Tuesday, October 12, 2010

இன்றைய தினமணி தலையங்கம்-உங்கள் பார்வைக்கு

 தலையங்கம்: குதிரைகள்... பேரங்கள்...

First Published : 12 Oct 2010 01:09:45 AM IST

முடியாட்சி, சர்வாதிகாரம், ராணுவ ஆட்சி என்று பல்வேறு ஆட்சிமுறைகளை அனுபவபூர்வமாகப் பார்த்துத் தெளிந்து ஏற்படுத்தப்பட்டதுதான் மக்களாட்சி முறை. பெருவாரியான மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் இந்த ஆட்சிமுறையில் ஏனைய ஆட்சிகளில் உள்ள தனிமனிதத் தான்தோன்றித்தனங்கள் இருக்காது என்பதால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் பல உலக நாடுகள் மக்களாட்சி முறையைத் தேர்ந்தெடுக்க முற்பட்டிருக்கின்றன.
 உலகிலேயே இந்த அளவுக்கு மக்கள்தொகையுள்ள எந்தவொரு நாடும் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாட்சி முறையைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பதை இந்தியாவின் மிகப்பெரிய பெருமையாக நாம் கருதி வருகிறோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மக்களாட்சி என்கிற பெயரில் அரங்கேறும் அநாகரிகமான செயல்பாடுகளைப் பார்க்கும்போது, இப்படியே தொடர்ந்தால் மக்களுக்கு இந்த ஆட்சி முறையின் மீதே வெறுப்பு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் மேலெழுகிறது.
 ""பதவி என்பது தோளில் போட்டுக்கொண்டிருக்கும் துண்டு போன்றது. அதை உதறுவதில் தயக்கம் இருக்கக் கூடாது'' என்று சொன்ன தலைவர்கள் முன்னோடிகளாக இருந்து வழிகாட்டத்தான் செய்தார்கள். ""அரசியல் என்பதே மக்களுக்குத் தொண்டாற்றத்தான். அவர்களுடன் அவர்களைப்போல வாழ்ந்து, அவர்களது கஷ்டநஷ்டங்களில் பங்கு கொண்டு, அவர்களது வாழ்வை மேன்மைப்படுத்துவதுதான் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் கடமை'' என்று அறிவுறுத்தியதுடன் அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் காந்தியடிகளை தேசப்பிதாவாகக் கொண்ட நாடு இது.
 இந்தச் சிந்தனையெல்லாம் மனத்திரையில் ஓடுகிறது. கண் முன்னாலோ, தொலைக்காட்சிப் பெட்டித் திரையில் கர்நாடகத்தில் நடக்கும் மக்களாட்சிக் கூத்து ஓடுகிறது. இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்? இதுதானா மக்களாட்சியின் மகத்துவம்? ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், ஆட்சியைக் கவிழ்த்துத் தாங்கள் பதவியைக் கைப்பற்றவும் தெருநாய்களைவிட மோசமாகச் சண்டை போட்டுக் கொள்ளும் இந்த அரசியல்வாதிகளின் கையிலா இந்த நாட்டின் வருங்காலம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது?
 பதவி என்பதே சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வழியாகவும், ஆட்சி, அதிகாரம் என்பதே மக்கள் வரிப்பணத்தில் படாடோப வாழ்க்கை வாழவும், சமூகவிரோதிகளுடன் கைகோத்துக் கொண்டு நாட்டாமை செய்வதும் என்று ஆகிவிட்ட பிறகு நடப்பது மக்களாட்சியாக இருந்தால் என்ன வேறு எந்தமுறை ஆட்சியாக இருந்தால்தான் என்ன என்கிற சலிப்பு சராசரி குடிமகனுக்கு ஏற்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
 தனது அரசுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்பதும், பாஜக உறுப்பினர்கள் 11 பேரும், சுயேச்சை உறுப்பினர்கள் 5 பேரும் எதிரணியில் சேர்ந்து விட்டார்கள் என்பதும் தெரிந்த பிறகும் முதல்வர் எடியூரப்பா பதவியில் நீடிக்க ஏன் பிரம்மப் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும்? ஆளுநர் சட்டப்பேரவையைச் சந்தித்துப் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோருகிறார். துணிந்து சட்டப்பேரவையைச் சந்தித்து, வாக்கெடுப்பு நடத்தி வெற்றியோ, தோல்வியோ, துணிவுடன் எதிர்கொண்டிருந்தால், அவரது மதிப்பும், மரியாதையும் இமயமாக உயர்ந்திருக்குமே... குறுக்கு வழியில் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றதே தவறல்லவா...
 சட்டப்பேரவையில் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்காத வரையில் 11 பாஜக உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்ய, எந்தவித விதிமுறையும் இருப்பதாகத் தெரியவில்லை. அது போகட்டும். சுயேச்சை உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்வதா? ஏன், எதற்காக? அவைத் தலைவர் என்றால் என்ன முடிவை வேண்டுமானாலும் எடுப்பதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைச் சட்டப்பேரவைக்குள் நுழையவிடாமல் காவல்துறையினரை வரவழைத்துத் தடுப்பதா? இதை மக்களாட்சியின் மகத்துவம் என்று சகிப்பதா?
 ஆளுநரின் வழிகாட்டுதல்படி, கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் கே.ஜி. போப்பையா அவையைக் கூட்டி முறையாக வாக்கெடுப்பு நடத்தாமல், 16 உறுப்பினர்களை, சபை கூடுவதற்கு முன்பே பதவி நீக்கம் செய்து, அவைக்குள் அனுமதிக்காமல் தடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் அரசின்மீது நம்பிக்கை இருப்பதாக அறிவித்தது, அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல். என்ன செய்வது? இவரது அடாவடித்தனத்தைத் தண்டிக்க நீதிமன்றத்துக்குக்கூட அதிகாரம் கிடையாது என்கிறதே நமது அரசியல் சட்டம்!
 எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை அதைவிட மோசம். ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு காங்கிரஸின் பின்துணையுடன் மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமி மேற்கொண்ட நடவடிக்கைகள், ஓர் அரசியல்வாதி எந்த அளவுக்குத் தரம்தாழ்ந்து செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு. மக்கள் செல்வாக்குடன் ஆட்சியைப் பிடிக்க முடியாதவர்கள் பணபலத்தால் ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என்கிற தவறான முன்னுதாரணத்தைக் கர்நாடகம் குமாரசாமி மூலம் உணர்த்தியிருக்கிறது.
 அரசியல்வாதிகள் ஆளுநராக நியமிக்கப்படும்போது, "எப்போது ஆட்சி கவிழும்? குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டு அதிகாரம் நமக்குக் கிடைக்கும்?' என்று எதிர்பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நிச்சயமாக, முன்னாள் மத்திய சட்ட அமைச்சராக இருந்த இன்றைய கர்நாடக ஆளுநர் பரத்வாஜ், சட்டப்பேரவையைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிகோல மாட்டார். ஆட்சியைக் கலைத்து, ஆளுநர் ஆட்சி சில மாதங்கள் தொடர்ந்து, குதிரைப் பேரங்கள் நடந்து காங்கிரஸýக்குச் சாதகமான ஆட்சி அமையும்வரை கர்நாடக சட்டப்பேரவை தொங்கு நிலையில் தொடரும் என்று நம்பலாம்.
 ஆளுநர் ஆட்சியில் என்ன கொள்ளை நடந்தாலும், கேள்வி கேட்க ஆளிருக்க மாட்டார்கள். ஆட்சிப் பொறுப்பில் இல்லாமலே, ஆளுநர் ஆட்சியில் ஆளும் கட்சியாகக் காங்கிரஸ்காரர்கள் செயல்படுவார்கள். மணல் கொள்ளை நடப்பதுபோல மக்கள் வரிப்பணம் கொள்ளை போகும். அதிகாரிகள் காட்டில் அடைமழை. வேறென்ன!
 நமது அரசியல்வாதிகள் நடத்தும் பதவிப் போராட்டங்கள் மக்கள் மத்தியில் மக்களாட்சி பற்றிய நம்பிக்கையைத் தகர்க்கின்றன. கட்சிகள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப்போவதில்லை. தவறானவர்களைத் தேர்ந்தெடுத்த குற்றம் மக்களுடையது. தன்வினை தன்னைச் சுடும் என்பதை மக்கள் உணர வேண்டும்.

No comments:

Post a Comment