Tuesday, September 11, 2012

செஞ்சுரி அடித்தது தமிழ் சினிமா...!

 தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு திரைப்படங்களின் வருகை டாஸ்மாக் சரக்கு விலை போல் மளமளவென உயர்ந்திருக்கிறது. காவிரியில் தண்ணீர் பொய்த்தாலும் கோடம்பாக்கத்தில் சினிமா பொய்ப்பதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. இந்த ஆண்டு விநாயாக என்ற படத்துடன் செண்டிமெண்டாக தமிழ் சினிமா கணக்கை துவக்கியது. ஆகஸட் 31 முகமூடி வரையில் 100 படங்களை வெளியிட்டு செஞ்சுரி அடித்தது. இந்த ஆண்டு முடிய இன்னும் 4 மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இதே வேகத்தில் படங்கள் வெளிவந்தால் நேரடி தமிழ் படங்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டும். இது எந்த ஆண்டும் இல்லாத சாதனை அளவாக இருக்கும்.

சரி, வெளியான இந்த 100 படங்களை கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணி பார்ப்போமா. 100 படங்களில் வசூலிலும், வெற்றியிலும் முதல் இடத்தை பிடிக்கிறது ஒரு கல் ஒரு கண்ணாடி. 150 நாட்களை கடந்துவிட்டிருக்கிறது. தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. தயாரிப்பாளரும், ஹீரோவுமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி சந்தோஷத்தில் இருந்து இன்னும் வெளியில் வரவில்லை.

அடுத்த சூப்பர் ஹிட் நான் ஈ. தெலுங்கு, தமிழில் தயாரான இந்தப் படம் 40 கோடியில் தயாரானது. தமிழ்நாட்டில் மட்டும் 15 கோடியை அள்ளியது. தெலுங்கில் 75 கோடி என்கிறார்கள். எல்லா மொழிகளிலுமாய் சேர்த்து 100 கோடியை தாண்டியது இதன் வசூல் கார்பரேட் நிறுவனமான பி.வி.பி சினிமாவை மகிழ்ச்சியோடு அடுத்தடுத்த தயாரிப்புகளில் குதிக்க வைத்திருக்கிறது. இதில் நடித்த வில்லன் சுதீப்பிற்கும், இயக்குனர் ராஜமவுலிக்கும் தமிழ் நாட்டில் தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. இருவரின் பழைய படங்களை தூசி தட்டி எடுத்து டப்பிங் செய்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாஸ்கோவின் காவிரி, பாணா கத்தாடி  படத்தோடு தெலுங்கு பக்கம் துரத்தியடிக்கப்பட்ட சமந்தா மீண்டும் கவனிக்கப்பட்டிருக்கிறார்.

அடுத்து வேட்டை. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆர்யா, அமலா பால், மாதவன், சமீரா ரெட்டி நடித்தனர். அடிமேல் அடிவாங்கும் யுடிவி நிறுவனத்துக்கு கிடைத்த சின்ன ஆறுதல், வேட்டை வெற்றி. இதை அப்படியே இந்திக்கும் லவட்டிக் கொண்டு போகிறார்கள். பெரும் லாபம் சம்பாதிக்கவில்லை என்றாலும் வேட்டை வெற்றிப் படம் என்பதில் சந்தேகமில்லை.

நான்காவது இடத்துக்கு வருகிறது நண்பன். இந்தி 3 இடியட்ஷை ஷங்கர் தமிழில் நண்பனாக தந்தார். ஷங்கர் இயக்கிய முதல் ரீமேக் படம். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள் இணைந்து நடித்து ஆரோக்கியமான ஒரு பார்முலாவை துவக்கி வைத்தார்கள். பெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை தரவில்லை.

இவை தவிர சின்ன பட்ஜெட்டில் தயாராகி பெரிய லாபத்தை கொடுத்த படங்கள் சில உண்டு. மெரீனா ஒரு கோடியில் தயாரிக்கப்பட்டு 3 கோடி லாபம் சம்பாதித்த படம். அம்புலி என்ற 3டி படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்றது. 2 கோடியில் தயாரான படம் 4 கோடியை ஈட்டியது. சுந்தர் சி. இயக்கிய கலகலப்பு கலர்புல்லாக ஓடி லாபத்தை அள்ளியது. அட்டக்கத்தி சிறு மூதலீட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது. காதலில் சொதப்புவது எப்படி, ஏ செண்டர்களில் கலெக்ஷனை அள்ளியது. மனம் கொத்தி பறவை பி மற்றும் சி செண்டர்களில் லாபத்தை ஈட்டியது.

முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் சுமாராக ஓடினாலும். படத்தின் பட்ஜெட்டை நேர் செய்யவில்லை. வழக்கு எண் 18/9  இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. ஆனால் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு பெரும் லாபத்தை தரவில்லை. நஷ்டத்தையும் தரவில்லை. இதேபோல கழுகு படமும் பட்ஜெட்டை நேர் செய்தது. உருமி படம் மலையாளத்தில் பெறாத அங்கீகாரத்தை தமிழில் பெற்றது. 50 நாட்கள் வரை ஓடியது. படத்தின் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு பார்க்கும்போது லாபத்தை தரவில்லை. நான் படம் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியை நல்ல நடிகராக அடையாளம் காட்டியது. ஆனால் தயாரிப்பாளராக அடையாளம் காட்டவில்லை.

பச்சை என்கிற காத்து, ராட்டினம், கிருஷ்ணவேணி பஞ்சாலை, மதுபான கடை படங்கள் மீடியாக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் லாபம் சம்பாதிக்கவில்லை.

வசந்தபாலன் இயக்கிய அரவான், பிரகாஷ்ராஜ் இயக்கிய தோணி, ரஜனி மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3, கார்த்திக் நடித்த சகுணி, மிஷ்கின் இயக்கிய முகமூடி, அஜீத் நடித்த பில்லா 2, ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கிய வயது 18 ஆகிய படங்கள் ரசிகர்களை ரொம்பவே எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது.

இந்த படங்கள் தவிர மீதமுள்ள படங்கள் ஒருவாரம்கூட தாக்கு பிடிக்காமல் ஓடின. சில படங்கள் முதல் நாளே தியேட்டரை காலி செய்தன. பக்காவாக லாபம் சம்பாதித்த டாப்-10 படங்களை பட்டியலிட்டால் அது இப்படித்தான் இருக்கும்.

1.ஒரு கல் ஒரு கண்ணாடி
2.நான் ஈ
3.வேட்டை
4.நண்பன்
5.அம்புலி
6.கலகலப்பு
7.காதலில் சொதப்புவது எப்படி
8.மெரீனா
9.அட்டக்கத்தி
10.மனம் கொத்தி பறவை.


கூட்டி கழித்துப் பார்த்தால் தமிழ் சினிமா இந்த ஆண்டின் முதல் செமஸ்டரில் 100க்கு 10 மதிப்பெண்களே பெற்றுள்ளது.

(குறிப்பு: படங்களின் பட்ஜெட், தயாரிப்பாளர் ஏரியாவிலும், வசூல் விநியோகஸ்தர் ஏரியாவிலும் விசாரித்து அறிந்தவையே ஆதாரபூர்வமானவை அல்ல)
source

No comments:

Post a Comment