய மின்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது தமிழ்நாட்டின் மின்நிலைமை சீரடையும்.
இவ்வாறு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
12 மணி நேர மின்தடை
கடந்த 19 ம் தேதிமுதல் தமிழ்நாட்டில் மின்தடை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக மின்சார வாரியம் கூறி வருகிறது. ஆனால் கடந்த 18ம் தேதி முதலே சென்னைத் தவிர தமிழ்நாடு முழுவதும் காலை 5.30 மணி தொடங்கி 9 மணி வரையிலும், 12 மணி தொடங்கி 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 9 மணி முதல் 10 மணிவரையிலும் நள்ளிரவில் 12 முதல் 1 மணி வரையிலும், 3 முதல் 4 மணி வரையிலும் மொத்தம் 12 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
இது இவ்வாறு இருக்க மின்சாரம் தடை செய்வதற்கு காற்றாலை உற்பத்தி குறைந்து போனதே காரணம் என்று காற்றாலைகள் மீது பழியை போட்டுவிட்டு மின்சார வாரியம் தப்பிக்க நினைப்பதாக காற்றாலைகள் சங்கத்தலைவர் கஸ்தூரி ரெங்கையன் கூறியுள்ளார்.
ஆனால் மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின்நிலையம், புனல் மின் நிலையம் உட்பட பல்வேறு மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 60 மில்லியன் யூனிட்டாக இருந்த மின்உற்பத்தி, தற்போது 45 மில்லியன் யூனிட்டாக குறைந்து விட்டது. அதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மேலும் மத்திய தொகுப்பிலிருந்து மின்பங்கீடும் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் 10 நாட்களுக்குதான் காற்று வீசும், அதற்கு பிறகு காற்றாலைகள் மின் உற்பத்தி இருக்காது. மின்தடை நேரம் அதிகரிக்க காரணம் என்ன என்று பொதுமக்கள் மின்வாரியத்தை கேட்டால், உடனடியாக காற்றாலைகளில் மின்உற்பத்தி குறைந்து விட்டது என்று காற்றாலைகள் மீது வீண்பழியை போடுகின்றனர் என்றும் அவர் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்.
source

1 comment:

  1. எங்கள் ஊரில் ஆறு மணி நேரம் தான் மின்சாரம் இருக்கிறது...

    ReplyDelete