Monday, December 13, 2010

புது வரலாறு படைத்தது பார்லிமென்ட்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, எம்.பி.,க்கள் மேற்கொண்ட தொடர் அமளியால், புது வரலாறு படைத்தது பார்லிமென்ட். 22 நாட்கள் நடந்த கூட்டத் தொடரில், ஒரு நாள் கூட
சபைகள் முழுமையாக நடக்காமல், தினமும் ஒத்திவைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர், கடந்த நவம்பர் 9ம் தேதி துவங்கியது. 23 அமர்வுகள் கொண்ட இந்தக் கூட்டத் தொடரில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியில் அமளியில் ஈடுபட்டன.தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராஜா, ராஜினாமா செய்தால் மட்டும் போதாது, மோசடி குறித்து பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தின. இதற்கு ஆளுங்கட்சியினர் சம்மதிக்கவில்லை."ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் விவாதிக்கத் தயார். ஆனால், பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைப்பதால் எந்தப் பலனும் இல்லை. இந்த முறைகேடு பற்றி பொதுக்கணக்குக் குழு ஆய்வு செய்தாலே போதுமானது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பினரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், இந்த குளிர்காலக் கூட்டத் தொடரின் போது, ஒவ்வொரு நாளும் சபைகள் கூடுவதும், அமளி நிகழ்வதும், பின்னர் சபைகளை ஒத்திவைப்பதும் தொடர்ந்தது.

மொத்தம் 22 நாட்கள் சபைகள் கூடியும், ஒரு நாள் கூட இரு சபைகளும் முழுமையாக நடக்கவில்லை. இதன்மூலம், எம்.பி.,க்கள் அமளியால் ஒரு நாள் கூட சபைகள் நடக்காமல் முழு கூட்டத் தொடரும் காலியாகியுள்ளது. மொத்தமுள்ள 23 அமர்வுகளில் லோக்சபா ஏழரை மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. 124 மணி நேரம் மற்றும் 40 நிமிடம் அமளி மற்றும் ஒத்திவைப்பால் வீணடிக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தால் ஏற்பட்ட பார்லிமென்ட் முட்டுக் கட்டை நிலைமையை முடிவுக்கு கொண்டுவர, அரசு தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் பல முறை கூடிப் பேசியும் எந்தப் பலனும் இல்லை. கடந்த 2001ல், தெகல்கா மோசடி விவகாரம் எழுந்த போது, பார்லிமென்ட் தொடர்ந்து 17 நாட்களாக செயல்படாமல் இருந்தது. அதற்கு முன், 1996ல், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சுக்ராமின், டில்லி மற்றும் மாண்டி வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியது தொடர்பாக, பா.ஜ., வினர் நடத்திய அமளியால், 13 நாட்கள் சபை நடக்காமல் தடைபட்டது.இதைத் தொடர்ந்து 1987ல், போபர்ஸ் பீரங்கிபேர ஊழல் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்த அமளியால், தொடர்ந்து 45 நாட்கள் சபை செயல்படாமல் இருந்துள்ளது. அதுபோல தற்போதும் நிகழ்ந்துள்ளது.

ராஜ்யசபாவை நேற்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த சபைத் தலைவர் அமீது அன்சாரி, ""சபையின் 221வது கூட்டத் தொடரில் விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்களை தற்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுநலன் தொடர்பான எந்த விவாதங்களும் இந்தக் கூட்டத் தொடரின் போது சபையில் நடக்கவில்லை. சிறப்புத் தீர்மானங்கள் எதுவும் சபையில் தாக்கல் செய்யப்படவில்லை. பூஜ்ய நேரமும், கேள்வி நேரமும் முறையாக நடக்கவில்லை. துணைக் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை,'' என்றார்.

ஒரு நாள் கூட பார்லிமென்ட் நடக்காதது குறித்து, லோக்சபா சபாநாயகர் மீரா குமார், சபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், ""நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன்,'' என்றார்.

குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் பார்லிமென்டின் இரு சபைகளும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டாலும், 46 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்பான துணை மானிய கோரிக்கைகள் மட்டுமே சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது மட்டுமே ஆறுதலான விஷயம். ஸ்பெக்ட்ரம் மோசடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க ஊழல் போன்றவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்திய அமளி மற்றும் ஒத்திவைப்பால், 100 மணி நேரத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜ்யசபா செயலகம் கூறியுள்ளது. அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் கூட சபையில் விவாதிக்கப்படவில்லை.

"இருதரப்பும் ஏற்கும் தீர்வு தேவை' : ""ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் முழுமையாக வீணடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலைமை பட்ஜெட் கூட்டத் தொடரிலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஏற்கத்தக்க ஒரு தீர்வை காண வேண்டும்,'' என, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அந்தக் கூட்டத் தொடரிலும் முட்டுக்கட்டை நிலைமை தொடர்ந்தால், அதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என, ஆளுங்கட்சியினர் எச்சரித்துள்ளனர். பட்ஜெட் நிறைவேறவில்லை எனில், அரசியல்சட்ட ரீதியான நெருக்கடிகள் உருவாகும்.தற்போதைய கூட்டத் தொடரின் நிலைமை பட்ஜெட் தொடரிலும் நிகழக்கூடாது என, விரும்புகிறேன். அந்தத் தொடர் சுமுகமாக நடக்கும் என, நம்புகிறேன்.இவ்வாறு மீரா குமார் கூறினார்.

இதற்கிடையில், பார்லிமென்ட் ஒரு நாள் கூட நடக்காமல் போனது குறித்து நிருபர்களிடம் பேசிய மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பன்சால், ""இடதுசாரிகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அரசை கவிழ்க்க பா.ஜ.,வினர் முற்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்தும் வகையில் பா.ஜ., பிரசாரம் செய்கிறது. எதற்கெடுத்தாலும் பார்லிமென்ட் கூட்டுக்குழு வேண்டும் என, கேட்கிறது.""ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை தேவை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தைரியம் இல்லாத பா.ஜ.,வினர், அரசை கவிழ்க்க இதுபோன்ற வழிகளைக் கையாள்கின்றனர்,'' என்றார்

No comments:

Post a Comment